‘அனந்தி வீட்டைத் தாக்கியது ராணுவமே என்பதற்கு நம்பகமான அடிப்படை இருக்கிறது’ – என்.கோபால்சாமி

19

இலங்கையின் வட மாகாணத் தேர்தல்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராகப் போட்டியிட்ட அனந்தி சசிதரனின் வீடு தாக்கப்பட்ட சம்பவத்தில் இலங்கை ராணுவமே ஈடுபட்டது என்பது 100க்கு 101 சதவீதம் உறுதியாகச் சொல்ல முடியும் என்று தான் தெரிவித்த கருத்துக்களுக்கு நம்பகமான அடிப்படை இருப்பதாக , அத்தேர்தலைப் பார்வையிடச் சென்ற, தெற்காசியக் கண்காணிப்பாளர்கள் குழுவினரின் தலைவரான, இந்தியாவின் ஓய்வு பெற்ற தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி, கூறினார்.

தமிழோசைக்கு அளித்த பேட்டியில், அச்சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தன்னிடம் அது குறித்து கூறியதன் அடிப்படையிலேயே இந்த கருத்தை தான் வெளியிட்டதாகக் கூறினார். ஆனால் இலங்கை ராணுவத்திடம் இது குறித்து கருத்துக் கேட்கவேண்டிய அவசியம் இருப்பதாகத் தனக்குத் தோன்றவில்லை என்பதால், அதன் கருத்தை தான் கேட்கவில்லை என்றார். வட மாகாணத்தில் ராணுவப் பிரசன்னம் அதிகமாக இருப்பதாகக் கண்காணிப்பாளர்கள் தெரிவித்திருப்பது பற்றிக் கேட்டதற்கு பதிலளித்த அவர், இது குறித்து எதிர்க்கட்சிகள் தமக்குத் தெரிவித்த கருத்துக்களையே கண்காணிப்பாளர்கள் தெரிவித்ததாக அவர் கூறினார்.

இலங்கைத் தேர்தல் ஆணையமும், மாகாண மற்றும் உள்ளூர் அதிகாரிகளும் தேர்தலை நியாயமாகவே நடத்தினர் என்று அவர் கூறினர். ஆனால் தேர்தலை நியாயமாக நடத்துவதற்கு இலங்கைத் தேர்தல் ஆணையத்துக்கு போதிய அதிகாரம் இல்லை என்றும் அவர் கூறினார். இது குறித்து இலங்கை தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

-BBC-

முந்தைய செய்திநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆதரவில் கனடாவில் துறைவல்லுநர் பங்கேற்கும் மாநாடு நடைபெறவுள்ளன.
அடுத்த செய்திஆளுனர் நீக்கம், இராணுவ தலையீட்டை குறைப்பது தொடர்பில் அரசுடன் விரைவில் பேச்சு – சி.வி. விக்னேஸ்வரன்