தமிழர்தம் உள்ளங்களிலும், இல்லங்களிலும் பொங்கட்டும் புரட்சிப்பொங்கல்! – சீமான் வாழ்த்து

251

தமிழர்தம் வாழ்வில் புத்துலகம் பிறக்கிற இந்தப் புத்தாண்டு நாளில் உள்ளங்களிலும், இல்லங்களிலும் பொங்கட்டும் அநீதிக்கு எதிரானப் புரட்சிப்பொங்கல்! – சீமான் வாழ்த்து

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் 
தொழுதுண்டு பின்செல் பவர்.
-தமிழ் மறை

உழவுசெய்து உலகிற்கே உணவளிக்கும்தெய்வங்களாக விளங்குகின்ற உழவர் பெருமக்களின் திருநாளாக வரலாற்றுப் பெருவெள்ளத்தில் புதைந்து தமிழ்த்தேசிய இனத்தின் பண்பாட்டு விழுமியங்களை போற்றிக் கொண்டாடுகிற பெருவிழாவாகவும் நம் இன்னல் அகற்றி பகலாய், இரவாய், மழையாய், தனலாய்,காற்றாய், நதியாய், நிலமாய், நிலவாய்,பனியாய் என நம்மை வாழ வைத்து நம்மோடு இயைந்திருக்கிற காலத்தின் பெரும்படைப்பான இயற்கையை நம் இதயத்தில் நிறுத்தி இன்முகத்தோடு போற்றி வணங்குகிற திருவிழாவாகவும், வரலாற்றுப் பெருமைகள் பல நிறைந்த தமிழ்த்தேசிய இனத்தினுடைய ஆண்டுக்கணக்கின் முதல் நாளாகவும், தை மகள் பிறந்து தரணியெங்கும் செழித்து நஞ்சையும், புஞ்சையும் செழித்து வளர்ந்து உலகத்திலுள்ள மாந்தர்க்கெல்லாம், உணவளித்து பசியென்னும் பிணிநீக்கி பிறந்த வாழ்வின் பொருள்தனை நமக்கு நாமே உணர்ந்துகொள்ளும் உளவியல் மீளெழுச்சி திருவிழாவாகவும்கொண்டாடப்படுகிறப் பொங்கல் பண்டிகையே தமிழரின் திருநாள்.

மானுடச்சமூகத்தின் மூத்தக் குடியாம் தமிழ்க்குடி ஆதி அந்த எல்லைகளுக்கு அப்பாற்பட்டு வேரின்நுனி கண்டறிய முடியா பழம்பெருமை கொண்ட வரலாற்றுப் பேரினமாகும்; நதிக்கரைகளே நாகரீகத்தின் தொட்டிலாய் வளர்ந்தக் காலக்கட்டத்தில் தமிழன் மட்டுமே மழையில் தோன்றி கடலில் கலக்கும் நதியை இடைமறித்து, ஆற்றுநீரை உழவிற்கும் பயன்படுத்த முடியும் என்றுகல்லணைக்கட்டி உலகிற்குக் கம்பீரமாக உரைத்தான். ஒருதாய் வயிற்று மக்களானசேரனும், சோழனும், பாண்டியனும் வீரத்தையும், மானத்தையும் நிலைநாட்டி உலக மாந்தரையெல்லாம் ஒரே குடையின்கீழ் ஆண்டு வரலாற்றுப் பெருமிதங்களாக நம் ஆன்மாவில் திளைக்கிறார்கள். வரலாற்றுப்பெருமிதம் வாய்ந்த தமிழர் வாழ்வு இடையே ஏற்பட்ட தலையீடுகளால் தரம்தாழ்ந்து, முகமிழந்து, முகவரியற்று முனங்கித் திரிகிறது. வேர்வையை உதிரமாகச் சிந்தி, உலகின் வயிற்றுக்குச் சோறிட்ட தமிழன் இன்று எலிக்கறி தின்று தாய்நிலத்தில் தலைகுனிய நிற்கிறான். பாருக்குச் சோறிட்ட விவசாயி, இன்று நியாய விலைக்கடைக்கு முன் இலவச அரிசி கிடைக்காதா என ஏங்கி நிற்கிறான்.

உள்ளங்கை நிலமிருந்தாலும் உழைத்து வாழ்ந்து உன்னதவாழ்வு நடத்திய தமிழ் வேளாண்ப்பெருங்குடி மக்கள் இன்று நிலத்தை மனைப்பிரிவாக மாறக் கொடுத்துவிட்டு, கந்துவட்டிக் கடைக்கு முன் கைகட்டி கடனாளியாக நின்று கொண்டிருக்கின்றனர்; வாங்கியக் கடனை அடைக்க முடியாமல் மணலும், நீரும் கொள்ளைப் போன கட்டாந்தரை ஆற்றில் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து செத்து விழுகின்றனர். தூக்கில் தொங்கினாலும்,கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்தாலும் கேட்பதற்கு நாதியற்ற இனமாய், காசுக்கும், மதுவுக்கும் விலைபோய் வாக்கை விற்றுவிட்டு உரிமை எனும் உயிரை விற்ற பிணமாய் மாறிப்போனது எம்மினம். நாற்றாங்கால் விட நதியுமில்லை; வயலுக்கு நடுவே ஓடும் வாய்க்காலும் இல்லை; விதிவிட்டபடி என எண்ணி நெஞ்சுக்குள் குமைந்து, வேட்டியையே சுருக்காய் மாற்றிக் கிணற்றில் தொங்குகிறான் கடவுளுக்கும், மனிதனுக்கும் ஒருசேர உணவு படைத்த உழவன். எது சொல்லியும் ஆறாத ரணமாய் விடிந்தும் இருள் விலகாத துயரமாய் இன்னமும் நெஞ்சுக்குள்ளே விக்கித்துக் கிடக்கிறது தமிழரின் சொல்லி மாளாத பெருந்துயர் கதை.

வீட்டின் மூத்தப்பிள்ளையாய் வளர்த்து,குளிக்க வைத்துக்கொண்டாடி சீராட்டி வளர்த்த எம் மாட்டை தழுவுவதை மிருகவதை எனச் சொல்லி மிரட்டிப் பார்க்கிறது பன்னாட்டுச் சதிக்குத் துணைபோன இந்திய வல்லாதிக்கம். வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் எம் மாடுகளை அடிமாடாகமாற்றத் திட்டம் தீட்டி, கட்டம் காட்டி எம்மை முடக்க நினைக்கிறது ஒரு கூட்டம். இனியாவது இருள் விலகாதா? வீழ்ந்த உழவு மீண்டும் உயராதா? காய்ந்த பயிர் மீண்டும் துளிர்க்காதா? நதிக்கரையோரங்கள் மீண்டும் நனையாதா? பயிர் சாக உயிர்சாகும் உழவர் வாழ்வு மீண்டும் செழிக்காதா? எகிறிக் குதிக்கும் காளைகள் இல்லாமல் வாடி நிற்கும் வாடிவாசலில் வாட்டம் போகாதா? என்று ஏங்கிக் கனவுகொள்ளும் தமிழரின் வாழ்வில் இதோ நம்பிக்கையாய் சில வெளிச்சத்தெறிப்புகள். சாதி, மத அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்டு தமிழனாய் வீதியில் திரளத் தொடங்கியிருக்கும் தமிழின இளையோர் விழிகளில் சுடர்விடும் ஒளித்துளி நமக்கு நம்பிக்கை உயிர்த்துளியாக உவகை அளிக்கிறது.

பத்து மைலுக்கு அப்பால் செத்து விழுந்த சொந்தச் சகோதரனின் சாவுக்குக்கூட சங்கடம் காட்டாது சலிப்புடன் எழுந்து நின்ற தாயகத்தமிழன் தற்போது தலைநிமிரத் துடிப்பதுவே இந்தத் தமிழ்ப்புத்தாண்டின் நம்பிக்கைக் கீற்றாக அமைந்திருக்கிறது. என் தாய்மண்ணை குழைத்து செய்த மண்பானையில் திரளத் தொடங்கிவிட்டது புது நுரை. கடந்த கால இழிவுகளில் இருந்து, அழிவுகளில் இருந்து தன்னைத் தானே மீட்டெடுத்து தன்னைத் தமிழர் என உணர்கிற இப்பெருநாளில்,தடைகளை உடைத்து தமிழின இளையோர் திமிலில் தழுவ காளைகள் பாயும்! தமிழர்தம் வாழ்வில் புத்துலகம் பிறக்கிற இந்தப் புத்தாண்டு நாளில் அநீதிக்கு எதிராக, சாதி மத வேறுபாடுகளுக்கு எதிராக, தமிழர்தம் உரிமையை மறுத்தெழும் தடைகளுக்கு எதிராக, பாலியல், வர்க்கச் சுரண்டலுக்கு எதிராக, தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக, அரசியல் பிழைப்புத்தனங்களுக்கு எதிராக, சுயநல அரசியல், ஊழல் இலஞ்சத்திற்கு எதிராக உங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் பொங்கட்டும் புரட்சிப்பொங்கல்!

உலகத்தமிழர் அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!   

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.