யாழில் புத்தகத் திருவிழா அழைப்பை பபாசி நிராகரிக்க வேண்டும்.

37

யாழில் புத்தகத் திருவிழா அழைப்பை பபாசி நிராகரிக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சி கோரிக்கை 

யாழ்ப்பாணம் நகரில் தமிழ்ப் புத்தகத் திருவிழா நடத்த வருமாறு அங்கு வாழும் தமிழர்கள் கேட்டுக்கொண்டதாகவும், அதுகுறித்து தங்களது உறுப்பினர்களின் கருத்தறிய வரும் 27ஆம் தேதி சென்னை தியாகராயர் நகரில் ஒரு கூட்டத்தையும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) ஏற்பாடு செய்துள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது.

யாழ்ப்பாணத்தில் இந்த புத்தக விழாவை நடத்த தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தருவதற்கு யாழ்ப்பாண மாவட்ட நிர்வாகம், யாழ்ப்பாணம் மாநகராட்சி ஆகியன மட்டுமின்றி, யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் இந்திய துணைத் தூதரகமும் முன்வந்திருப்பதாக, தனது உறுப்புனர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பபாசி அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த புத்தக விழாவை செப்டம்பர் மாத இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தமிழினத்தை திட்டமிட்டு ஏமாற்றும் சிங்கள பெளத்த இனவாத இலங்கை அரசின் மோசடியாகும். இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்குப் பகுதியில், அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் அமைதியாகவும், மகிழ்வுடனும் வாழ்கின்றார்கள் என்பதை உலகிற்கு காட்டுவதற்காக இப்படிப்பட்ட ஒரு ஏற்பாட்டில் இலங்கை அரசு இறங்கியுள்ளது. இதன் பின்னணியில் தமிழினத்தைக் காட்டிக்கொடுத்துவரும் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இருப்பதும் எங்களுக்குத் தெரியவந்துள்ளது.

வரும் நவம்பர் மாதம் இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெறவுள்ள பொதுநலவாய (காமன்வெல்த்) மாநாட்டில் கலந்துகொள்ள வரும் அயல் நாட்டு தலைவர்களுக்கு படம் போட்டுக்காட்ட இப்படிப்பட்ட ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்கிறது இலங்கை அரசு. இதற்கு யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் இந்தியத் தூதரகம் உதவ முன்வந்துள்ளது என்கிற ஒரு செய்தியே, அங்கு தமிழர்கள் மீது இலங்கை இராணுவம் நடத்திவரும் ஒடுக்குமுறையை மறைப்பதற்கான திட்டம் என்பதற்கான ஆதாரமாகும்.
தமிழ் மொழியின், அதன் வரலாற்றின் காலப்பெட்டகமாகத் திகழ்ந்த யாழ்ப்பாணம் பொது நூலகத்தை எரித்து சாம்பலாக்கிய சிங்கள இனவாதிகள் தமிழ்ப் புத்தக விழா எடுக்க அனுமதிக்கிறார்களா? வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள நகரங்கள், கிராமங்களின் பெயர்களையெல்லாம் சிங்கள மொழியில் மாற்றிக்கொண்டிருக்கும் இனவாத அரசுக்கு தமிழ் மொழி மீது அக்கறை வந்துள்ளதா? முள்வேலி முகாம்களில் இருந்து வெளியேற்றப்பட்ட 2 இலட்சம் மக்களை தங்கள் வாழ்விடங்களில் குடியேற்றாமல், காடுகளை அழித்து புதிதாக கிராமங்களை உருவாக்கி தங்க வைக்கும் அந்த சிங்கள இனவாதிகளுக்கு தமிழனின் மொழி மீது அக்கறை பிறந்துள்ளதா? இன்றுவரை தமிழர்களுக்கு காவல்துறை, காணி, போக்குவரத்து நடத்தும் அதிகாரங்களைக் கூட தர மறுக்கும் ராஜபக்ச அரசும், அதன் கைத்தடிகளாக இருக்கும் டக்ளஸ்களுக்கும் தமிழ் மொழி மீது அக்கறை பிறந்துள்ளதா? சர்வதேசத்தை ஏமாற்ற திட்டமிடப்படும் இந்த நாடகத்திற்கு பபாசி துணை போகலாமா?
ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் கண்காட்சிகளை நடத்தி தமிழினத்தின் வாசிப்பு ஆர்வத்தை பெருக்கிவரும் பபாசி அமைப்பு, தமிழினத்தை அழித்தொழித்த ஒரு இனவாத அரசின் பிடியில் சிக்கி, நாளும் அழிக்கப்பட்டுவரும் ஒரு இனத்தின் நிலையை உலகிற்கு கூற, ஈழத்தில் நடந்துவரும் தமிழின அழித்தல் தொடர்பான புத்தகங்களை மட்டுமே விற்கும் புத்தகக் காட்சியை நடத்த முன்வர வேண்டுமே தவிர, தமிழினத்தை திட்டமிட்டு அழித்த சிங்கள பெளத்த இனவெறி அரசின் கபட நாடகத்திற்கு துணை போகக் கூடாது. இதற்காக ஒரு கூட்டத்தைக் கூட்டும் திட்டத்தை பபாசி கைவிட வேண்டும். தமிழினத்தை அழித்த உங்கள் நாட்டில் தமிழ்ப் புத்தக விழாவை நடத்த நாங்கள் வெட்கப்படுகிறோம் என்று யார் உங்களுக்கு அழைப்பு விடுத்தார்களோ அவர்களுக்கு பதில் அனுப்புங்கள். அதுவே தமிழினத்தின் நியாயமான உணர்வை வெளிப்படுத்தும்.

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

முந்தைய செய்திநெல்லை மேற்கு மாவட்டத்தில் திருமுனை பிரசாரம் மற்றும் பொதுகூட்டம்
அடுத்த செய்திகும்பகோணம் தீ விபத்தில் பலியான பள்ளி குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.