திருமானூர் பாலத்தை சீர்படுத்த நாம் தமிழர் கட்சியின் நூதன போராட்டம்!!

202

அரியலூர், ஜூலை 15: அரியலூர் மாவட்டம், திருமானூரில் கொள்ளிடம் ஆற்றில் உள்ள பழுதடைந்த பாலத்தைச் சீரமைக்க நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் – தஞ்சாவூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில், திருமானுரில் கொள்ளிடம் ஆற்றில் பாலம் உள்ளது. இந்தப் பாலம் 1973-ம் ஆண்டு கட்டப்பட்டது. சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளம் உள்ள இந்தப் பாலம் 25-க்கும் அதிகமான தூண்கள் மூலம் கட்டப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாலத்தை ரப்பர் உள்ளிட்ட பொருள்களை கொண்டு நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைப்பது வழக்கம்.
இந்தப் பாலத்தின் வழியாக கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணல் குவாரிகளிலிருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகள் மணல் எடுத்துச் செல்கின்றன. இதனால் இந்தப் பாலம் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது.
சேதமடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என திருமானூர் பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் பாலம் பழுது பார்க்கப்படவில்லை. இதையடுத்து, நாம் தமிழர் கட்சியினர், பொதுமக்களுடன் இணைந்து பாலத்தை சீரமைக்கப்போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி, நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் முத்துக்குமரன் தலைமையிலும், சமூக நல ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் மு. வரதராசன், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நற்பணி மன்றத் தலைவர் சந்திரசேகர், பொருளாளர் சேகர், மாணிக்கவாசகர் அறக்கட்டளை நிர்வாகி பாஸ்கர் மற்றும் திருமானூர் பொதுமக்களும் திருமானூர் பேருந்து நிலையத்தில் மண்வெட்டி, சிமென்ட், மணல், ஜல்லி உள்ளிட்ட பொருள்களுடன் பாலத்தை சீரமைப்பதற்கு ஊர்வலமாகச் சென்றனர்.
பாலத்துக்கு முன்பு போலீஸôர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளர் பானுதாசன், பாலத்தை சீரமைக்க ரூ. 95 லட்சத்துக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. பாலப் பணிகள் உடனே தொடங்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கூறியது: பாலத்தை சீரமைக்கும்படி ஓராண்டாக கோரிக்கை விடுத்தும் சீரமைக்கப்படவில்லை. இதனால், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் இணைப்புகளுக்கு இடையே உள்ள பள்ளத்தில் விழுந்து காயம் அடைகின்றனர் என்றனர்.

நன்றி – தினமணி

முந்தைய செய்திமூன்று தமிழர்களின் கருணை மனுவை ஏற்கும் வாக்குறுதியைப் பெற வேண்டும்: நாம் தமிழர் கட்சி
அடுத்த செய்திஈழ இன படுகொலை விழிப்புணர்​வு ஊர்தி பயணம் – நிழற்படங்கள் இணைப்பு!!!!