கூடங்குளம் போராட்டக் குழுவினருடன் அரசு பேச வேண்டும்: நாம் தமிழர் கட்சி

24

கூடங்குளம் போராட்டக் குழுவினருடன் அரசு பேச வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து கடந்த 9 மாதங்களாள அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இரஷ்ய நாட்டில் இருந்து பெற்று இந்திய அணு சக்திக் கழகம் நிறுவியுள்ள அந்த இரண்டு அணு உலைகளும், இயற்கையால் ஏற்படும் பேரிடர் காரணமாகவோ அல்லது அணுத் தொழில்நுட்பத்திலுள்ள ஆபத்தின் விளைவாகோ ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதனால் தங்களுடைய உயிருக்கும், உடமைகளுக்கும், வாழ்வாதரங்களுக்கும் நிரந்தர அழிவு ஏற்பட்டுவிடும் என்கிற அச்சத்தின் காரணமாகவே அவர்களின் போராட்டம் இவ்வளவு நீண்ட காலத்திற்கு நடந்து வருகிறது.

இப்போது 11 கோரிக்கைகளை முன்வைத்து அப்பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் போராடி வருகின்றனர். அவர்களில் 340க்கும் மேற்பட்டவர்கள் கடந்த 8 நாட்களாக காலவரையற்ற பட்டிணிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் நூற்றுக்கணக்கான பெண்களும் உள்ளனர். பட்டிணிப் போராட்டம் நடத்திவரும் அவர்களின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இதற்கு மேலும் இப்பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் மெளனம் சாதிப்பது நியாயமற்றதாகும். அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை நியாய உணர்வுடைய எவரும் ஏற்றுக்கொள்வார்கள்.

கூடங்குளம் அணு மின் நிலையங்கள் அமைந்துள்ள பகுதியின் புவி அமைப்பு, நீரியல், நிலநடுக்க அபாயம், அணு உலைகளின் செயல்பாட்டால் அப்பகுதியில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஆகியனபற்றி சுதந்திரமான நிபுணர் குழுக்களை அமைத்து ஆய்வு செய்திடல் வேண்டும் என்பதே அவர்களின் மிக முக்கியமாக கோரிக்கையாகும். இப்படிப்பட்ட ஆய்வுகள் செய்யப்படாமலேயே அங்கு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன என்பதே உண்மையாகும். இது இந்திய மத்திய அரசு அமைத்துள்ள அணு சக்தித் தொடர்பான பேரிடர் ஆணையத்தின் விதி முறைகளுக்கு எதிரானதாகும். இந்திய அரசின் பேரிடர் தடுப்பு ஆணையத்தின் இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அணு உலை அமைக்கும் இடத்தில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்பான நடவடிக்கைகள் பலவும் கூடங்குளத்தில் செய்யப்படவில்லையென்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.

அது மட்டுமின்றி, சமூக எரிசக்தி தேவைக்காகவே அமைக்கப்பட்டுள்ள இந்த அணு உலைகள் அமைப்புத் தொடர்பாக இரஷ்ய நாட்டுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் விவரங்களை வெளியிட வேண்டும் என்று கூடங்குளம் மக்கள் போராட்டக் குழுவினர் கேட்பது எந்த விதத்திலும் தவறல்ல. இந்த அணு உலைகள் நாட்டின் பாதுகாப்புத் தொடர்பானவை அல்ல. அணு சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் அணு உலைகள்தான் இவை. எனவே அது தொடர்பான விவரங்களை வெளியிடுவதில் எந்தத் தடையும் இல்லை. இதைத்தான் தகவல் அறியும் ஆணையத்தின் தலைவரும் மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, கூடங்குளம் அணு உலைகளில் ஏதாவது விபத்து ஏற்பட்டால் அப்பகுதி மக்கள் மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் பற்றிய பயிற்சி அளிக்கபட வேண்டும் எனும் கோரிக்கையும் எல்லாவிதத்திலும் நியாயமானது என்பது மட்டுமின்றி, சட்டப் பூர்வமானது ஆகும்.

எனவே, கூடங்குளம் பகுதி மக்களின் அச்சத்தைப் போக்குவோம் என்று உறுதியளித்த மத்திய, மாநில அரசுகள், அவர்களின் நியாயமான இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியளிக்க வேண்டும். அணு சக்திக்கு எதிரான மக்கள் போராட்டக் குழுவினருடன் பேசி, அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், போராட்டத்தை வலிமையிழக்கச் செய்யும் வழிமுறைகளை அரசுகள் கடைபிடிக்குமானால், மக்களின் ஆதரவு பெற்று அமைந்த அரசுகளே அவர்களின் ஜனநாயகப் பூர்வமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அஞ்சுகின்றன என்றே மக்கள் கருதுவர். அரசுகளின் நடவடிக்கைகளால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள கசப்புணர்வு இனி வரும் தேர்தல்களில் பிரதிபலிக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது என்று சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்திபெருந்தமிழர் அயோத்தி தாசரின் 98-ஆவது நினைவுநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாலை அணிவிப்பு
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தின் சார்பில் சேப்பாக்கம் பகுதி தெருமுனைக்கூட்டம் மற்றும் கொடி ஏற்று விழா