தேசியப் பெருநாளாகப் பொங்கலைக் கொண்டாடுவோம்! நாம் தமிழர் சீமான் அறிக்கை

592
தமிழர் திருநாளான பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாகவும் தமிழர் திருநாளின் மகத்துவத்தைச் சொல்லும் விதமாகவும் நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது…
பொங்கல் திருநாள் என்பது மதம் சார்ந்த விழா அல்ல. நாற்று வைத்து, களை எடுத்து, பாடுபட்டு விளையவைத்து, அறுவடை செய்த நெல்லை அரிசியாக்கி, புதுப் பானை கொண்டு வாசலில் வைத்துப் பொங்கி, அதனை எல்லாமுமாக விளங்கும் இயற்கை அன்னைக்குப் படையலிட்டு, அக்கம் பக்கத்தவர் அனைவருக்கும் கொடுத்து, தானும் உண்டு கொண்டாடுகிற தமிழர்  மரபு சார்ந்த ஒரு தேசியப் பெருநாளே பொங்கல். தமிழன் இயற்கையோடு எந்தளவுக்கு மாபெரும் உறவு வைத்திருந்தான் என்பதற்கும், இயற்கையை எந்தளவுக்கு கொண்டாடி மதித்தான் என்பதற்கும் பொங்கல் திருநாள் தான் சாட்சி. ஆனால், இந்த மகத்துவத்தை உணராமல் குறிப்பிட்ட மதம் சார்ந்த விழாவாகப் பொங்கலை நினைக்கும் பலர் ஆங்கிலப் புத்தாண்டுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தைக்கூட பொங்கலுக்குக் கொடுப்பது இல்லை.   சாதி, மத வேறுபாடுகளை மறந்து தமிழ்த் தேசிய இனத்தின்  தேசியப் பெருநாளாக நாம் பொங்கல் திருநாளைக் கொண்டாட வேண்டும்.
வயிற்றுக்குச் சோறிடும் வேளாண் பெருமக்களின் உழவர் திருநாளாகிய தை முதல் நாள்தான் தமிழர்களின் புத்தாண்டு. வறுமைப் பிணி தீர்ந்து நம் வாழ்வு செழிக்கவும், பொருளாதார மேம்பாடு அடையவும், இன ஒற்றுமைத் தளைத்தோங்கவும் வழிகாட்டும் தமிழ்ப் புத்தாண்டை நாம் அனைவரும் ஒருமித்த மனதோடு பண்பாட்டுச் சிறப்புமிக்க விழாவாகக் கொண்டாட வேண்டும். காலம் காலமாக நம்முடன் இருந்து உழைக்கிற விவசாயிகளின் தோழனாக விளங்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடுகிறோம். விவசாயிகளுக்கு நிகராக மண்ணோடு உழைப்பும் உறவுமாக இருந்த மாடுகள் இன்றைக்கு தேடுகிற நிலைக்கு ஆளாகிவிட்டன. கால்நடைகளை தமிழன் எந்தளவுக்கு விவசாயத்துக்கு ஊக்க சக்தியாக வைத்திருந்தான் என்பதை இன்றைய நவநாகரிக மாற்றங்கள் மறக்கடித்து விட்டன. மிச்சமாக இருக்கும் கால்நடைகளையாவது காப்பாற்றும் விதமாக மாட்டுப் பொங்கலை நாம் தமிழர் பெருவிழாவாகக் கொண்டாட வேண்டும்.
நம்மைச் சார்ந்த உறவுகளையெல்லாம் காணவேண்டும் என்பதற்காக காணும் பொங்கல் கொண்டாடுகிறோம். வாழ்க்கையின் பரபரப்பான ஓட்டத்தில் உறவுகளைப் பேணுகிற மகத்துவத்தை நாம் கைவிட்டு விட்டோம். ஒரு நாளிலாவது நம்மைச் சுற்றிய உறவுகளைக் கண்டும் கேட்டும் அவர்களின் அன்பு பேணும் விழாவாக நாம் காணும் பொங்கலைக் கொண்டாட வேண்டும்.  இது மரபு சார்ந்த ஒரு பெரும் விழா. இதைத் தமிழ் மக்கள் நம் பண்பாட்டில் இருந்து அழியவிடாமல் பாதுகாப்பது தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் பெரும் கடமை.
இன்றைய சூழலில் உழவர் திருநாளில் உழவர்கள்  முல்லைப்பெரியாரில் நீர் பெறமுடியாமலும், காவிரியில் உரிய பங்கீட்டைப் பெறமுடியாமலும் திண்டாடித் தவிக்கிறார்கள். இயற்கையைக் கூறுபோடும் கொடூரங்களால் பருவமழை மாற்றங்கள் உண்டாகி வானமும் பொய்த்துப்போன நிலையில் விவசாயம் செய்ய முடியாமல் வேளாண் விளைநிலங்களை விட்டு வெளியேறுகிற அவலச் சூழலுக்கு விவசாயிகள் ஆளாகித் தவிக்கிறார்கள். விளைநிலங்கள் யாவும் வீட்டு  மனைகளாக உருமாறும் அவலங்கள் நம் கண் முன்னே நடக்கின்றன. உலகத்தில் எந்தப் பொருளை உற்பத்தி செய்பவனும் அவனுடைய பொருளுக்கு அவனே விலையைத் தீர்மானிக்கின்றான்.. அனால், விவசாயி உற்பத்தி செய்யும் பொருளுக்கு  மட்டும் வாங்குபவன் விலையைத் தீர்மானிக்கும் நிலை. விவசாயம் செய்ய முடியாமலும், அப்படியே செய்தாலும் விளைவிக்கும் பொருளுக்கு உரிய பலனை அடைய முடியாமலும் தவிக்கும் விவசாய பெருமக்களின் துயர் தீர்க்கப்பட இந்தப் பொங்கல் திருநாளில் தமிழர்கள் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.
செஞ்சோற்றுக் கடன் தீர்க்கும் தக்க கடமையாக விவசாயத்துக்குத் துணை நிற்கவும், விவசாயிகளைக் கடன் உள்ளிட்ட கவலைகளில் இருந்து மீட்கவும் தமிழர்கள் எல்லோரும் உள உறுதியோடு ஒன்றுபட வேண்டும்.
அன்றைக்கு   ஈ, எறும்புக்கும் இரையாக இருக்கட்டும் என எண்ணி அரிசி மாவில் கோலம் போட்ட கடையெழு வல்லள்களின் வாரிசுகளாகிய நாம் இன்றைக்கு இலவசமாக‌ அரிசி கிடைக்குமா சக்கரை கிடைக்குமா செலவுக்கு நூறு பணம் கிடைக்குமா… பொங்கலுக்கு போனஸ் கிடைக்குமா என எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறோம். இதுதான் தமிழர்களுக்கு மகிழ்ச்சியான  பொங்கலா? கண்ணீரும் கையேந்தலுமாக இருக்கும் தமிழர் அவல நிலைகளை மாற்றும் எழுச்சியான பொங்கலாக இந்த வருடம் திகழ வேண்டும். அநீதிக்கும் அடக்கு முறைக்கும் எதிரான இனஎழுச்சித் திருநாளாக இந்தப் பொங்கல் இருக்க வேண்டும். மரபு உணராமல், பாரம்பரியச் சிறப்பு உணராமல் ‘ஹேப்பி பொங்கல்” எனச் சொல்லியும் வாசலில் எழுதியும் பிழை செய்யும் புரியாமைகள் இந்தத் திருநாளில் இருந்து திருத்தப்பட வேண்டும். மரபு போற்றும் பெருநாளாகத் தமிழர் திருநாளைக் கொண்டாடும் அனைத்துப் பெருமக்களுக்கும் என் இதயமார்ந்த எழுச்சி மிகுந்த நல் வாழ்த்துகள்!
இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தமிழன் சீமான் குறிப்பிட்டு உள்ளார்.
முந்தைய செய்திகன்னியாகுமரி மாவட்ட கலந்தாய்வு கூட்டம் 12-01-2014 -ஆம் நாள் நடந்தது
அடுத்த செய்தி14-01-2014 பொங்கல் தமிழ்புத்தாண்டு அன்று கடலூர் மேற்கு மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் உள்ள மூகாசபரூர் கிராமத்தில் விருத்தாசலம் ஒன்றிய நாம் தமிழர் கொடியேற்றம்.