மூன்று தமிழர்களின் கருணை மனுவை ஏற்கும் வாக்குறுதியைப் பெற வேண்டும்: நாம் தமிழர் கட்சி

14

மூன்று தமிழர்களின் கருணை மனுவை ஏற்க வேண்டும் என்ற உறுதிமொழியை கருணாநிதி பெற வேண்டும்: நாம் தமிழர் கட்சி

குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் முன்மொழியப்பட்டுள்ள வேட்பாளரான பிரணாப் முகர்ஜி வெற்றி பெறுவது நிச்சயமாகிவிட்ட நிலையில், தமிழ்நாட்டு மக்களின் உணர்வு்களுக்கு இதற்கு மேலாவது பிரணாப் முகர்ஜி மதிப்பளிப்பாரா என்ற கேள்வி எழுகிறது.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தனது பிரச்சாரத்தை தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இருந்து தொடங்கிய பிரணாப் முகர்ஜிக்கு, காங்கிரஸ் தலைமையிலான ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள தி.மு.க.வே முதன் முதலில் ஆதரவு தெரிவித்தது. இப்போது தமிழ்நாட்டின் சட்டமன்றக் கட்சிகளில் பலவும் பிரணாப் முகர்ஜிக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளன.

இந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற்று குடியரசுத் தலைவர் பொறுப்பை ஏற்ற பின், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு பிரணாப் முகர்ஜி மதிப்பளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுவது இயற்கையானதே. ஈழத்தில் தமிழினத்தை அழித்தொழித்த இனப் படுகொலைப் போரின் சூத்ரதாரியாக செயல்பட்டது மட்டுமின்றி, அந்தப் போரையும், இனவெறி ராஜபக்ச அரசுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் நியாயப்படுத்தி பேசியவர் பிரணாப் முகர்ஜி. அயலுறவு அமைச்சராக பிரணாப் முகர்ஜி இருந்தபோதுதான் கச்சத் தீவு கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் மீது பல முறை சிங்கள கடற்படை தாக்குதல் நடத்தியது, அதில் பல மீனவர்கள் கொல்லப்பட்டனர். தமிழினத்தின் உரிமைகளைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாத, தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத பிரணாப் முகர்ஜிக்குத்தான், தாங்களே தமிழினத்திற்கு அரணாக இருப்பவர்கள் என்று கூறிக்கொள்ளும் தி.மு.க. முதலில் முன்வந்த ஆதரவு அளித்துள்ளது.

பிரணாப் முகர்ஜிதான் இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவர் என்று உறுதியாகிவிட்ட நிலையில், அவரிடமிருந்து தி.மு.க. தலைவர் கருணாநிதியும், அவருக்கு வாக்களிக்கப்போவதாக அறிவித்துள்ள தமிழ்நாட்டின் மற்ற சட்டமன்றக் கட்சிகளும் ஒரு வாக்குறுதியைப் பெற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது. ராஜீவ் கொலை வழக்கில் அநியாயமாக மரண தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 22 ஆண்டுகளாக சிறையில் வாடிவரும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று தம்பிமார்களின் கருணை மனுவை ஏற்று அவர்களை மரண தண்டனையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பிரணாப் முகர்ஜியுடன் இருந்து ஒரு வாக்குறுதியை இக்கட்சிகள் பெற வேண்டும். இந்த மூன்று தம்பிகளின் கருணை மனுக்களை மறு பரிசீலனை செய்து, அவர்களின் தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியபோது, அதற்கு ஆதரவாக நின்ற இந்தக் கட்சிகள், இப்போது அதற்கான வாக்குறுதியை பெறுவதே சரியான அரசியல் அணுகுமுறையாக இருக்கும்.

இப்படியொரு வாக்குறுதியை பெற்றப் பிறகு பிரணாப் முகர்ஜிக்கு வாக்களித்தால், அது தமிழர்களின் இன உணர்வை பிரதிபலிப்பதாக இருக்கும். தமிழின உரிமைப் போராட்டங்களும், தமிழரின் அரசியலும் வேறுபட்டதல்ல என்பதை டெல்லி தலைவர்களுக்கு உணர்த்துவதாகவும் இருக்கும்.

முந்தைய செய்திகும்பகோணத்​தில் நடைப்பெற்ற நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்​கள் தேர்வு மற்றும் கலந்தாய்வு​க் கூட்டம் – புகைப்படங்கள் இணைப்பு!!
அடுத்த செய்திதிருமானூர் பாலத்தை சீர்படுத்த நாம் தமிழர் கட்சியின் நூதன போராட்டம்!!