தினந்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனார் மறைவுக்கு உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் இரங்கல்

81

தினந்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனார் மறைவுக்கு

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் இரங்கல்

தமிழர் தந்தை சி.ப. ஆதித்தனார் அவர்களோடு பழகிய நாட்கள் மறக்க முடியாதவை. என்னை உருவாக்கியவர்களில் ஒருவராக அவரும் இருந்தார். தமிழ்நாட்டில் தமிழ்த் தேசியத்தை விதைத்தவர். அவருடைய பாசத்திற்குரிய பிள்ளையான சிவந்தி ஆதித்தனுடைய மறைவு ஈடு செய்ய முடியாததாகும்.

அய்யா சி.பா. ஆதித்தனார் உருவாக்கிய நிறுவனங்களை தொடர்ந்து வளர்த்து; காத்து வந்தவர். தென் தமிழ்நாட்டில் கல்விநிலையில் பின் தங்கிய பிற்பட்ட மக்களுக்கு உறுதுணையாக அய்யா ஆதித்தனார் தொடங்கிய கல்லூரிகளை மேலும் விரிவுப் படுத்தி பொறியியல் கல்லூரி போன்றவற்றை நிறுவி அறிவியல் வளர்த்தவர்.

அய்யா தொடங்கிய தினந்தந்தி இதழ் தொடக்கம், அத்துடன் இணைந்த சிற்றிதழ்கள் அனைத்தையும் சிறப்புடன் நடத்தியவர்.

தமிழ்நாட்டின் கலை, பண்பாட்டின் அடையாளங்களான திருச்செந்தூர் முருகன் கோயில் போன்ற பண்டையக் கோயில்கள் பலவற்றின் புத்துருவாக் கத்திற்குத் துணை நின்றவர்.

தமிழ்நாட்டின் சிறந்த உயர்ந்த இலக்கியர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி சிறப்பித்தவர். சிவந்தி ஆதித்தன் கையால் உதவி பெறாத தமிழ்நாட்டில் அமைப்புகள், இயக்கங்கள், மன்றங்கள் என எதுவுமே இல்லை.

மார்வாடி, மலையாளி, குசராத்தி, சேட்டு, என தமிழர் நகரங்களில் குவிந்துள்ள நிலையில், வணிகத்துறையில் தலைமிர்ந்த தமிழராக விளங்கி, தமிழர்க்குப் பெருமை சேர்த்தவர்.

தமிழீழ, விடுதலைப் போராட்டத்தில் ஆர்வம் உள்ளவராகவும், அவர்களின் துயங்களை தாங்க முடியாது கண்ணீர் சிந்துபவராகவும் அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற துடிப்புள்ளவராகவும் இருந்தார் என்பதை நான் அறிவேன்.

அய்யாவின் பிள்ளை சிவந்தி ஆதித்தன் அவர்களின் மறைவுக்கு, தமிழீழத்திலும், தமிழ்நாட்டிலும், உலகெங்கிலும் சிதறி வாழும் ஈழத்தமிழர் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

காசி ஆனந்தன்