கொலையான என்.எல்.சி. தொழிலாளர் குடும்பத்துக்கு ஒரு கோடி நஷ்ட ஈடு! – சீமான் கோரிக்கை

29
நெய்வேலியில் என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளரை மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர் சுட்டுக் கொன்ற விவகாரத்தைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது:
நெய்வேலியில் என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர் ராஜகுமாரனை மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர் சுட்டுக் கொன்ற விவகாரம் தமிழகத்தையே உலுக்கி இருக்கிறது. பணிக்குச் சென்ற ராஜகுமாரன் தனது அடையாள அட்டையைக் காண்பித்த போதும் அவர் பேசியதைப் புரிந்துகொள்ளாத அந்த வடக்கத்திய பாதுகாப்பு படை வீரர் நோமன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் மூன்று முறை சுட்டிருக்கிறார். ஒரு அப்பாவித் தமிழனை வன்மம் குறையாத அந்த வடக்கத்திய அதிகாரி கண்ணெதிரே சுட்டுக் கொன்ற சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது. தமிழ்நாட்டில் ஒரு தமிழனுக்கு நேர்ந்திருக்கும் இந்த கதிக்கு யார் பதில் சொல்வது? ஈழத்திலும் இன்னபிற தேசங்களிலும் மிரட்டப்பட்டும் விரட்டப்பட்டும் அல்லாடும் தமிழர்களுக்கு ஏதும் செய்ய முடியாத துயரநிலையில், நம் கண் முன்னே சொந்தத் தாய் மண்ணிலேயே ஒரு வடக்கத்திய காவலரால் நம் சகோதரன் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் துயரத்துக்கு மத்திய மாநில அரசுகள் என்ன பதிலீடு செய்யப் போகின்றன? கடும் கண்டனத்துக்குரிய இந்தப் படுகொலைக்கு மத்திய மாநில அரசுகள் உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நான்காயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் என்.எல்.சி. நிறுவனத்தில் ராஜகுமாரனுக்கு ஏற்பட்ட நிலை மற்ற யாருக்கும் ஏற்படாது என்பது என்ன நிச்சயம்? பாதுகாப்பு வீரர்களாகப் பணியாற்றுபவர்களே ஒருவருடைய உயிரைப் பறிக்கிற ஆட்களாக மாறுகிறார்கள் என்றால், அதுதான் ஒருவரைப் பாதுகாக்கும் லட்சணமா? மத்திய அரசின் யதேட்ச போக்கை ஆளுமையோடு கண்டிக்கும் தமிழக முதல்வர் இந்த விவகாரத்தை சொந்த மண்ணில் ஒரு தமிழனுக்கு நிகழ்ந்த பேரவலமாக எண்ணி அந்தப் பாதுகாப்பு வீரர் மீது தக்க நடவடிக்கை எடுக்க முயற்சி எடுக்க வேண்டும்.
பரிதாபமாகக் கொல்லப்பட்ட ராஜகுமாரன் குடும்பத்துக்கு மத்திய மாநில அரசுகள் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும். நிற்கதியில் தவிக்கும் ராஜகுமாரனின் குடும்பத்துக்கு தக்க பொறுப்பேற்கும் விதமாக அந்தக் குடும்பத்தைச் சார்ந்த  ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும். இனியும் இத்தகைய துயரங்கள் தொடராதபடி என்.எல்.சி. ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தமிழன் சீமான் குறிப்பிட்டு உள்ளார்.
முந்தைய செய்திஐக்கிய நாடுகள் அவை மனித உரிமைகள் ஆணையத்தின் 25வது அமர்வில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியாவே முன்னெடுக்க வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி பெங்களூரில் மாபெரும் ஆர்பாட்டம்
அடுத்த செய்திதிருச்சி சிறப்பு முகாமில் 22 ஈழத்தமிழர்கள் உண்ணாநிலை போராட்டம் : ” எங்களை வாழ விடுங்கள் அல்லது சாக விடுங்கள் “…