நிபுணர்குழுவின் அறிக்கையில் சர்வதேச விசாரணைக்கு போதுமான ஆதாரங்கள் உண்டு! இன்னும் தாமதிப்பது ஏன்? – கோர்டன் வைஸ்

23

அனைத்துலக விசாரணைகளை முன்னெடுப்பதற்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் ஆதாரங்களும் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் உள்ளன. எனவே எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாதிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இவ்வாறு இலங்கைக்கான ஐ.நா.வின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார்.

எதையுமே முன்னெடுக்காது இருந்தவாறு, அனைத்துலக சட்டங்களிலும் நியமங்களிலும் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கூறுவது என்ன நியாயம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்

நேர்த்தியாக எழுதப்பட்ட, மிகத் தெளிவான, தீர்மானமான அறிக்கையினை நிபுணர்கள் குழு உருவாக்கியுள்ளது. அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தால், ஒரு அனைத்துலக விசாரணையை முன்னெடுப்பதற்கு ஏதுவான முழுமையான நம்பகத்தன்மை கொண்டதாக இந்த அறிக்கை அமைந்துள்ளது என நோர்வேயின் Aftenposten நாளிதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே கோர்டன் வைஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அனைத்துலக விசாரணையை முன்னெடுக்கும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் அவைக்கு இல்லையெனில், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் நேரடியாக அதற்கான முனைப்பினை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக Aftenposten நாளிதழில் வெளிவந்துள்ள கட்டுரையில்,

இலங்கை அரசாங்கம் போர்க்குற்றங்கள் புரிந்திருப்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை. 2009ன் இறுதி மாதங்களில் போர்க்களத்தில் நடந்தேறியவை தொடர்பான நம்பகமான தகவல்களை ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை கொண்டிருப்பதாக இறுதிக்கட்டப் போர் நடைபெற்ற காலம் வரை இலங்கைக்கான ஐ.நா. பேச்சாளராக கடமையாற்றிய கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார்.

பத்து மாதங்களாக ஆவணங்கள் பெறப்பட்டும் சாட்சிகளுடனான நேர்காணல்கள் மூலமாகவும் பெறப்பட்ட ஆதாரங்களைக் கொண்டு ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட மூன்று சுயாதீனமான நீதித்துறை நிபுணர்களினால் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கப்படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதிரான கடுமையான குற்றச்சாட்டுகள் அதில் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆயினும் பெருமளவு குற்றச் சாட்டுக்கள் வெற்றிபெற்ற தரப்பான அரசாங்கத் தரப்பை நோக்கியே முன்வைக்கப்பட்டுள்ளன. இறுதிக்கட்டப் போரில் அரசாங்கப் படைகளின் தாக்குதல்களினாலேயே பெருமெண்ணிக்கையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

330, 000 வரையான ஏழைத் தமிழர்கள் வட பிரதேசத்தின் குறுகிய நிலப்பரப்பு ஒன்றுக்குள் ஒதுங்கியிருக்க, அரசாங்கப் படைகள் அவர்கள் மீது கனரக ஆட்லறிகள் மூலம் தாக்குதல்களை நடத்தியது. அத்தோடு தற்காலிக மருத்துவமனைகள் மற்றும் உணவு விநியோகப் பாதைகள் மீதும் அரசாங்கப் படைகள் தாக்குதல்களை நடத்தியுள்ளன என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கப் படைகள் பொது மக்களையும் விடுதலைப் புலிப் பேராளிகளையும் படுகொலை செய்துள்ளன. கைது செய்யப்பட்ட பெண்கள் படையினரால் பாலியல் வல்லுறவுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுத்துள்ள இலங்கை அரசாங்கம் அதனைக் கண்டித்தும் உள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைமை மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக் கப்பட்டுள்ளன. போர்ப் பிரதேசத்திலிருந்து மக்களை வெளியேற விடாது புலிகள் தடுத்துள்ளனர். வெளியேற முயற்சித்த மக்கள் மீது அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

நேர்த்தியாக எழுதப்பட்ட மிகத் தெளிவான தீர்மானமான அறிக்கையினை நிபுணர்கள் குழு உருவாக்கியுள்ளது. இறுதிக் கட்டப் போரில் நடந்தேறியவை தொடர்பாக நான் எவ்வாறான தீர்மானத்தைக் கொண்டிருந்தேனோ, அதே தீர்மானத்திற்கே நிபுணர் குழுவும் வந்துள்ளது.

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தால், ஒரு அனைத்துலக விசாரணையை முன்னெடுப்பதற்கு ஏதுவான முழுமையான நம்பகத்தன்மை கொண்டதாக இந்த அறிக்கை அமைந்துள்ளது என கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார்.

விரைவில் இலங்கைத் தீவின் இன முரண்பாடு தொடர்பான தனது நூலை கோர்டன் வைஸ் வெளியிட உள்ளார்.

இறுதிக் கட்டப் போரில் உண்மையில் என்ன நடந்தது என்பதை மறைப்பதில் இலங்கை அரசாங்கம் கடந்த இரண்டு ஆண்டுகள் வெற்றி கண்டுள்ளது.

எனவே தீர்மானமான நடவடிக்கைகளை இப்பொழுது மேற்கொண்டாக வேண்டும். எமக்குத் தேவையான தகவல்களையும் ஆதாரங்களையும் இந்த அறிக்கை தருகின்றது. எதையுமே மேற்கொள்ளாதிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எதையுமே முன்னெடுக்காது இருந்தவாறு, அனைத்துலக சட்டங்களிலும் நியமங்களிலும் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கூறுவது எவ்வாறு நியாயமானதாக இருக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நன்றி

தமிழ்வின்

முந்தைய செய்தி[படங்கள் இணைப்பு] இலங்கை அரசுக்கு துணைபோகும் இந்திய அரசைக் கண்டித்து கோவை நாம் தமிழர் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.
அடுத்த செய்திஐ.நா வின் கோரிக்கையை இலங்கை அரசு நிராகரித்துள்ளது.