முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதி வீரவணக்கம்

777

1987.10.10 தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைக்கப்போகும் அந்த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆணிவேர் ஆளப்பதிந்து கொண்டிருந்த எமது போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன் தமிழீழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் போராளிகளைத் தேடி, இருள் கிழித்து உலாவத் தொடங்கியது. எல்லா இடங்களிலும் எம்மவரின் விழிகள் பகை வரவை எதிர்பார்த்தபடி காத்திருந்தன.

அப்போது நேரம் 1.15. கோப்பாய் கிறேசரடியில் நின்ற மகளிர் அணி வீதியில் போய்வரும் ஊர்திகள் யாருடையவை என அவதானித்தவாறு தாக்குதலுக்குத் தயாராக நிற்க, அதில் ஒருவராக தனது M16 ஐ அணைத்துப்பிடித்தபடி மாலதியும் நிற்கின்றார்.

வானம் கரிய இருளைச் சொரிந்து கொண்டிருக்க, குவியல் குவியலாகச் சிந்திக்கிடந்தன நடசத்திரப்பூக்கள். இடையிடையே வீதியால் போய்வரும் ஊர்திகளின் ஒளிகள் வானத்தை நோக்கி நீண்ட ஒளிக் கோடுகளை வரைய, ஒவ்வொன்றையும் அவதானித்தபடி நிற்கிறார் மாலதி.

அப்பால் கைதடி நோக்கி விரிந்திருந்த வெளிகளினூடாக ஊடுருவிய கண்கள், இப்பால் கோப்பாய்ச் சந்தி கடந்து மிக வேகமாக வந்து கொண்டிருந்த ஊர்தியை நோக்கித் திரும்பின. மிக அண்மையில் வந்து விட்ட ஊர்தியிலிருந்து குதித்த இராணுவம் இவர்களிருந்த பகுதி நோக்கிச் சுடத்தொடங்கியது. அந்த இடத்தில் இந்திய இராணுவத்தை நோக்கிச் சுழன்ற முதலாவது சுடகலனும் மாலதியினுடையதுதான். கோப்பாய் – கைதடி வெளியில் எழுந்த சூட்டுச் சத்தங்கள் எங்கள் சரித்திரத்தில் புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கின.

சண்டை கடுமையாகத்தான் நடந்தது. சீறும் ரவைகளின் ஒலியும், அவற்றின் ஒளிர்வும் தாக்குதலின் கடுமையைப் பறைசாற்றின. மாலதி இராணுவத்தினருக்கு மிக அண்மையில் நின்று தாக்குதலைச் செய்து கொண்டிருந்தார். திடீரெனக் காலில் காயமுற்ற மாலதியின் குரல் வேட்டொலிகளையும் மீறி ஒலித்தது.

“நான் காயப்பட்டிட்டன். என்ர ஆயுதத்தைப் பிடியுங்கோ. என்ர ஆயதத்தைக் கொண்டு போய் அண்ணையிட்டைக் குடுங்கோ”

காயமுற்ற பின்னும் சுட்டுக் கொண்டிருந்தவர் இராணுவம் அதிகமாக நிற்பதைப் புரிந்து கொண்டார். தான் வீரச் சாவடைந்தாலுங்கூட, தான் நேசித்த ஆயுதம் எதிரியிடம் விடுபட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில், தன்னைப் பார்க்காமல் ஆயுதத்தைக் கொண்டு போகும் படி கூவிக் கொண்டிருந்தார். அவரை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற வேகத்துடன் ஊர்ந்து சென்ற விஜியிடம், ‘என்ர ஆயுதம் பத்திரம். என்னை விட்டிட்டு ஆயதத்தைக் கொண்டுபோ” எனச் சொல்லி ஆயதத்தைக் கொடுத்தவர், கழுத்திலிருந்த நஞ்சையருந்தி மண்ணை முத்தமிட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதி வழிகாட்டிச் சென்ற பாதையில் பயணங்களைத் தொடருவோம். அவர் உயிரிலும் மேலாக நேசித்த ஆயுதமும், இந்தத் தேசமும் அவரின் வரலாற்றைச் சுமந்திருக்கும்.

மன்னார் மகளே!

தொடர்வோம் உன் வழியில்.

பதுங்கிப் பதுங்கி வாழ நாங்கள் ஒன்றும் கோழைகள் அல்ல.

பொங்கி எழுந்த புலி இனம்.

தொடர்வோம்………..

காப்போம் எம் தேசம்

நன்றி: விழுதாகி வேருமாகி
தொகுப்பு: கயல்விழி

முந்தைய செய்திபுதுடெல்லியில் இலங்கை குறித்து வாய்திறக்காத சல்மான் குர்ஷித்!
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்கும், நாகை வடக்கு மாவட்ட கலந்தாய்வு மற்றும் அரசியல் பயிற்சி வகுப்புகள்