சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது காட்டுமிராண்டித்தனம்! : சீமான் கண்டனம்

35

சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பதாவது:

’’சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியை திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களுக்கு மாற்றுவதற்கு அரசு எடுக்கும் முயற்சிகளைக் கண்டித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் போராடி வருகிறார்கள். 120 ஆண்டுகள் பழமைகொண்ட சட்டக்கல்லூரி, திடீரென மாற்றப்படுவதை யாரால்தான் ஏற்றுக்கொள்ள முடியும்? மெட்ரோ ரயில் பணிக்கு முறையாக ஆராய்ந்து வேறு இடத்தை ஒதுக்கி, பாரம்பரியச் சிறப்புகொண்ட டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி அதே இடத்திலேயே தொடர்ந்து செயல்பட முயற்சி எடுத்திருக்க வேண்டிய அரசுத்தரப்பு, அதைச்செய்யாமல் சட்டக்கல்லூரி மாணவர்களின் போராட்டங்களைக் குலைக்கும் விதமாகத் தடியடி நடத்தியும் கைது நடவடிக்கைகளைப் பாய்ச்சியும் காட்டு மிராண்டித்தனம் காட்டியிருப்பது மிகக் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

தங்கள் தரப்பு நியாயத்தைச் சொல்லி சட்டக்கல்லூரியைக் காப்பாற்றுவதற்காக தலைமைச் செயலாளரைச் சந்திக்க கோட்டையை நோக்கி ஊர்வலமாகச் சென்ற மாணவர்களை மிருகங்களைத் தாக்குவதைப்போல் தாக்கி இருக்கிறது காவல்துறை. நியாயமான பேச்சுவார்த்தை மூலமாக மாணவர்களின் மனக்கருத்தை அறிந்து, சட்டக்கல்லூரி பிரச்சனைக்கு உரிய தீர்வைக் கண்டிருக்க வேண்டிய அதிகாரிகள், போராட்டத்தை அடக்குகிறோம் என்கிற பெயரில் கல்வீச்சு களேபரங்கள், கைது நடவடிக்கைகள், அடிதடிகள் என அரங்கேற்றி இருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. மாணவர்களுக்கும் காவல் துறையினருக்குமான பிரச்சனையில் அப்பாவிப் பொதுமக்களும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

ஒரு பிரச்சனையை அடக்குகிறோம் எனக் கிளம்பி பல பிரச்சனைகளை உண்டாக்குகிற செயல் இது. மாணவர்கள், தங்களின் கல்லூரியைக் காப்பாற்ற நினைப்பது காவல்துறையின் கண்களுக்கு மாபாதகமாகப் பட்டுவிட்டதா என்ன? எனவே, இந்தப் பிரச்ச‌னைக்கு நியாயமானத் தீர்வை ஏற்படுத்த அதிகாரிகள் உடனடியாக முன்வர வேண்டும். நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளைத் திரும்பப் பெற்று, அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

மெட்ரோ ரயில் பணியால் அம்பேத்கர் சட்டக் கல்லூரியின் சில பகுதிகளில் விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும், அதனாலேயே கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டிய அவசியத்தையும் அரசுத்தரப்பு சொல்கிறது.

ரயில் பாதையை மாற்றுவதோ, அதற்காக வேறு இடங்களைப் பெறுவதோ அரசுக்குச் சிரமமான காரியம் அல்ல. அதைச் செய்யாமல் நூற்றாண்டு கடந்து நிற்கும் சட்டக் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்ற நினைப்பது மாணவர்கள் மத்தியில் மீண்டும் போராட்ட எண்ணங்களையே உருவாக்கும். இதனைப் புரிந்துகொண்டு இந்தப் பிரச்ச‌னையில் நியாயமான தீர்வை அரசுத் தரப்பு ஏற்படுத்த வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

முந்தைய செய்திதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம், அருமருந்தையில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது
அடுத்த செய்திவீரத்தமிழ்மகன் முத்துக்குமார் சகோதரிக்கு நாம் தமிழர் கட்சி மூலமாக புலம்பெயர்ந்த உறவுகள் நன்கொடை அளித்தனர்.