மரணதண்டனைக்கு எதிராக வந்திருக்கும் அரவான் திரைப்படத்திற்கு சீமான் பாராட்டு

47

18வது நூற்றாண்டில் தென் தமிழ்நாட்டின் மலைப்பகுதியில் பல்வேறு கிராமங்களாக வாழ்ந்துவந்த தமிழ்க் குடிகளின் வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு ஒரு மிகச் சிறந்த, விறுவிறுப்பான திரைப்படத்தை அளித்துள்ளார் இயக்குனர் வசந்தபாலன்.

களவையே தங்கள் வாழ்க்கை வழியாகக் கொண்ட ஒரு கிராமத்தினர், அதிலும் ஒரு நேர்மையை கடைபிடித்து வாழ்ந்து வந்ததையும், களவாட அவர்கள் இடத்தைத் தேர்வு செய்வதையும், அவர்கள் களவாட திட்டமிட்ட வீட்டில் எத்தனை பேர் இருந்தாலும் தங்கள் களவுத் திட்டத்தை நேர்த்தியாக நிறைவேற்றுவதையும், எதிர்ப்பு வரும்போது தங்களுக்கே உரித்தான தற்காப்புக் கலையால் முறியடித்து மீள்வதையும் கற்பனை எதையும் சேர்க்காமல், வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில் நேர்த்தியாக அமைத்து திரைக்கதை தீட்டப்பட்டுள்ளது.

தாங்கள் கடைபிடித்து வாழும் களவு வாழ்க்கையிலும் சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியாவிட்டாலோ அல்லது குற்றம் ஏதும் இழைத்துவிட்டாலோ அதற்காக தங்கள் உயிரையே விலையாகத் தரும் இரண்டு நிகழ்வுகளை மையமாக வைத்தே திரைக்கதையை உருவாக்கியுள்ளார் வசந்தபாலன். பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம் என்பதுபோல், தனது இளம் மனைவியுடன் உறவு கொண்ட இளைஞனைக் கொன்றுவிட்டு அந்தப் பழியை கொலை நடந்த அந்த கிராமத்தினர் மீது சுமத்தி விடுகிறார் அப்பகுதி ஜமீன். என் ஊர்க்காரன் கொல்லப்பட்டதற்கு உன் ஊர்க்காரன் ஒருவனை பலி கொடு என்று அதே ஜமீன் நாட்டாமையாக வந்து தீர்ப்புக் கூறுகிறார். அது எப்படி நடக்கிறது என்பதையும், அந்த சோகத்திற்கு இடையேயும் தான் விரும்பியவனை கைபிடிக்கும் ஒரு காதலையும் அருமையாக கலந்து எடுத்துள்ளார் இயக்குனர். மனிதப் பலி என்பது அன்றைக்கு சமூக ஒழுக்கத்தைக் கடைபிடிக்க கையாளப்பட்டு இருந்த காலத்தை தழுவியது இத்திரைப்படம். நீண்ட நெடுங்காலமாக இருந்த மனிதப் பலியை நம்மை காலனியாக்கிய வெள்ளை அரசுதான் தடை செய்துள்ளது. ஆனால் அது இன்று தூக்கு தண்டனை என்ற பெயரில் மீண்டும் முளைத்துள்ளது என்று இயக்குனர் தனது இறுதிச் செய்தியாக கூறியிருப்பது பாராட்டத்தக்க சிந்தனை.

இத்திரைப்படம் முழுவதும் மலைப் பகுதிகளில் இயற்கை எழில் செழித்த பகுதிகளில் மிகுந்த கவனத்துடன், சீறிய முறையில் படமாக்கப்பட்டுள்ளது. கொஞ்சம் கூட பழைமை மாறாமல் திரைக்கதைக்கு ஏற்றவாறு படப்பிடிப்பும் அமைந்துள்ளது. படத்தில் அமைந்துள்ள நகைச் சுவை காட்சிகள் கூட கதையோடு இணைந்து வேடிக்கையாக அமைந்துள்ளது. வீட்டில் களவு நடந்துக்கொண்டிருந்தபோது வரும் ஒசையைக் கேட்ட மனைவி தூக்கத்தில் ஆழ்ந்தபடியே கணவனை காலால் உதைத்து என்னவென்று பார்க்கச் சொல்வதும், அவன் பதிலுக்கு அவளை பலமாக உதைத்துவிட்டு தொடர்ந்து தூங்குவதுன் மிகச் சிறந்த காட்சியமைப்பு.

படத்தில் நடித்த கலைஞர்கள் அனைவரும் தங்கள் பங்கை மிகச் சிறப்பாக செய்துள்ளனர். மலைப் பகுதியில் இரவு நேர அழகையும், அதே பின்னணியில் ஒரு காதல் பாட்டை நேர்த்தியாக அமைத்து படமாக்கியுள்ளனர். ஹாலிவுட்டில் மட்டும்தான் இப்படிப்பட்ட படங்கள் எடுக்க முடியும் என்பதை வசந்தபாலன் முறியடித்துள்ளார். தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு நிச்சயமான இடத்தை இப்படம் பிடித்துள்ளது.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு சமூகத்திற்கு ஒரு வரலாற்றுப் பின்னணி உள்ளது. அது அந்தக் காலத்தைச் சார்ந்து எவ்வாறு நின்றது என்பதை மிகுந்த சிரத்தையுடன் கொடுத்துள்ள வசந்தபாலனை பாராட்டுகிறேன். ஒவ்வொரு தமிழனும் மிகச் சிறந்த இந்தப் படைப்பை கண்டு மகிழ்ந்திட வேண்டும். நினைவில் நிற்கும் சிறந்த திரைப்படம்.

செந்தமிழன் சீமான்

முந்தைய செய்திஇலண்டனில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டம்‏!
அடுத்த செய்திகன்னியாகுமரி மீனவர்களை தமிழக முதல்வர் விடுவிக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சி கோரிக்கை