ஆளுனர் நீக்கம், இராணுவ தலையீட்டை குறைப்பது தொடர்பில் அரசுடன் விரைவில் பேச்சு – சி.வி. விக்னேஸ்வரன்

27

வடக்கில், இராணுவத் தலையீட்டைக் குறைப்பது தொடர்பாகவும், ஆளுனரை மாற்றுவது தொடர்பாகவும், சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சு நடத்தப் போவதாக, வடக்கு மாகாண முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், வடக்கு மாகாணசபைக்கு அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பாக மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் பேச்சு நடத்த விருப்பம் கொண்டுள்ளதாக கூறியுள்ளார். வடக்கில் இராணுவத் தலையீட்டைக் குறைப்பது தொடர்பாகவும், வடக்கில் ஆளுனராகத் தற்போது பணியாற்றும் முன்னாள் இராணுவ அதிகாரியை நீக்குவது தொடர்பாகவும், முன்னுரிமை கொடுத்து பேசப் போவதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமது சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்துவதற்கான ஆணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, தமிழ் மக்கள் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், எனவே வடக்கிலுள்ள மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு, கிழக்கிலுள்ள மக்கள் எப்போதெல்லாம் தமது அரசியல் உரிமைக்காக போராட்டம் நடத்தினரோ, அப்போதெல்லாம் அவர்கள் விடுதலைப் புலிகளாக அடையாளப்படுத்தப்பட்டனர். ஆனால், தமிழர்களின் அரசியல் பிரச்சினைகள், விடுதலைப் புலிகள் தோன்றுவதற்கு முன்னரே இருந்து வந்துள்ளது. எனவே, சிறிலங்கா அரசாங்கம், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை, விடுதலைப் புலிகளுடனோ, வேறு எவருடனோ தொடர்புபடுத்தி, தவறாக வழிநடத்தக் கூடாது. ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண அரசு, அதிகாரப்பகிர்வு தொடர்பாக மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் பேச்சு நடத்த தயாராகி வருகிறது.

புதிய அரசாங்கம், மனித உரிமை நிலையை உறுதியாகப் பேணவும், அபிவிருத்திச் செயற்பாடுகளை முன்னெடுக்கவும், அதிகாரங்களை பகிர்ந்து குறிப்பாக, காணி, காவல்துறை அதிகாரங்களைப் பகிர்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் உதவ வேண்டும். எமது ஒருமைப்பாடு, அடையாளம் என்பனவற்றைப் பேணியவாறு, வடக்கை அபிவிருத்தி செய்ய சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் எல்லா நல்ல முயற்சிகளுக்கும் ஆதரவு வழங்குவோம்.

வடக்கு மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள், மோதல் போக்கை கடைப்பிடிக்காமல், மாகாண ஆட்சிக்கு உதவியாகச் செயற்பட வேண்டும். தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க எதிர்பார்த்துள்ளேன், எனது முதல் வெளிநாட்டுப் பயணம் அவரைச் சந்திப்பதற்கான பயணமாகவே இருக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

முந்தைய செய்தி‘அனந்தி வீட்டைத் தாக்கியது ராணுவமே என்பதற்கு நம்பகமான அடிப்படை இருக்கிறது’ – என்.கோபால்சாமி
அடுத்த செய்திஇறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கையிடம் ஐ.நா தோல்வியடைந்துவிட்டது! – பான் கீ மூன்