ஈடிணையற்ற பன்முகத் திறன்கொண்ட நிர்வாகியை தமிழினம் இழந்துவிட்டது

30

ஈடிணையற்ற பன்முகத் திறன்கொண்ட நிர்வாகியை தமிழினம் இழந்துவிட்டது: நாம் தமிழர் கட்சி இரங்கல்

தினந்தந்தி நாளிதழின் அதிபரும், தமிழ்நாட்டின் தலைசிறந்த கல்வியாளரும், இந்திய அளவில் விளையாட்டுத் துறையில் ஒரு தேர்ந்த நிர்வாகியாகவும், வழிகாட்டியாகவும, விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமும், பயிற்சியும் அளித்து அவர்களின் திறனை சர்வதேச அளவில் பிரகாசிக்கச் செய்த பெருந்தமிழர், தமிழினத்தின் பெருமைக்குரிய மனிதர் பா.சிவந்தி ஆதித்தன் அவர்கள் மறைவுற்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவருடைய மறைவுக்கு நாம் தமிழர் கட்சி தனது இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு, தமிழினத்தின் பெருமைமிக்க பெருமகனாகத் திகந்த அவருக்கு தனது புகழ் வணக்கத்தையும் உரித்தாக்குகிறது.

தமிழருக்கென்று ஒரு நாளிதழாக தினத்தந்தியைத் தொடங்கி, எழுத்துக்கூட்டி படிக்கும் திறன் கொண்ட ஒவ்வொரு தமிழனும் நாட்டு நடப்பை தெரிந்துகொள்ள வகைசெய்த தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாருக்கு மகனாய் பிறந்த பெருமையை பெற்றாலும், தனது உழைப்பாலும், தெளிந்த சிந்தனையாலும் தன்னைத்தானே உயர்த்திக்கொண்டவர் சிவந்தி ஆதித்தனார். அவருடைய உழைப்பிற்கும் திறனுக்கு அத்தாட்சி, இன்றைய இந்தியாவில் மிக அதிகமான வாசகர்களைக் கொண்ட நாளிதழாக தினத்தந்தி வளர்ந்திருப்பதாகும். அதுமட்டுமல்ல, தினந்தந்தி நாளிதழில் விளம்பரம் தந்தால் அது தமிழினத்தின் அனைத்து பிரிவினரிடமும் சென்று சேர்ந்துவிடும் என்கிற உறுதியான தளத்திற்கு அது உயர்ந்திருப்பது சிவந்தியாரின் நிர்வாகத் திறனாகும். காலத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப தினத்தந்தி நாளிதழின் பக்கங்களையும், பார்வையையும் கூட்டி மெருகேற்றிய பெருமை இவரையே சாரும்.

பத்திரிக்கைத் துறையோடு நின்றுவிடாமல், விளையாட்டிலும், கல்வியிலும் சிவந்தியார் காட்டிய ஈடுபாடு நிகரற்றதாகும். இந்திய அளவில் பேசப்படும் தலைசிறந்த விளையாட்டுத் துறை நிர்வாகியாக, கறைபடாத கரத்திற்கு சொந்தக்காரராக இறுதிவரை புகழோடு நின்றவர். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக சிவந்தியார் இருந்த காலத்தில் எவ்வித சர்ச்சையுமின்றி அச்சங்கம் விளங்கியதுடன், பல நூற்றுக்கணக்கான வீரர்கள் சர்வதேச வாய்ப்புகளை பெற்று பிரகாசித்தனர்.

இப்படி பன்முகத் திறனுடன் வாழ்ந்து, தனது தந்தைக்கும், தமிழினத்திற்கும் பெருமை சேர்த்த பெருமகன் பா.சிவந்தி ஆதித்தனாரின் மறைவினால் அவரது குடும்பத்தினருக்கு ஏற்பட்டுள்ள துயரத்தை நாம் தமிழர் கட்சியும் பகிர்ந்துகொள்கிறது. அவர் விட்டுச் சென்றுள்ள பொறுப்பு மிக அதிகமானதாகும். அவருடைய இடத்தை இட்டு நிரப்பு ஆற்றல் வாய்ந்த மகனை அவர் விட்டுச் சென்றுள்ளார் என்பது ஆறுதலான விடயமாகும்.

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

முந்தைய செய்திநூல் விலையேற்றத்தை கட்டுப்படுத்தக் கோரி மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திதினந்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனார் மறைவுக்கு உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் இரங்கல்