புதுடெல்லியில் இலங்கை குறித்து வாய்திறக்காத சல்மான் குர்ஷித்!

17

இலங்கைக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, நாடு திரும்பியுள்ள, வெளியுறவுத்துறை அமைச்சர், சல்மான் குர்ஷித், இலங்கை நிலவரம் குறித்து எதுவும் கூறாமல், வழக்கம்போல், பாகிஸ்தான் குறித்தே பேசினார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போரில் வெற்றி பெற்றுள்ள இலங்கை அரசு, அந்நாட்டில் வாழும் தமிழர்களுக்கு, அனைத்து துறைகளிலும் போதிய பிரதிநிதித்துவம் அளிக்காமல் உள்ளது. போரால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் வீடுகள் கட்டித் தரும் திட்டத்தை கூட, அந்நாடு செய்யவில்லை.

இந்திய அரசு தான், அதற்கான முயற்சியில், பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து வருகிறது. அவற்றை பார்வையிட, இலங்கை சென்ற, வெளியுறவுத்துறை அமைச்சர், சல்மான் குர்ஷித், இரண்டு நாட்கள் தங்கியிருந்து, பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று நாடு திரும்பியுள்ளார். டில்லியில் நேற்று அவர், பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, இலங்கை தமிழர் நிலை குறித்து, எதுவும் கூறாமல், வழக்கம் போல், பாகிஸ்தான் பற்றியே பேசினார். பத்திரிகையாளர்களிடம் அவர் கூறியதாவது:

இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நல்லுறவு நிலவுவதை, பாகிஸ்தானில் உள்ள சில சக்திகள் விரும்பவில்லை. எல்லையில் நடந்து வரும் சம்பவங்கள், மிகுந்த மனவேதனை அளிக்கிறது. இருந்த போதிலும், பொறுமை காப்பது அவசியம்.பிரச்னைகளுக்கு தீர்வு காண புதியமுறை கண்டுபிடிக்கப்பட வேண்டும். அந்த முயற்சி, நமக்கு ஏமாற்றம் அளிக்காது என நம்புகிறேன்.இவ்வாறு, முழுக்க முழுக்க, பாகிஸ்தான் விவகாரம் குறித்தே பேட்டியளித்துள்ளார்.

முந்தைய செய்திஇலங்கைக்கு கடுமையான செய்தியை எடுத்துச் செல்லவுள்ளாராம் பிரித்தானிய பிரதமர்!
அடுத்த செய்திமுதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதி வீரவணக்கம்