பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் டேவிட் கமேரூன் கலந்து கொள்ளக் கூடாது – அமைச்சர் Stephen Hammond இடம் கோரிக்கை.

26

பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் (CHOGM ) பிரித்தானிய பிரதம மந்திரி திரு.டேவிட் கமரோனை கலந்து கொள்ள வேண்டாமென பல்வேறு வழிகளில் பிரித்தானியத் தமிழர் பேரவை முயற்சி செய்த வண்ணம் உள்ளது. அவ்வகையில், மாபெரும் கையெழுத்து வேட்டை ஒன்றை தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் நடாத்தி, அதனை அந்தந்த தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையளித்துக் கொண்டிருக்கிறது, ஏற்கனவே, பெர்மின்காம், கவெண்ட்ரி, ஈலிங், ஈஸ்ட்ஹாம், இல்போர்ட் பகுதிகளிலுள்ள வழிபாட்டுத்தளங்களிலும் மற்றும் பொது இடங்களிலும் இந்தக் கையெழுத்து வேட்டை மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, பழமைவாத ( conservative ) கட்சியைச் சேர்ந்த, விம்பில்டன், தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினரும், போக்குவரத்துத்துறை அமைச்சருமான Stephen Hammond அவர்களை பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினர்கள் சந்தித்து விம்பில்டன் பகுதி தமிழ் மக்களின் கையெழுத்துக்களை சமர்ப்பித்தனர். இச்சந்திப்பில், இறுதிப் போரில் முள்ளிவாய்க்காலில் படு கொலைசெய்யப்பட்ட மற்றும் காணாமல் போனோரின் உறவுகளும், தாயக நலன்விரும்பிகளும் கலந்து கொண்டதோடு அமைச்சரிடம் பின்வரும் கேள்விகளையும் முன் வைத்தனர்.

இலங்கையில் நடைபெறும் CHOGM கூட்டத்தொடரில் நிபந்தனைகள் ஏதுமன்றி கலந்து கொள்ளும் தங்கள் நிலைப்பாட்டை பிரித்தானிய ஏன் பல மாதங்களுக்கு முன்னரே அறிவித்தது?

இலங்கையின் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக நவிப்பிள்ளையின் வாய்மொழி மூலாமான அறிக்கையொன்று வெளிவர இருக்கும் வேளையில் எதற்காக இந்த அவசரம்?

நவிப் பிள்ளையின் அறிக்கை இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம் பெற்றிருப்பதை உறுதிப்படுத்தும் பட்சத்தில், இலங்கையை கையாள பிரித்தானிய அரசாங்கம் எந்தவகையான முடிவுகளை எடுக்கும் ?

இறுதிக்கட்டங்களின் போது சிறைபிடிக்கப்பட்டவர்களின் முழு விபரங்களை (Comprehensive List of Detainees ) நாலு வருடங்கள் கழிந்த பின்பும் இலங்கை அரசிடமிருந்து பிரித்தானிய அரசாங்கத்தினால் ஏன் பெற்றுத்தர முடியவில்லை ?

போர் நடந்த வட- கிழக்கு பிராந்தியத்தில் அழிவை மதிப்பீடு செய்வதற்கான ஆய்வு (Needs Assessment survey) ஒன்றை இதுவரை இலங்கையரசு வெளிவிடாத போதினிலும் பிரித்தானியாவும் மேற்குலகும் எதற்காக தொடர்ந்து அபிவிருத்திக்கென நிதியுதவிகளை வாரி வழங்கி வருகிறது?

இவை தொடர்பான கேள்விகளுக்கு பிரித்தானிய அரசாங்கத்திடமிருந்து உரிய பதில் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.

உங்கள் பகுதிகளில் எமது உறுப்பினர்கள் கையெழுத்து பெற வரும்போது, உங்கள் ஆதரவினை வழங்குமாறும், தாங்கள் வாழும் பகுதி பாராளுமன்ற உறுபினர்களை சந்தித்து இது சம்மந்தமான கோரிக்கையை முன்வைக்குமாறும் வேண்டிக் கொள்கிறோம். இது சம்பந்தமாக உதவி வேண்டுமாயின், தயவு செய்து பிரித்தானியத் தமிழர் பேரவையை தொடர்பு கொள்ளவும்.

 

 

 

முந்தைய செய்திஇலங்கை குறித்த பயண எச்சரிக்கையை நீடித்தது பிரித்தானியா!
அடுத்த செய்திவிக்னேஸ்வரன் பிரபாகரனின் மறு ஜென்மம் – அஸ்வர்