மாரியப்பன் தங்கவேலு தமிழினத்திற்கே பெருமை சேர்த்திருக்கிறார் – செந்தமிழன் சீமான் வாழ்த்து

525

பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கும் அதே பிரிவில் வெண்கலம் வென்ற வருண் சிங்குக்கும்
செந்தமிழன் சீமான் வாழ்த்து.

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு தமிழினத்திற்கே பெருமை சேர்த்திருக்கிறார் – செந்தமிழன் சீமான்

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ரியோ நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்றிருப்பது மிகுந்த மனமகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் தருகிறது.

சேலம் மாவட்டத்தில் பெரியவடகம்பட்டி என்ற சிற்றூரில் ஏழைப் பெற்றோருக்குப் மகனாகப் பிறந்து, ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ எனும் தமிழ்மறையோன் வள்ளுவப்பெருமகனாரின் கூற்றுக்கிணங்க தனது கடின உழைப்பாலும், சீரிய முயற்சியாலும் இத்தகைய உயர்ந்த இடத்தைப் பெற்றிருக்கிறார் தம்பி மாரியப்பன் தங்கவேலு. பள்ளிப்பருவத்தின்போது பேருந்து மோதியதில் வலது காலில் நான்கு விரல்களை இழந்தவர் மனம்தளராது போராடி ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்லும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் என்றால், அவரது மனவுறுதியையும், தன்னம்பிக்கையையும் அறிந்து கொள்ள முடியும். இத்தருணத்தில் அவருக்கு மட்டுமல்லாது அவரது வெற்றிக்குத் துணைநின்ற அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், ஆக்கமும் ஊக்கமும் தந்த அவரது ஆசிரியப் பெருமக்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தங்கப்பதக்கம் வென்று இந்திய பெரு நாட்டிற்கே புகழைச் சேர்த்த மாரியப்பன் தங்கவேலுவின் இந்தச் சாதனையானது அவருக்கும், அவரது குடும்பத்தினர்க்கும் மட்டுமல்லாது ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கே பெருமையைச் சேர்த்திருக்கிறது.

தம்பி மாரியப்பன் தங்கவேலுவின் இந்த வெற்றியின் மூலமாக, திறமையும், தகுதியும் கொண்ட இளைஞர்களுக்கு இங்கு பஞ்சமில்லை என்பதையுணர்ந்து, திறமை கொண்ட இளைஞர்களை சாதி, மத வேறுபாடு பார்க்காது இனங்கண்டு ஊக்கப்படுத்தினால் எல்லா துறைகளிலும் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் கிடைப்பார்கள் என்பதை அரசுகளும், விளையாட்டுத்துறையும் கவனத்தில் கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

நாட்டின் கடைக்கோடியில் பிறந்த ஐயா அப்துல் கலாமும், ஐயா மயில்சாமி அண்ணாதுரையும் உலகிற்கே தமிழர்களின் திறமையைப் பறைசாற்றியது போல, தமிழகத்தின் ஒரு சிற்றூரில் பிறந்து இந்த நாட்டிற்கே பெருமை சேர்த்திருக்கும் தம்பி மாரியப்பன் தங்கவேலுவை பெற்றதில் தமிழ் இனமே பெருமை கொள்கிறது.

மேலும், இதே பிரிவில் வெண்கலம் வென்ற வருண் சிங்குக்கும் நாம் தமிழர் கட்சி தனது புரட்சிகரமான வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திகுறவர் சமுக மக்களின் வாழ்வுரிமை மீட்பு ஆர்பாட்டத்தில் சீமான் 09-09-2016
அடுத்த செய்திதியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி சீமான் மலர்வணக்கம் – 11-09-2016