தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ.25 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகளின் கடன்களை அரசே ஏற்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் https://goo.gl/6cJFXv
************************************************************************
தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சைத்தரணியில் அடுத்தடுத்து 3 விவசாயிகள் தற்கொலை செய்திருப்பது மிகுந்த மனவேதனையையும், விவசாயிகளின் எதிர்காலம் குறித்த பெருங்கவலையையும் தருகிறது. உயிரிழந்த விவசாயிகளின் இழப்பு என்பது அவர்களது குடும்பத்திற்கு மட்டுமான இழப்பு மட்டுமல்ல! அது ஒட்டுமொத்த மானுடச்சமூகத்திற்குமான இழப்பு. ஒரு விவசாயி இன்று தற்கொலை செய்துகொண்டு சாகிறான் என்றால், நாளை நாம் உணவில்லாமல் சாகப்போகிறோம் என்பதற்கான முன்னெச்சரிக்கையேயாகும் என்பதை ஆளும் அரசுகளும், பொதுமக்களும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே ரெகுநாதபுரத்தைச் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ் கடன்வாங்கிச் செய்த சாகுபடியில் நெற்பயிர்கள் கருகியதால் நஞ்சருந்தி தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். அதே மாவட்டத்தில் கோட்டூர் அருகேயுள்ள ஆதிச்சபுரத்தைச் சேர்ந்த விவசாயி அழகேசன் வயலுக்குச் சென்றபோது நேரடி விதைப்பு மூலம் தான் விதைத்திருந்த பயிர்கள் முளைக்காததால் அங்கேயே மயங்கி விழுந்து உயிரைவிட்டுள்ளார். இதேபோல, தஞ்சாவூர் மாவட்டம், கீழத்திருப்பந்துருத்தியைச் சேர்ந்த விவசாயி ராஜேஷ் கண்ணன் தான் சாகுபடி செய்த பயிர்கள் கருகியதைக் கண்டு வயலிலேயே மயங்கிவிழுந்து உயிரிழந்துள்ளார். அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள இந்தத் தொடர் மரணங்கள் தமிழக விவசாயிகளிடம் பெரும் கலக்கத்தையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இம்மூன்று மரணங்களும் காவிரி நதிநீர் உரிமையை மறுத்துத் தமிழகத்திற்குப் பச்சைத்துரோகம் செய்த மத்தியில் ஆளும் மோடி அரசின் நயவஞ்சகத்தாலும், கடன்வாங்கி விவசாயம் செய்து நலிவுற்று நிற்கும் விவசாயிகளின் துயரைப்போக்க முன்னேற்பாடுகளைச் செய்யாத மாநில அரசின் அலட்சியப்போக்காலும்தான் நிகழ்ந்தேறியிருக்கிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது.
மத்திய அரசு காவிரி நதிநீரை வஞ்சித்துக் கர்நாடகாவுக்கு ஆதரவாக நிற்கிறதென்றால், மாநில அரசோ மணல்கொள்ளையாலும், ஆக்கிரமிப்பாலும், தூர்வாரும் பணிநடைபெறாததாலும் காவிரி நதியின் துணை ஆறுகளைக்கூடப் பறிகொடுத்துக் கொண்டிருக்கிறது. மேலும், ஆறுகளில் தூர்வாரும் பணி முழுமையாக நடைபெறாததால் கடைமடைப் பகுதிக்குத் தண்ணீர் சென்று சேருவதற்குக்கூட வழியில்லாத நிலையில் நீர்நிலைகள் இருக்கின்றன. தமிழகத்திலுள்ள பல நதிகளின் ஆற்றங்கரையோரம் முழுவதும் சீமைக்கருவேல மரமும், யூகலிப்டஸ் மரமும் மண்டிக்கிடக்கிறது. காற்றிலுள்ள ஈரப்பதத்தைக்கூட உறிஞ்சி சூழ்நிலையை வறட்சியாக்கும் இம்மரங்கள், ஆற்றங்கரையோரமிருந்தால் ஆறு தனக்குத் தேவையான குறைந்தபட்ச நீரோட்டத்தை (Minimum Ecology Flow) எப்படித் தேக்கி வைத்துக்கொள்ளும்? என்ற கேள்விக்கான விடையைத் தமிழகப் பொதுப்பணித்துறைதான் விளக்க வேண்டும். கர்நாடக அரசு, காவிரி நீரைத் தரமறுத்தால், தமிழக அரசோ இயற்கை தரும் மழைநீரை சேமித்து மக்களுக்குத் தர மறுக்கிறது. நாம் தமிழர் ஆட்சியின் செயல்பாட்டு வரைவிலே கொடுத்துள்ள வரைவின்படி, கர்நாடகாவில் ஒரு ஆண்டுக்குச் சராசரியாக 722 மி.மீ. மழையும், ஆந்திராவில் 908 மி.மீ. மழையும் பெய்கிறது. தமிழகத்தில் அவ்விரு மாநிலங்களைவிட அதிகப்படியாக, ஆண்டொன்றுக்கு 950 மி.மீ. மழை பெய்கிறது. ஆனாலும், ஆளும் அரசுகள் நீர் மேலாண்மையை முறையாகச் செயல்படுத்தாததால் அவ்வளவு நீரும் வீணாகக் கடலில் போய்க் கலக்கிறது. இதுவும் தமிழகத்தின் நீர்ச்சிக்கலுக்கு ஒரு காரணமாகிறது.
மத்திய, மாநில அரசுகளின் பாராமுகத்தால் முப்போகம் விளைந்த தஞ்சைத்தரணி இன்று ஒருபோகம் விளைவதே கேள்விக்குறியாகியிருக்கிறது. ஏற்கனவே, குறுவை சாகுபடி பொய்த்துப்போன நிலையில் தற்போது சம்பா சாகுபடியும் பொய்த்துவிட்டது. இதனால், காவிரிப் பாசன விவசாயிகள் ஒட்டுமொத்தமாகக் கடனாளியாக மாறி நிற்கிறார்கள். எனவே, மாநில அரசு இனியும் தாமதிக்காது விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்கும்பொருட்டு போர்க்கால நடவடிக்கையின்கீழ் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் கடனை அரசே ஏற்றுச் செலுத்த முன்வர வேண்டும். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்குத் தலா ரூ. 25 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
—
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி