ஏறு தழுவுதலுக்காக ஆதரவாகக் குரலெழுப்பிய திரையுலகினருக்கும், இளையோர் கூட்டத்திற்கும் சீமான் வாழ்த்து!
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்த்தேசிய இனத்தின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தமிழக மாணவர்கள், தமிழின இளையோர் நடத்திவருகிற தன்னெழுச்சியான போராட்டங்கள் தமிழ்த்தேசிய இனத்தின் எதிர்காலம் குறித்த பெருத்த நம்பிக்கையினைத் தருகிறது.
நீண்டகாலமாக அடக்கி ஒடுக்கப்பட்டு அடிமை இனமாக தாழ்ந்து வீழ்ந்துக் கிடக்கிற தமிழ்த்தேசிய இனத்தின் எழுச்சிக்கான காலம் வெகுதொலைவில் இல்லை என்பதனை வீதிகளில் திரளும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் உறுதிசெய்துவருகிறார்கள். போராட்டக்களங்களில் உயரும் கரங்கள் எம்மை நெகிழச்செய்து பெருமைகொள்ள வைக்கின்றன. எவ்வித அரசியல் பின்புலமும் இல்லாமல், தன்னெழுச்சியாக ஆண், பெண் வேறுபாடின்றி தமிழக இளைஞர்கள் ஏறு தழுவுதல் மீதானத் தடையை அகற்றப் போராடி வருவது மிகுந்த மனமகிழ்ச்சியைத் தருகிறது. போராட்டங்களத்தில் நிற்கிற ஒவ்வொரு இனமானத்தமிழனையும் உச்சிமுகர்ந்து பாராட்டுகிறேன். அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி தனது புரட்சிகரமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
மேலும், ஜல்லிக்கட்டுக்காக ஆதரவுக்குரல் எழுப்பி போராட்டங்களுக்கு வலுசேர்த்து இருக்கிற தமிழ்த்திரையுலகைச் சேர்ந்த எம் மண்ணின் மகத்தான கலைஞன் ஐயா கமலஹாசன், எனதருமைத்தம்பி சூர்யா, எனது ஆருயிர் இளவல் சிலம்பரசன், தம்பி சிவகார்த்திகேயன், தம்பி விஜய்சேதுபதி, அன்புத்தம்பி சூரி, புகழ்பெற்ற இசையமைப்பாளர் தம்பிகள் ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட அனைவருக்கும், இணையதளங்களில் ஆதரவுக்குரல் தந்து வருகிற திரையுலகத்தைச் சேர்ந்தவர்களுக்கும், இளையோர் கூட்டத்திற்கும் எனது மனங்கனிந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
வெகுமக்கள் போராட்டமாக இன்று விரிவடைந்திருக்கும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான எமது போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் புரிந்துகொண்டு தடையுடைத்து ஜல்லிக்கட்டு நடத்தவிருக்கிற எம்மைப் போன்றவர்களுக்கு ஆதரவினை நல்குமாறு வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.