ஈழ உறவு ரவீந்திரன் மரணம் தமிழகத்தில் வாழும் 8 கோடி தமிழருக்கும் தலைகுனிவு – சீமான் வேதனை
சிங்கள பேரினவாத அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையில் இருந்து உயிர் தப்பித் தமிழகத்தில் அடைக்கலம் புகுந்த நம் ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் அகதிகள் என்று அடைமொழியிட்டு மறுவாழ்வு முகாம் என்ற பெயரில் அடைத்து வைத்தது மூன்றாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். அவர்களை க்யூ பிரிவு காவலர்களும், வருவாய் அதிகாரிகளும் படுத்தும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. சந்தேகத்திற்குரிய குற்றவாளிகளைப் போலவே நடத்துவது, பிக் பாக்கெட், வழிப்பறி செய்தார்கள் போன்ற இல்லாத, சொத்தையான காரணங்களைக் கூறியும், காரணங்கள் ஏதுமில்லையெனும் நிலையில் அயல் நாட்டவர் சட்டத்தின் கீழும் சிறப்பு முகாம்கள் என்றழைக்கப்படும் தனிமைச் சிறைக்கூடங்களில் அடைப்பது, முகாம்களில் வாழும் பெண்களைப் புணர்ச்சிக்கு அழைப்பது, அவர்கள் எதிர்க்கும்போது, உங்கள் அண்ணன், தம்பிகளைச் சிறப்பு முகாம்களில் அடைத்துவிடுவோம் என்று மிரட்டுவது, முகாம்களை விட்டு வெளியே செல்வதற்கு அனுமதி வழங்க மறுப்பது, உண்மையான காரணங்களால் மாலை 6 மணிக்குள் வரத்தாமதமானால் தண்டனையளித்து, கீழ்த்தரமாக நடத்துவது என்று வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கியூ பிரிவினரின் அராஜக நடவடிக்கைகள் சொல்லி மாளாதவை. இவர்களின் கொடுமைகளைத் தாங்க முடியாத காரணத்தினால்தான் கடலில் செத்தாலும் பரவாயில்லை என்று அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குத் தப்பிச் செல்கிறார்கள் நம் உறவுகள்.
நேற்று மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள உச்சப்பட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வாழும் ரவீந்திரன் தன் மகனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வரதாமதமானதால் ஆய்விற்கு வந்த வருவாய் ஆய்வாளர் மிகவும் கீழ்த்தரமாக நடத்தி கடுஞ்சொல் பேசி உதவித்தொகை தரமறுத்து மிரட்டியிருக்கிறார். அதிகாரியின் மிரட்டலால் மனம் ஒடிந்த இரவீந்திரன் மின்சாரக் கோபுரத்தில் ஏறிக்குதித்துத் தன்னுயிரை மாய்த்திருக்கிறார். தன் மகனை மருத்துவமனையில் அனுமதிக்கச் சென்றேன் என்ற பிறகும் கீழ்த்தரமாக வசைபாடி நடவடிக்கை எடுக்க முனைந்த வருவாய் ஆய்வாளரின் மனிதாபிமானமற்ற செயல் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இது தற்கொலை அல்ல கொலை. உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளிய வருவாய் ஆய்வாளரை தமிழக அரசு பணி நீக்கம் செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். இரவீந்திரனின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் உடனே வழங்கவேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுகொள்கிறேன். ஈழத்தில் போர் முடிந்த பிறகு அங்கே மக்கள் முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது போலவே, இங்கு அகதிகள் முகாம் என்ற பெயரில் இவ்விதமான கொடுமைகள் தொடர்வது தாயக தமிழகத்திற்கும், இங்கு வாழும் 8 கோடி தமிழர்களுக்கும் பெருத்த தலைக்குனிவு ஆகும்.
இந்தியாவின் நான்கு பக்கமுமிருந்தும் அகதிகளை அனுமதிக்கும் இந்திய அரசு வங்காள தேச அகதிகளை நடத்துவது போல, திபத்திய அகதிகளுக்குக் கொடுக்கும் சலுகைகள் போல ஈழத்தமிழ் சொந்தங்களை நடத்துவதில்லை. ஈழத்தமிழர்கள் என்றாலே தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி அவர்களை நடந்ததும் போக்கு மிகக்கொடுமையானது. டெல்லியிலும் கொல்கத்தாவிலும் இருக்கும் வங்காள தேச முகாமும் பெங்களூரில் இருக்கும் திபத்திய முகாமும் பூமியின் சொர்க்கம் போல இருக்கின்றன ஆனால் தமிழகத்திலுள்ள அகதிகள் முகாம் மக்கள் வாழவே முடியாத சூழலில் இவ்வரசுகள் வைத்திருக்கிறது. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளிலும் தஞ்சம் புகுந்த ஈழத்தமிழர்களை அந்நாடுகளின் அரசுகள் மனிதாபிமானத்துடன் நடத்துகின்றன. அகதிகளுக்கான உதவித்தொகை, சலுகைகள், கல்வி கற்க வசதிகள், தொழில் செய்ய வசதிகள் செய்கின்றன. கனடா போன்ற நாட்டில் 3 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலே குடியுரிமை வழங்கப்படுகிறது. பல நாடுகளில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் குடியுரிமை பெற்றுள்ளனர். தமிழ்நாட்டைத் தங்களது ஆதித் தாயகம் எனக் கருதி தஞ்சம் புகுந்த ஈழத்தமிழர்களைத் தாய்த் தமிழகம்தான் கொடுமைப்படுத்துகிறது, அலட்சியப்படுத்துகிறது. அதற்குக் காரணம் இதுவரை தமிழகத்தைத் திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆண்டிருந்தாலும் அவ்வாட்சிகள் ஈழத்தமிழ் சொந்தங்களை நடத்தும் விதம் ஒரே மாறியானவைதான். அதனால் தான் அவர்களுக்குக் கீழ் இயங்கும் அதிகாரிகளும் அதே மனபோக்குடன் நடந்துகொள்கிறார்கள்.
வந்தவரை எல்லாம் வசதியாக வாழவைத்த தமிழகம் தன் சொந்தவரை சாகடிப்பது அவமானகரமானது. இந்த நிலை விரைவில் துடைத்தெறியப்படும். தற்பொழுதுள்ள ஈழ அகதிகள் முகாம்களின் நிலையைச் சீர்திருத்தப்படுவது, முகாம்களில் வாழும் உறவுகளுக்கு இரட்டைக் குடியுரிமை அளிப்பது, உலகளாவிய அகதிகள் ஒப்பந்தங்களில் இந்திய அரசு கையெழுத்திட அழுத்தம் கொடுக்கச் செய்வது போன்றவை தான் ஈழச்சொந்தங்கள் இங்கே மற்ற எல்லோரையும் போல் நலமுடனும் வளமுடனும் வாழ வழிவகைக்கும். நாம் தமிழர் கட்சி அதிகாரத்தை அடைந்ததும் இவைகளைத் தன் உயரிய கொள்கையாக ஏற்றுச் செய்து முடிக்கும். அதுவே நமது உறவு ரவீந்திரனுக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாகக் கருதுகிறேன்.
செந்தமிழன் சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி.