தமிழின அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி பொது வேலை நிறுத்தம் மாபெரும் வெற்றியடைய வேண்டும் – வட மாகாண மக்களுக்குச் செந்தமிழன் சீமான் அழைப்பு.

6

தமிழின அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி நடக்க இருக்கின்ற பொது வேலை நிறுத்தம் மாபெரும் வெற்றியடைய வேண்டும் – வட மாகாண மக்களுக்குச் செந்தமிழன் சீமான் அழைப்பு.

கடந்த 2009 போருக்கு பின்னாலான ஈழத்தமிழர்களின் துயர் நிலை இன்றளவும் நீங்காத பெரும் சோகமாய் நீடிக்கிறது. இன்றளவும் போரில் பங்கு பெறாத தமிழினத்தைச் சேர்ந்த அரசியல் கைதிகள் இலங்கைச்சிறைகளில் வாடிக்கொண்டிருக்கிற துயர் நிலை இலங்கை அரசு பன்னாட்டுச் சமூகத்திடம் காட்டுகிற அமைதி,புனர் வாழ்வு,மீள் கட்டமைப்பு ஆகிய சமாதான முகங்களுக்கு எதிராக இருக்கிறது.இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழின அரசியல் கைதிகள் தங்கள் விடுதலைக்காகச் சாகும் வரையிலான உண்ணாநிலை உள்ளீட்ட பல போராட்டங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதை மாந்த நேயம் பேசும் உலகச் சமூகத்தின் முன் சுட்டிக்க்காட்ட எம் மக்கள் தயாராகி விட்டனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டின் போருக்குப் பின் பன்னாட்டுச் சமூகத்தின் பல்வேறு அழுத்தங்களுக்குப் பின் போரின் போது கைது செய்யப்பட்ட 12,000 போராளிகளை விடுதலை செய்து புனர்வாழ்வு அளித்து விட்டதாகத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் சிங்கள அரசு இன்னும் 270 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவில்லை என்று அதுவே முன்வந்து அறிவித்து இருப்பது எவ்வகையான நீதி என்பதைப் பன்னாட்டுச் சமூகம் சிந்தித்துப்பார்க்க வேண்டும். போரினில் ஈடுபடாத,போருக்கு தொடர்பில்லாத தமிழின அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிற சிங்கள அரசின் கொடும் போக்குக் குறித்துப் பன்னாட்டுச் சமூகமும், ஐநா மன்றமும் கவனம் கொள்ள வருகிற 13-11-2015 வெள்ளிக்கிழமை அன்று வடமாகாணம் தழுவிய பொதுவேலை நிறுத்தம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

தமிழின ஒற்றுமையில் தான் நம் துயர் இருட்டை நீக்க வல்ல பேரொளி ஒளிந்திருக்கிறது என்கிற மாபெரும் உண்மையை உணர்ந்து, இலங்கைச்சிறையில் வதைப்பட்டு வருகிற தமிழின அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி 13-11-2015 வெள்ளிக்கிழமை அன்று வடமாகாணம் தழுவிய அளவில் நடக்க இருக்கும் பொது வேலை நிறுத்தத்தில் எம்மின உறவுகள் தாங்களாகவே முன் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று நான் அன்போடும்,உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழின அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி 13-11-2015 வெள்ளிக்கிழமை அன்று வடமாகாணம் தழுவிய அளவில் நடக்க இருக்கும் பொதுவேலைநிறுத்தம் வெற்றிப் பெற நாம் தமிழர் கட்சி சார்பில் புரட்சிக்கர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் .

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி.