கருணாநிதி மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். -சீமான்

24

டிசம்பர் 3 இயக்கம் சார்பாக மதுவிலக்கு கோரி மாற்றுத்திறனாளிகள் நேற்று (05-08-15) சென்னை, சேப்பாக்கத்தில் பட்டினிப்போராட்டம் செய்தனர். இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் பங்கேற்று அவர்களுக்கு ஆதரவினையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

 

அப்போது அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள் பின்வருமாறு:

மதுவிலக்கு கோரி திமுகவும், வைகோவும் போராடுகிறார்கள்; ஆனால், அவர்களில் வைகோவின் மகன் சிகரெட் விற்கிறார். டி.ஆர்.பாலுவுக்கு சொந்தமாக சாராய ஆலைகள் இயங்குவதாக கூறுகிறார்களே, அப்படியென்றால், அவர்கள் அரசியல் நோக்கத்துடன் செயல்படுகிறார்களே?

அதிலென்ன சந்தேகம்! சிகரெட் வியாபாரி மது வியாபாரத்தை கண்டித்து போராடுகிறார். மதுவை காய்ச்சி விற்பவர்கள் மதுவுக்கு எதிராக போராடுகிறார்கள். நாங்கள் போராடுகிறோம் என்றால், அதில் ஒரு நியாயமிருக்கிறது. 5 ஆண்டுகாலம் ஆட்சி நடத்தியபோது மதுபானக்கடைகளை நடத்தியவர்கள் நாங்களும் போராடுகிறோம் என்றால், எப்படி ஏற்பது? 5 ஆண்டுகளுக்கு முன்பு, திமுக ஆட்சியிலும் மதுபானக்கடைகள் இருந்துகொண்டுதான் இருந்தது. அதிமுகவுக்கு மிடாஸ் ஆலைகள் என்றால், திமுகவுக்கு டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் போன்றவர்களின் ஆலைகளிலிருந்து மது காய்ச்சி விற்கப்பட்டது. அப்படிப்பட்ட இவர்களுக்கு மதுவிலக்கைப் பற்றிப் பேச என்ன தகுதியும், நேர்மையும் இருக்கிறது? அப்படியென்றால், குறைந்தபட்சம் திமுகவினர் நடத்துகிற மதுபானக்கடைகளையாவது மூட வேண்டும். நான் கடந்த காலங்களில் செய்தது தவறென்று, மக்களிடம் கருணாநிதி பொதுமன்னிப்பு கோர வேண்டும். இன்றைக்கு குழந்தைகள், மாணவர்கள் குடிக்கிறார்கள் என்று கருணாநிதி கூறுகிறார். மாணவர்களும், குழந்தைகளும் குடிப்பார்கள் என்ற தொலைநோக்குப்பார்வை கூடவா இல்லாது கருணாநிதி இவ்வளவு ஆண்டுகளாக நாட்டையாண்டார்? 2006-யிலும் மதுவிலக்கை கொண்டுவருவேன் எனக் கூறினார் கருணாநிதி. வந்தபிறகு, சட்டமன்றத்தில் சாத்தியமில்லை என்றார். இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மூடுவேன் என்கிறார். வந்தபோது என்ன செய்துகொண்டிருந்தீர்கள் என்று கேட்டால் பதில் சொல்ல மறுக்கிறார். மதுவுக்கு எதிராக மக்களுக்கு வெறுப்புணர்வும், கோபமும் இருக்கிறது; வருகிற தேர்தலில் முக்கியக்காரணியாக மது இருக்கும் என்பதால் கருணாநிதி மதுவிலக்கைப் பற்றிப் சொல்கிறார். அதனால், இதுவெல்லாம் மக்களை ஏமாற்றுகிற வேலை.

மதுபானக்கடைகளை மூடக்கோரி மக்கள் நடத்துகிற போராட்டங்களை அரசு எப்படி அணுகுகிறது?

பள்ளி, கல்லூரிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும், வழிபாட்டுத்தலங்கள் அருகிலும் கடைகள் இருக்கிறது. அங்கு பெண்கள் கடந்து செல்ல முடியவில்லை. கடந்து செல்லும் பெண்கள் எல்லாம் முகச்சுழிப்போடும், வேதனையோடும் செல்கிறார்கள். பள்ளிகளுக்கு, பெண்பிள்ளைகளை அனுப்ப முடியவில்லை என்று தாய்மார்கள் வேதனைப்படுகிறார்கள். இதுபோன்ற இடங்களில் இருக்கும் மதுபானக்கடைகளையாவது மூடுங்கள் என்றுதான் குறைந்தபட்ச கோரிக்கை வைக்கிறோம். அந்தக் கோரிக்கையை வைத்துதான் ஐயா சசிபெருமாள் போராடி, செத்தார். அவரது உடல் இன்னும் அடக்கம்செய்யாமலிருக்கிறது. அதனைப்பற்றி எவரும் பேசவில்லை. அவரது குடும்பங்கள் இன்னும் பட்டினிப்போராட்டம் செய்துகொண்டு இருக்கிறார்கள். அவர்கள் என்ன மதுபானக்கடைகளை எங்கள் பெயருக்கு எழுதி வையுங்கள் என்றா கேட்கிறார்கள்? குறைந்தபட்சம் பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்கள் பக்கத்திலிருக்கும் மதுபானக்கடைகளையாவது மூடிவிடுங்கள் என்றுதானே கேட்கிறார்கள், அதனைக்கூட அரசால் செய்ய முடியாதா? போராடுகிற மக்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுக்காவிட்டால் அப்புறம் என்ன மக்களாட்சி? மக்களால் நான்! மக்களுக்காக நான் என்ற முழக்கமெல்லாம்? இங்கே போராடுகிற மாற்றுத்திறனாளிகள் மண்ணின் மீது, மக்களின் மீதுள்ள பற்றினால் போராட்டம் செய்கிறார்கள். மது குடித்துவிட்டு விபத்தாகி இறக்காது இருப்பவன் மாற்றுத்திறனாளியாகத்தானே போவான். எங்களைப் போல இன்னொருவர் உருவாகக்கூடாது என்றுதானே இவர்கள் போராடுகிறார்கள், இந்தப் போராட்டம் செய்பவர்களை அடிப்படை வசதியில்லாத இடத்தில் அடைக்கிறார்கள். அடித்து துன்புறுத்தி வசதியில்லாத இடத்தில் கொண்டுவந்துவிட்டிருக்கிறார்கள். இது மனிதாபிமானமற்ற செயல். இதுதான் மக்களின் மீது அக்கறையுள்ளவர்கள் செய்கிற செயலா? போராடுகிற மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து கொஞ்சம் கொஞ்சமாக கடைகளை குறைக்கிறேன்; கல்விக்கூடங்கள், வழிபாட்டுத்தலங்கள் அருகே இருக்கிற கடைகளையாவது அகற்றுகிறேன் என அரசு வாய்திறந்து பதில் சொல்ல வேண்டும். பக்கத்தில் கேரளா நமக்கு முன்மாதிரியாக இருக்கிறது. அதனால், கேரளாவைப் போல படிப்படியாக 6000 மதுபானக்கடைகளில் குறைந்தது 500 மதுபானக்கடைகளையாவது மூட வேண்டும். அதனையெல்லாம் விடுத்து ஒன்றும் செய்யாமல் இருப்பது, மக்களுக்கும், அரசுக்குமான ஒரு அகந்தைப்போர் போலதான் இருக்கிறது.

சிறையில் அடைப்பதன்மூலம் இந்தப்போராட்டத்தை ஒடுக்க முடியுமா?

4000 பேர் என்பதால், சிறையில் அடைத்துவிட்டார்கள்; 4 இலட்சம் பேர் வந்தால் என்ன செய்வார்கள்? அப்படியெல்லாம், அரசு செய்வது முறையாகாது. மக்களின் கோரிக்கை நியாயமானதா? இல்லையா? என்பதைத்தான் பார்க்க வேண்டும். சாத்தியமா? இல்லையா? என்பதையெல்லாம் விவாதித்துக் கொண்டிருக்க முடியாது. மக்களுக்குத் தேவையா? இல்லையா? என்பதைத்தான் பார்க்க வேண்டும். பக்கத்துக்கு மாநிலத்துக்கு போய் குடித்து விடுவான் என்று காரணம் சொல்கிறார்கள். தெருவுக்கு 2 மதுபானக்கடை வைத்திருக்கும்போது, குடிப்பவனைவிட பக்கத்துக்கு மாநிலத்தில் போய் குடிப்பவனின் எண்ணிக்கை குறைவாகத்தானே இருக்கும். அப்படியென்றால், குடிப்பவர்களின் எண்ணிக்கையாவது குறையுமல்லவா? அதனால், இந்தப் போராட்டத்தை தடுக்க வேண்டும் என்று நினைத்தால் அது வேறொரு பக்கம் வெடித்துக்கொண்டிருக்கும். அதனால், அரசு அதனை செய்யக்கூடாது. அப்படிப் போராட்டத்தை தடுக்க வேண்டும் என்று அரசு நினைத்தால் அது அராஜகம்; அதிகாரத்திமிர்.