புதுச்சேரி சட்டமன்றத்தேர்தலில் மக்களால் தேர்வுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவியேற்புக்கு முன்பே, நியமன உறுப்பினர்களை நியமனம் செய்வது மக்களாட்சித் தத்துவத்தைக் குலைக்கும் கொடுஞ்செயல்! – சீமான் கண்டனம்

265

புதுச்சேரி சட்டமன்றத்தேர்தலில் மக்களால் தேர்வுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவியேற்புக்கு முன்பே, நியமன உறுப்பினர்களை நியமனம் செய்வது மக்களாட்சித் தத்துவத்தைக் குலைக்கும் கொடுஞ்செயல்! – சீமான் கண்டனம்

புதுச்சேரி சட்டமன்றத்தேர்தலில் மக்களால் தேர்வுசெய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு செய்வதற்கு முன்பாகவே, அவசரகதியில் நியமன சட்டமன்ற உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஒன்றியப் பகுதியான (Union territory) புதுச்சேரியில் தேர்தல் மூலம் மக்களால் தேர்வு செய்யப்படும் 30 சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர, 3 பேர் மத்திய அரசால் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர் என 1963-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட புதுச்சேரி ஒன்றியப் பகுதிச் சட்டத்தினைப் பயன்படுத்திக் கொண்டு, 3 சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்வுசெய்து அவர்கள் மூலம் ஆட்சியைக் கைப்பற்ற முயலும் பாஜகவின் நயவஞ்சகச்செயல் வன்மையானக் கண்டனத்திற்குரியது.

2021 சட்டமன்றத்தேர்தலுக்கு முன்பாக, முன்னாள் ஆளுநர் கிரண் பேடி நேரிடையாக 3 நியமன சட்டமன்ற உறுப்பினர்களைப் பரிந்துரைசெய்து அவர்களை மத்திய உள்துறை அமைச்சகம் நியமனம் செய்ததும், அந்த நியமன சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டே மக்களால் தேர்வுசெய்யப்பட்ட காங்கிரசு கட்சி தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்த சனநாயகப் படுகொலையை மீண்டும் அரங்கேற்றத் துடிக்கும் பாஜக அரசின் சதிச்செயலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. புதுச்சேரி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐயா ரங்கசாமி கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், புதுச்சேரி அரசாட்சிக்குத் தேவையான பதவியேற்பு நிகழ்வுகள் எதுவும் நடைபெறவில்லை. பேரவைத் தலைவர் தேர்வுசெய்யப்படாது, மக்களால் தேர்வுசெய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு செய்யப்படாதிருக்கும் தற்காலச் சூழலில், அவசர அவசரமாக நியமன உறுப்பினர்களை நியமித்திருக்கும் மத்திய அரசின் செயலானது மக்களாட்சித் தத்துவத்தைக் குலைக்கும் கொடுஞ்செயலாகும். அதுவும் துறைசார்ந்த வல்லுனர்களை நியமிக்காது பாஜகவைச் சேர்ந்தவர்களையே சட்டமன்ற உறுப்பினர்களாக நியமித்திருப்பது எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும். முதல்வர் ரங்கசாமி பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கிறபோதும் அவரைக் கலந்தாலோசிக்காது, அவரது உடல்நலமின்மையைத் தங்களுக்குச் சாதகமாக்கி நியமன உறுப்பினர்கள் மூலம் பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தி மக்களால் தேர்தெடுக்கப்படும் அரசைக் கட்டுப்படுத்துவதும், ஆட்சியின் நிலைத்தன்மையைக் குலைப்பதும், கவிழ்ப்பதுமென செயல்பட முனையும் மத்தியில் ஆளும் பாஜக அரசின் செயல் வெளிப்படையாக நிகழ்த்தப்படும் சனநாயகத்துரோகமாகும்.

கொரோனா நோய்த்தொற்று நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் இப்பேரிடர் காலத்திலும்கூட கள்ளத்தனமாக ஆட்சியைப் பிடிக்க முயலும் பாஜக அரசின் அரசியல் நடவடிக்கை மிகக் கீழ்த்தரமானதாகும்.

ஆகவே, சனநாயக மரபுகளையும், மாண்புகளையும் கடைப்பிடித்து நியமன உறுப்பினர்களை நியமனத்தைத் திரும்பப் பெற வேண்டுமென மத்தியில் ஆளும் பாஜக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி