வழக்கறிஞர்கள் போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு தலையிட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

40

தமிழக வழக்கறிஞர்களின் தொழில் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் வழக்கறிஞர் சட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றம் புகுத்தியுள்ள சட்டத் திருத்தங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். வழக்கறிஞர்கள் போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு தலையிட வேண்டும் – செந்தமிழன் சீமான் வலியுறுத்தல். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஒரு மாத காலமாக தமிழக வழக்கறிஞர்கள் தங்களின் தொழில் உரிமை மற்றும் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் வழக்கறிஞர் சட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றம் புகுத்தியுள்ள சட்டத் திருத்தங்களை எதிர்த்து நீதிமன்ற புறக்கணிப்பு உள்ளீட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

வழக்கறிஞர் சட்டம் 1961 பிரிவு 34 (1) –ன் கீழ் புதிதாக இயற்றப்பட்டுள்ள சட்டத்திருத்தங்கள் தங்களை மிகவும் பாதிப்பதாகவும், தங்களின் தொழில் சுதந்திரத்தை முடக்குவதாகவும், பெரும்பாலான வழக்கறிஞர்கள் ஒருமித்த குரலில் தெரிவிக்கின்றனர். ஒரு மாத காலமாக மேற்கண்ட சட்டத்திருத்தங்களை திரும்பப் பெற கோரி வழக்கறிஞர்கள் நடத்தி வரும் போராட்டங்களினால் தமிழக நீதிமன்றப் பணிகள் முடங்கிக் கிடக்கின்றன.

இதனால் வழக்காடிகளும், பொதுமக்களும், இளம் வழக்கறிஞர்களும் பெரும் பாதிப்புள்ளாகி இருக்கின்றார்கள். சாதாரண குற்றத்தில் சிக்கி சிறைக்கு செல்பவர் கூட பிணையில் வெளிவர முடியாத அசாதாரண சூழல் நிலவுகிறது. பிணையில் வரத்தக்க சிறிய குற்றங்களை செய்தவர்கள் கூட வழக்கறிஞர்கள் போராட்டத்தினால் பிணையில் வெளிவர முடியாமல் சிறையிலேயே தொடர்ந்து வாட வேண்டிய அவல நிலை நீடிக்கிறது.

ஏற்கனவே நாடு முழுக்க நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் இரண்டு கோடிக்கும் மேலான வழக்குகளை விரைவில் முடிக்க வழியின்றி சட்டத்துறை திணறிக் கொண்டிருக்கும் இக்காலக் கட்டத்தில் ஒரு மாத காலமாக நீடிக்கும் வழக்கறிஞர்கள் போராட்டத்தினை முடிவிற்கு கொண்டு வர தகுந்த நடவடிக்கைகளை சென்னை உயர்நீதிமன்றமும் ,தமிழக அரசும் உடனடியாக எடுக்க வேண்டியது அவசியமாகிறது.

நீதிமன்றத்திற்கும் ,வழக்கறிஞர்களுக்கும் முரண்கள் ஏற்பட்டு இருக்கிற இச்சூழலில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு , வழக்கறிஞர்களை பாதிக்கிற மேற்கண்ட சட்டத்திருத்தங்களை திரும்பப் பெறும் நடவடிக்கைகளை மேற்கொண்டு உடனடியாக வழக்கறிஞர்கள் போராட்டத்தினை முடிவுக் கொண்டு வர வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்.
நாம் தமிழர் கட்சி.

முந்தைய செய்திஅண்ணா நகர் தொகுதியில் இலவச தையல்பயிற்சி நடுவம் மற்றும் மாலைநேர பாடசாலை
அடுத்த செய்திசிவகங்கை மாவட்டம் கிளை நிர்வாகிகள் நியமனம் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்