அக்டோபர் 5 – 1987ஆம் ஆண்டு லெப்.கேணல் குமரப்பா, லெப் கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரண்டு வீடுதலைப்புலிகள் சயனைட் அருந்தி வீரமரணத்தை தழுவிக்கொண்ட நாள்

53

1987 அக்டோபர் 5ம் திகதி.அந்த நாளையும் அதன் கொடும் துரோகத்தையும்எமது மனங்களில் ஆழப்படிந்துவிட்ட துயரத்தையும் மறந்து கடந்து செல்லவோ தவிர்த்துவிட்டு சிந்திக்கவோ எங்களால் முடியாமலிருக்கின்றது.

அதற்குப் பின்னரும் எத்தனையோ பச்சைத்துரோகங்களை அப்பட்டமான நயவஞ்சகங்களை இந்தத் தேசியஇனம் கண்டிருந்தாலும் அந்த அக்டோபர் 5ம் திகதி 1987ம் ஆண்டின் சதிப்பின்னலும் அதன் விளைவாக லெப்.கேணல் குமரப்பா லெப் கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரண்டு வீடுதலைப்புலிகள் சயனைட் அருந்தி வீரமரணத்தை தழுவிக்கொண்டதும் ஒரு பெரிய வடுவாகவே எமதுசிந்தனைகளில் படிந்துவிட்டது.

விடுதலைப்புலிகள் அமைப்பும் அதன் ஒப்பற்ற தலைவரும் தமிழீழ தேசத்தின் விடுதலையை மட்டுமே ஆழமாக நேசிப்பவர்களாகவும் அந்த இலட்சியத்தை வென்றெடுப்பதற்கான போரில் முழுஅர்ப்பணிப்புடன் செயற்படுபவர்களாகவும் இந்திய உளவு மற்றும் வெளிவிவகார கொள்கைவகுப்பாளர்களால் பலவிதமான பரிசோதனைமுயற்சிகளுக்குப் பின்னர் அடையாளம் காணப்பட்டனர்.விடுதலைப்புலிகள் பலமான நிலையில் இருக்கும்வரை ஈழத்தமிழரின் சுதந்திரமான நிம்மதியான வாழ்வைத்தவிர வேறு எதையுமே தீர்வாக திணிக்க முடியாதென இந்தியா முழுதாக நம்பியது.

விடுதலைப்புலிகள் இல்லாத ஒரு தமிழீழபோராட்டத்தையே இந்தியா விரும்பியது.அது முடியாத பட்சத்தில் மிகவும் பலம்குறைந்த அமைப்பாக ஆக்கவும்விருப்புக் கொண்டது.அதற்கான காய்நகர்த்தல்களும் சதிகளும் விடுதலைப்புலிகளின் தலைமை இந்தியாவில் நின்ற காலங்களிலேயே தொடங்கிவிட்டது.அந்த சதிகளும் அவதூறு முயற்சிகளும் வெற்றியளிக்காமல் எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டதால்தான் இந்திய-சிறீலங்கா உடன்படிக்கை 1987ல் உருவாக்கப்பட்டது.

உள்மறையான ஊத்தை வேலைகளும் சதிகளும் தோல்வியில் முடிந்ததால் ஏற்பட்ட வெளிப்படையான சதியே இந்திய-சிறீலங்கா உடன்படிக்கை ஆகும்.தமிழ்மக்களின் ஒப்புதல் இல்லாமல் தமிழீழத்தின் இரண்டு அயல்நாடுகள் செய்துகொண்ட உடன்படிக்கை தமிழ்மக்களுக்கு எதையும் பெற்றுத்தராது என்பதை மக்கள் திலீபனின் உண்ணாவிரதத்துடன்தெளிவாக புரிந்துகொண்டனர். உடன்படிக்கையை நியாயமாக முல்நடாத்தும்படகுறைந்தபட்ச கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் வீரமரணம் அடைந்ததும்இந்திய ஆதிக்கப்பிசாசின் கோரமுகம் எமது மக்களுக்கு தெரியத்தொடங்கியது.வந்து இறங்கிநிற்பது ‘அமைதிப்படை’அல்ல.எம்மை அடைவு வைக்கும்படை என்று மக்கள் தெளிவாக இரண்டு மாதங்களுக்குள்ளாகவே தெரிந்துகொண்டபொழுதில்தான் அந்த நிகழ்வு நடந்தது…

1987 அக்டோபர் 3ம் திகதி வானம் வெளித்தஒருகாலை நேரத்தில் பருத்தித்துறை கடலுக்கு மேலாக நீரைக்கிழித்துக்கொண்டு வந்துகொண்டிருந்த ‘கடல்புறா’ வள்ளம் திடீரென சிறீலங்கா கடற்படைகப்பலால் இடைமறிக்கப்பட்டது ஒரு கூட்டுச்சதியின் ஆரம்பக்கட்டமாக இருந்தது.
அந்தக் கடல்ப்பரப்பில் மிகவும் கோழைத்தனமாகவும் நயவஞ்சகமாகவும்இந்திய-சிறீலங்கா உடன்படிக்கைக்கு விரோதமாகவும் பொதுமன்னிப்பை மீறும் விதமாகவும் எங்களின் உயிரினிய தளபதிகளும் தோழர்களும் பிடிக்கப்பட்டனர்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் முதன்நிலைத்தளபதிகளும் மிகச்சிறந்த கடலோடிகளும் கடற்சண்டைக்காரர்களும் கொண்டஅந்த அணி மிகவும் கூர்மையான அவதானிப்பின் பின்னரே இலக்குவைக்கப்பட்டு கடலில் பிடிக்கப்பட்டனர்.யுத்தத்தின்போது வீழ்த்த முடியாதஇபிடிக்கமுடியாத எங்களின் ஓர்மம்நிறைந்த அந்த அற்புதப்போராளிகள் ஒப்பந்தப்பொழுதொன்றில் பிடிக்கப்பட்டனர்.ஒப்பந்தத்தில் உறுதிதந்த பாரதம் ஏதும் நடக்காததுபோல நடந்தது.கடலில் தடுக்கப்பட்ட போராளிகள் பலாலி சிறீலங்கா முகாமுக்கு
கொண்டு செல்லப்பட்டனர்.ஒரு நச்சுவலை போராட்டத்தின்மீது வீசப்பட்டுள்ளதை இயக்கம் புரிந்துகொண்டது.

தெருவெங்கும் அலைந்து பெரும் மக்கள் சக்தியை உருவாக்கிய தியாகதீபம் திலீபனின் இழப்பினால் பெரும்துயரில் மூழ்கியிருந்த எமதுமக்களுக்கு பத்துநாட்களுக்குள்ளாக அடுத்த பேரிடியாக போராளிகளின் கைது அமைந்தது. இரண்டுஆதிக்க சக்திகளும் தமது கூர்ந்தபற்களை நீவிவிட்டுக் கொண்டு பேரம்பேசி தமிழீழ தேசிய ஆன்மாவை முனைமளுங்கச் செய்ய ஆயத்தமானார்கள்.
பலாலிமுகாமின் பாதுகாப்பை இந்தியராணுவமும் சிறீலங்காராணுவமும் கூட்டாக பொறுப்பெடுத்திருந்தன.அதிலும் எங்களுடைய போராளிகள்பதினேழுபேரும் அடைத்து வைக்கப்பட்டிருந்த மண்டபத்ததை சூழவும் இந்தியபடைகளே நின்றிருந்தன.இந்தியப்படைகளுக்கு வெளிச்சுற்றாக சிங்களப்படைகள் குவிந்திருந்தனர்.

அக்டோபர் 4ம் திகதி நிலைமையின் தீவிரம் தலைவரின் அறிக்கையாக பத்திரிகைகளில் வெளிவருகிறது.அறிக்கையின் அதிகமானசொற்கள் இந்தியஅரசுக்கும் அமைதிப்படைகளுக்கும் விடுக்கப்பட்டஎச்சரிக்கையாகவோ செய்தியாகவோ காணப்பட்டது.அறிக்கையின் இறுதியில்தேசியதலைவர்
‘தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக இந்தியா எம்மை அங்கீகரித்துள்ளது.இவ்வாறு நிலைமை இருக்கும்போது சிறீலங்காஅரசு எம்மை கைதுசெய்யும் கட்டத்தில் எம்மை பாதுகாக்கும் கடமைப்பாடு இந்தியாவினுடையதாகும்.இந்தக் கடமைப்பாட்டில் இருந்து இந்தியா தவறினால் ஆபத்தானவிளைவுகள் ஏற்படும்’
என்று தெளிவாக கூறியிருந்தார்.

இதற்கிடையில் பலாலிமுகாமில் தடுத்துவைக்கப்பட்டபோராளிகள் பதினேழுபேரும் தங்களை சிறீலங்காப்படை கொழும்புக்கு கொண்டு செல்ல முற்பட்டால் இயக்கமரபுக்கு இணங்கவும் விடுதலைப்போராட்டத்தின் இரகசியங்களை காப்பதற்காகவும் எல்லாவற்றிலும் மேலாக உன்னதமான விடுதலையின் மீதான உயரிய செய்தியாகவும் தங்களை அழிக்க தயாராக இருப்பதாக தலைமைக்கு கடிதங்கள்மூலம் அறிவித்தனர்.அக்டோபர் 3ம் திகதி முதல் 5ம்திகதி வரை தமிழீழப்பரப்பு நான்குமுனைகளில் ஒரு வரலாற்றுத்
திருப்பத்துக்காக அவதிப்பட்டது.

ஒரு முனையில் இந்திய-சிறீலங்கா ஆதிக்கசக்திகள் பேரம்பேசி தமிழீழ விடுதலைச்சுவாலையை தணிக்க முயன்றது.
மறுமுனையில் எப்படியாவது இந்த போர்க்குணம் மிக்க போர்த்தளபதிகளையும்போராளிகளையும் மீட்டுவிட விடுதலைப்புலிகள் தலைமை முயன்றுநின்றது.
இன்னுமொரு முனையில் கைதுசெய்யப்பட்டு பலாலிமுகாமில் இருந்த தளபதிகளும் போராளிகளும் தங்களுடைய முடிவில் உறுதியாக நின்றனர்.
நான்காவது முனையில் தமிழ்மக்கள் தங்களை சிங்களபடைகளின் கொடூரங்களிலிருந்து காப்பாற்ற அர்ப்பணத்துடன் போர்புரிந்த தளபதிகள் போராளிகளின் நிலை என்னவாகுமோ என்ற பதைப்புடன் இருந்தனர்.

இதற்குள்ளாக அந்த நாளும் வந்தது.அக்டோபர்5ம் திகதி காலை 7 மணியளவில் தளபதிகளையும் போராளிகளையும் சிறீலங்காஅரசு கொழும்புக்கு கொண்டுசெல்ல இருப்பதாகவும் தங்களால் எதுவும் செய்யமுடியாமல் இருப்பதாகவும் இந்தியபடை அதிகாரிகள் அறிவித்தனர்.அதன்மூலம்பேரம்பேசவே பாரதபடை விரும்பியது.பதினேழு போராளிகளையும் கொழும்புக்கு கொண்டுசெல்வதையும் தமிழீழமக்களின் சுதந்திரபோராட்டத்தையும் ஒரு தராசின் இரு தட்டுகளில் வைத்து இந்தியஆதிக்கம் பேரம் பேசியது.மானிடப்பண்புகள்
கூசக்கூடிய விதத்தில் இந்திய தூதர் பேரம் பேசினார்.

தேசியத்தலைவரின் அறிக்கையில் சொல்லப்பட்ட வார்த்தைகளில் சொல்வதானால்’காலை7மணிக்கு கொடுக்கப்பட்ட காலக்கேடுபின்பு காலை10மணியாகிஇபிற்பகல்2மணியாகி இறுதியில் மாலை 5 மணியாகநிச்சயிக்கப்பட்டது’.தென்பிராந்திய இந்தியதளபதி திபேந்தர்சிங்கும் இந்தியதூதர் தீக்சித்தும் சிங்களஜனாதிபதியுடன் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பதாகச்சொல்லிக்கொண்டிருந்தவர்கள் மாலை 4:45 அளவில் ஜனாதிபதியுடனானபேச்சு தோல்வியடைந்துவிட்டதாக அறிவித்தனர்.(இதே இந்தியதளபதி தீபிந்தர்சிங் இந்தியவல்லாதிக்கபடை தமிழீழத்தைவிடடு வெளியேறியபின்னர் 1992ல் எழுதிய வுhந ஐPமுகு ஐn ளுசடையமெய என்ற புத்தகத்தில் ராஜிவ்காந்தியின் அரசும் அதன்முதன்மை ராணுவதயபதியாக இருந்த ஜெனரல் சுந்தர்ஜி அவர்களும் இந்த சதியில் எவ்வளவு ஈடுபாடுகாட்டினார்கள் என்பதை எழுதியிருக்கிறார்)

தடுத்துவைக்கப்பட்டிருந்த போராளிகளின்பாதுகாப்புக்காக அந்த கட்டடத்ததை சுற்றிநின்ற இந்தியப்படை டெல்லி உத்தரவின்படி விலகிக்கொண்டனர்.மாலை5.05க்கு திடீரென அந்தக் கட்டடத்துக்குள் சிங்களபடைகள் பலவந்தமாக உள்நுழைய முயற்சிப்பதைக் கண்ட தளபதிகளும் போராளிகளும் சயனைட்டை கடிக்கிறார்கள்.தமிழீழதாயகம் என்ற சத்தம் எங்கும் நிறைகிறது.உள்நுழைந்த சிங்களபடைகள் போராளிகளின் கழுத்துக்களை இறுக்கியும் அடித்தும் சயனைட் உள்செல்வதை தடுத்து எல்லோரையும் உயிருடன் கொழும்புகொண்டு செல்ல முயல்கின்றனர்.

போராளிகள் வெறும்கைகளால் திருப்பித்தாக்குகிறார்கள்.புலிகளின்தாகம் தமிழீழதாயகம் என்ற சத்தமே கட்டடம்முழுதும் நிரம்புகின்றது.முடிவில் பன்னிரண்டுபுலிகள் வீரமரணமாகிறார்கள்.ஒரு சிறிய தேசிய இனம் தன்னுடையவிடுதலைக்கான போராட்டத்தில் மிகமோசமாக நம்பவைத்து கழுத்தறுக்கப்பட்ட சம்பவம் ஒன்றின் சாட்சியமாக அந்தக் கட்டடம் நின்றது.

வாராதுவந்த அந்த மகத்தானவர்களின் வீரமரணச்செய்தி ஒலிபெருக்கிமூலம் மக்களுக்கு அறிவிக்கப்பட்டபோது தமிழீழம் ஒருகணம் அதிர்ந்து அழுதது.ஒவ்வொரு பெயர்களாக அறிவிக்கப்பட்டபோது அந்தஉன்னதங்களின் ஈகத்தை ஈழம் மீட்டியது.

லெப்.கேணல் குமரப்பாவும் லெப்.கேணல் புலேந்திரனும் தமிழீழவிடுதலைப்புலிகள்அமைப்பின் ஆரம்பகாலம் முதலாக இருந்தவர்கள்.1970களின் இறுதிப்பகுதியில்இருந்து இயக்கத்தை கட்டிவளர்ப்பதில் தலைவருடன் தோளோடு தோள் நின்று எல்லாவிதமான இன்னல்களையும் எதிர்ப்புகளையும் தாங்கியவர்கள்.தலைவரைப்
போன்றே சிந்திக்க தெரிந்தவர்கள்.நீண்டகால கெரில்லாமுறையிலான போர்முறையில் வாழ்ந்து போராடி அனுபவம் பெற்றவர்கள்.மிகப்பெரிய படையணிகளைநடாத்தும் அனுபவத்தை தங்கள் பட்டறிவின்மூலம் பெற்றுக்கொண்டவர்கள்.நுண்ணிய உணர்வுகளின் சொந்தக்காரர்கள்.மிகவும்மென்மையானவர்களாகவும் அதே நேரம் எங்களின் எதிரிகளால் மிகவும் அச்சத்துடனும் கலவரத்துடனும் பார்க்கப்பட்வர்களாகவும் இவர்கள் இருந்தனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக திருமணம் முடிந்து சிலமாதங்களே ஆகிஇருந்தது.மேஜர் அப்துல்லா கப்டன் பழனி கப்டன்ரகு கப்டன் மிரேஸ் கப்டன் கரன் கப்டன்நளன் லெப்.அன்பழகன் லெப்.ரெஜினோல்ட் லெப்.தவக்குமார் 2ம் லெப்ஆனந்தகுமார்….கடற்புலிகள்என்ற அணி தனியாக அமைக்கப்படாத அந்தக் காலகட்டத்தில் போராட்டத்தின் கடல்சார் செயற்பாடுகளில் இந்த வீரர்களின் செயற்திறனும் அர்ப்பணிப்பும் எப்போதும் தயாரான நிலையும் இன்னும் காலகாலத்துக்கும் நினைக்கத்தக்கது.சீறிச்சுழன்றடிக்கும் அலைகளுக்குள்ளாக இவர்கள் விடுதலைக்களம் ஆடியவர்கள்.முன்னே சென்ற புலிகளின் படகு வெடித்து எரிந்ததை ஒருகணம் மௌனமாகப் பார்த்தபின்னும் அடுத்த ஓட்டத்துக்காக அலை ஏறிய போராளிகள் இவர்கள்…

‘ஈடிணையில்லாத பேரிழப்பு’ என்ற தேசியதலைவரின் அறிக்கையிலுள்ள அந்த ஒரு சொல் காணும் இந்த மகத்தானவீரர்களின் ஈகத்தை எந்தநாளும் சொல்ல.எல்லா உலகவிடுதலைப் போராட்டங்களும் சதிகளாலும் காட்டிக்கொடுப்புக்களாலும் நிறைந்தே காணப்பட்டாலும் தமிழீழ தேசிய விடுதலைப்போராட்டத்தில் அவை அதிகமாக காணப்படுவதற்கு துரோகங்களாலும் இதிகாசங்களாலும் சதிகளாலும் உருவான பாரதம் என்னும் தேசம் எமக்கு அயலில் இருப்பதும் ஒரு காரணமாகும்.

ஆனாலும் இவைகளைக் கடந்தே இவைகளை வெறிறிகண்டே நாம் தொடர வேண்டும்.நாம் ஏதுமற்ற தட்டையான ஒரு இனம் அல்ல. எம்முன்னே பல்லாயிரம் மாவீரர்களின் ஈகமும்லட்சம்மக்களின் சாவும் வரலாறாய் பாதைகாட்டி நிற்கிறது.வரலாறு எப்போதும்எதிரிக்கு சாதகமாக நிச்சயம் இருக்காது.

விடுதலைப் போராட்டம் என்பது வரையறுக்கப்பட்ட நேர்ப்பாதை அல்ல. அது சந்துகளும் மேடுகளும் குறுகலான பள்ளங்களும் அதலபாதாளங்களும் நிறைந்தது. அதன்மீதான பயணத்தில் இவர்கள் எந்தக் கணத்திலும் அச்சம் குழப்பம் தயக்கம் எதுவும் இன்றி உறுதியாகப் பயணித்தார்கள். அந்த மகத்தான உறுதியே இன்றைய பொழுதிலும் எமக்கான தெளிவை அளிக்கட்டும்