‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தடயங்களை இன்னும் வைத்து கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. அதனால் புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்த நிலக்கீழ் பதுங்கு குழி தகர்க்கப்பட்டது’ என்று சிறீலங்கா இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய கூறியுள்ளார்.
புதுக்குடியிருப்பு மேற்கு பகுதியில் கடந்த வியாழக்கிழமை தகர்க்கப்பட்ட பதுங்குழி தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
விடுதலைப் புலிகளின் தலைவரின் பதுங்குகுழியும் இந்த பிரதேசத்திலேயே இருந்தது. மூன்று மாடிகளை கொண்ட இந்த பதுங்குகுழியிலிருந்து அவசரமாக வெளியேறுவதற்கான சுரங்க பாதையும் இருந்தது. அந்த பதுங்குகுழிக்கு முன்பாக பிரபாகரன் தன்னுடைய வீரர்களுடன் கலந்துரையாடுவதற்கான மண்டபமொன்றும் அமைக்கப்பட்டிருந்தது. புலிகளின் பதுங்குகுழிகள் பல அழிக்கப்பட்டுவிட்டன. இந்த பதுங்கு குழியை சுற்றி மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. ஆகையினால் இந்த பதுங்குகுழியை தகர்ப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.
கண்ணிவெடிகளை அகற்றாமல் பதுங்கு குழியை தகர்ப்பதனால் ஏற்படும் சேதங்களை குறைத்துகொள்ளவதற்கே கண்ணிவெடிகளை அகற்றியதன் பின்னர் இந்த பதுங்குகுழி தகர்க்கப்பட்டது. பதுங்கு குழியை சுற்றி புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் யாவும் கடந்த வாரமே அகற்றப்பட்டன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்தப் பதுங்குகுழிக்கு முன்பாக பாதுகாப்பு கூடாரங்களும் அமைக்கப்பட்டிருந்தன. பிரபாகரனின் வாகனம் அந்த வீட்டுக்குள் நுழைவதற்கான வசதிகளும் அமைக்கப்பட்டிருந்தன. பதுங்குகுழியை சுற்றி ஆறு வரிசைகளில் முட்கம்பிகள் கட்டப்பட்டிருந்தன. ஒரு வரிசையிலிருந்து மற்றுமொரு வரிசைக்கான தூரம் 20 அல்லது 25 மீற்றராக இருந்தது. அவற்றுக்கு இடையிலும் பாதுகாப்பு கூடாரங்களும் இருந்தன என்றும் அவர் கூறினார்.
இந்த பதுங்கு குழியை பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி கடந்த வாரம் முதல் நிறுத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். சிறீலங்கா இராணுவம் இந்தப் பதுங்குகுழியை அழித்ததற்கு காரணம் அதுவல்ல. அந்த இடத்தை சிங்களவர்கள் சுற்றுலாத் தலமாகப் பார்க்கின்றபோதும், தமிழ் மக்கள் அந்த இடத்தைப் புனித இடமாகவே பார்க்கின்றார்கள். அந்த இடத்திற்குச் செல்லும் தமிழர்கள் பலர் அந்த மண்ணைத் தொட்டுக் கும்பிட்டபோது படையினரால் கண்டு எச்சரிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், வெளிநாடுகளில் இருந்து சென்ற தமிழர்கள் பலர் அங்கிருந்து மண்ணை எடுத்துச் சென்றுள்ளனர். இவ்வாறு மண்ணை எடுத்துக்கொண்டு செல்ல முயன்ற புலம்பெயர்ந்த தமிழர் ஒருவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, புலனாய்வுத்துறையினரால் கடுமையான விசாரணையின் பின்னர் அங்கிருந்து மட்டுமல்ல, நாட்டிலிருந்தும் வெளியேற்றப்பட்ட சம்பவம் அண்மையில் நடந்தது.
அத்துடன், திருமணமானவுடன் தம்பதிகள் சிலர் அந்த இடத்திற்குச் சென்று உறுதிமொழிகளை எடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில்தான் தமிழ் மக்கள் புனிதமாகக் கருதிய இந்த இடத்தைத் தகர்த்து அழித்துள்ளனர். அங்கு கண்ணி வெடிகள் எவையும் இருக்கவில்லை. இருந்திருந்தால் பெருமளவமான சிங்கள மக்கள் அந்த இடத்தைப் பார்வையிட சிங்கள இராணுவம் அனுமதித்திருக்காது என்பதே உண்மை.
இதேவேளை, விடுதலைப் புலிகளினது நினைவுச் சின்னங்களையும், துயிலுமில்லங்களையும் முற்றாக தகர்த்தழித்துவரும் சிறீலங்கா, தமிழர் தாயகம் எங்கும் சிங்களப் பேரினவாதத்தின் வெற்றிச் சின்னங்களையும், பலியான படையினருக்கான நினைவுச் சின்னங்களையும் நிறுவிவருகின்றது குறிப்பிடத்தக்கது.
நன்றி: ஈழமுரசு