வடக்கு தேர்தல் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெற வேண்டும் – கனடியத் தமிழர் பேரவை

20

செப்ரெம்பர் 21ஆம் நாள் சிறிலங்காவில் வடமாகாணத்தின் 5 தேர்தல் மாவட்டங்களில் நடைபெறும் தேர்தலில் மக்கள் தங்கள் விருப்புக்கேற்பவும் நியாயமான வகையிலும் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டியது மிக முக்கியமாகும். வடக்கில் வாழும் தமிழர்கள் தங்கள் வாக்குரிமையைச் சரியாகப் பயன்படுத்தி எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டுமெனக் கனடியத் தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது. இந்த வாக்குகள் சிறிலங்கா அரசுக்கும் சர்வதேயத்துக்கும் ஒரு காத்திரமானதும் முக்கியமானதுமான செய்தியை தெரிவிக்கும். கனடாவிலும் ஏனைய நாடுகளிலும் வாழும் புலம்பெயர் தமிழர் வட மாகாணத்தில் வாழும் தங்கள் உறவினர் நண்பர்களை எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்க ஊக்கப்படுத்துமாறு கனடியத் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுக்கிறது. அத்தோடு வட மாகாணத்துக்கு வெளியே வாழும் வட மாகாண வாக்காளர்களையும் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறது.

வன்முறை, இடையூறுகள் மற்றும் கள்ள வாக்குகளின் காரணமாகத் தமிழர்களின் சனநாயக உரிமை பெரும் ஆபத்துக்குள்ளாகி இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களையும் ஆதரவாளர்களையும் சிறிலங்கா இராணுவமும் காவற்துறையும் இடையூறு செய்வது தொடர்பாக தேர்தற் கண்காணிப்புக் குழுக்கள் பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தற் பரப்புரைகளைத் தடுக்கும் வகையிலேயே இவை அமைந்திருக்கின்றன. மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான இத்தகைய திட்டமிட்ட செயற்பாடுகளைக் கனடியத் தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.

வடக்கில் வாழும் தமிழர்கள் சிறிலங்கா அரசின் எந்தவித இடையூமின்றித் தேர்தலில் வாக்களிப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனக் கனடியத் தமிழர் பேரவையின் தேசியப் பேச்சாளர் திரு டேவிட் பூபாலபிள்ளை தெரிவித்தார். தமிழரின் சுய நிர்ணய உரிமைளைத் திட்டமிட்டுப் பறிக்கும் சிறிலங்கா அரசின் செயல்களைத் தடுத்து நிறுத்த வேண்டியது சர்வதேசத்தின் கடமை எனவும் அவர் தெரிவித்தார்.

முந்தைய செய்திஎஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்திற்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்திற்கும் இடையில் ஒப்பந்தம்.
அடுத்த செய்திவட மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களுக்கு தமிழ் சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் விடுக்கும் வேண்டுகோள்!