பணிநீக்க மிரட்டல்களைக் கைவிட்டுத் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும். -சீமான்

26

நெய்வேலி நிலக்கரி சுரங்கப் பணியாளர்கள் போராட்டம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நெய்வேலி நிலக்கரி சுரங்கப் பணியாளர்கள் தங்களது புதிய மாற்று ஊதிய உயர்வு திட்டத்தைச் செயல்படுத்தக்கோரி போராட்டத்தைத் தொடங்கி நடத்திவருகின்றனர். அதுபோல, கடந்தாண்டு அங்கு பணியாற்றிய பதிமூன்றாயிரம் ஒப்பந்தப்பணியாளர்களைப் பணிநிரந்தரம் செய்யக்கோரியும் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். தொழிலாளர்களின் போராட்டம் பலகட்டப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு பலனளிக்காமல் தொடர்ந்து வருகிறது. மேலும், நெய்வேலி பழுப்புநிலக்கரி நிறுவனம் இந்தியாவிலேயே தலைசிறந்த இலாபம் ஈட்டக்கூடிய பொதுத்துறை நிறுவனமாக உள்ளது.

இந்நிறுவனம் 2014-15 இவ்வாண்டு சுமார் 1500 கோடி நிகரலாபம் ஈட்டி இருக்கிறது என்றால் அது எமது மக்களின் கடும் உழைப்பால்தான் அதை நிகழ்த்த முடிந்தது என்பதை நிறுவனத்திலுள்ள வெளிமாநில உயரதிகாரிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

நிலத்தையும் நீரையும் இழந்து அதனால் ஆண்டாண்டுக் காலமாக தாங்கள் செய்துவந்த வேளாண்மைத் தொழிலையும் பறிகொடுத்து வாழ்விழந்து எமது மக்கள் இந்நாட்டிற்குச் செய்திருக்கிற பெரும் ஈகத்தை நன்றியுணர்வுடனும், மனிதநேயப் பண்புடனும் உயரதிகாரிகள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அதைவிடுத்து வெறும் வறட்டுத்தனமான போக்குடன் தொழிலாளர்களை மிரட்டி பணிய வைக்கலாம் என்றால் அது முடியாது.
கடந்த ஆண்டு நடைபெற்றப் போராட்டங்களின் தீர்வாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொண்டு நிறுவனம் ஒப்புக்கொண்டபடி தொழிலாளர்களை நிலையான பணியமர்த்தம் செய்யாமல் மிகக்குறைந்த எண்ணிக்கையில் மட்டும் தொழிலாளர்களை நிலையான பணியமர்த்தம் செய்து கண்துடைப்பு நாடகங்களை மேற்கொண்டுவரும் நிருவாகம், தற்போது கடந்த ஆண்டு போராட்டத்தைத் தூண்டியதாகக் குற்றம்சாட்டித் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தலைவர் பா.திருமாவளவனை 11-08-15 முதல் பணிநீக்கம் செய்திருப்பது பெரும்அடாவடித்தனமாகும். இதை வன்மையாகக் கண்டிப்பதுடன் உடனடியாக இந்தப் பணிநீக்க ஆணையை நெய்வேலி நிருவாகம் திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்துகின்றேன். மேலும், நெய்வேலி நிலக்கரிச் சுரங்கப் பணியாளர்கள்  நியமனத்திலும்

மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை அடிப்படை கோட்பாட்டிற்கு முரணாகத் தமிழகத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைத்து வெளிமாநில தொழிலாளர்களைப் கொத்தடிமைத்தனமாக பணிநியமனம் செய்து வருகிறது.

 

கடந்த ஐந்தாண்டில் மட்டும் நிரப்பப்பட்ட 250 பட்டயப்பொறியாளர்களின் நியமனத்தில் 4 பேர் மட்டுமே தமிழர். 160 சுரங்கத்தொழிலாளர்களில் 3 பேர் மட்டுமே தமிழர். மனித வளத்துறையில் 10 பேரில் ஒருவர் மட்டுமே தமிழர் மற்ற அனைவரும் பிற மாநிலத்தவர்களைக் கொண்டு பணிநியமனம் செய்திருப்பது அந்த மண்ணையும் இழந்து வேலைவாய்ப்பையும் இழந்து தவிக்கும் மக்களின் வெந்தபுண்ணில் வேல் கொண்டு குத்துவது போன்ற கொடிய செயலாகக் கருத வேண்டியுள்ளது.

அதுபோல், ஆண்டாண்டுக் காலமாக அம்மண்ணில் குடியிருந்துவரும் விருத்தாச்சலம் வட்டம் தாண்டவன்குப்பம் கிராமத்தில் சுமார் 1500குடும்பங்களைச் சார்ந்த 5000 மக்களுக்கு மின்வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி, பள்ளிக்கூட வசதி, மருத்துவ வசதி என எவ்வகையான அடிப்படை வசதிகளையும் செய்துதரவிடாமல் அம்மக்களை வஞ்சித்துவரும் நிறுவனத்தின் போக்கு மிகவும் வருந்தத்தக்க, கண்டிக்கத்தக்க வன்கொடுமைப் போக்காகும்.

இவற்றை எல்லாம் வேடிக்கைப்பார்க்கும் அரசாகத் தமிழக அரசு இருப்பது மேலும் வருந்துவதற்குரிய ஒன்றாகும். எனவே, நெய்வேலி நிலக்கரி நிறுவனம் உடனடியாக இவற்றை எல்லாம் உரியவாறு பேச்சுரை நடத்தி சுமூகமாக தீர்வு காண முன்வந்து போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.

தமிழக அரசும் இதில் பாராமுகமாக இருப்பதைக் கைவிட்டு நமது தொழிலாளர்களின் நலனில் அக்கறைக்கொண்டு உடனடியாகத் தலையிட்டு சிக்கலுக்குத் தீர்வு காண முன்வர வேண்டுமென மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

`இல்லையேல், இதில் தொடர்புடைய பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்டி நாம் தமிழர் கட்சி போராட்டத்தை முன்னெடுக்க வேண்டி வரும் என நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை எச்சரிக்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திஈரோடை கிழக்கு ,தெற்கு மண்டலங்களின் சார்பாக தெருமுனைக்கூட்டம்
அடுத்த செய்திபத்திரிகை.காம் இணையதள இதழில் அண்ணன் சீமான் நேர்காணல்