வண்ணதாசனுக்கு கிடைத்துள்ள சாகித்திய அகாதமி விருது, தமிழ் படைப்புலகத்திற்குக் கிடைத்த பெருமை! -சீமான் புகழாரம்

69

வண்ணதாசனுக்கு கிடைத்துள்ள சாகித்திய அகாதமி விருது தமிழ் படைப்புலகத்திற்குக் கிடைத்த பெருமை!
-சீமான் புகழாரம்

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

தமிழ் நவீன இலக்கியத்தின் மாபெரும் ஆளுமையான அன்பிற்குரிய வண்ணதாசன் அவர்களுக்கு இந்திய அரசின் உயரிய இலக்கிய விருதான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டிருக்கும் செய்தியறிந்து மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன். வண்ணதாசன் என்ற பெயரில் சிறு கதைகளும், கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகளும் எழுதி வருகிற கல்யாணசுந்தரம் என்கிற வண்ணதாசன் பத்திற்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகளையும், புலரி, அந்நியமற்ற நதி, ஆதி போன்ற கவிதைத் தொகுப்புகளையும் எழுதி தமிழ் சிறுகதை உலகிற்கும், தமிழ் நவீன கவிதைகளுக்கும் பலம் சேர்த்தவர். புகழ்பெற்ற இலக்கிய ஆளுமை நெல்லை தி.கா.சி. மகனான கண்ணதாசன் ஆனந்த விகடனில் எழுதிய அகமும், புறமும் என்ற கட்டுரைத் தொகுதி புகழ்பெற்றதாகும். நீண்டகாலமாக எழுத்துப் பணியில் தொடர்ச்சியாகத் தம்மை ஈடுபடுத்திவரும் வண்ணதாசன் அவர்களுக்கு ‘ஒரு சிறுஓசை’ என்கிற சிறுகதை நூலுக்காக 2016ஆம் ஆண்டிற்குரிய சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டிருப்பது தமிழ் படைப்புலகத்திற்குக் கிடைத்த பெருமையாகும்.
மதிப்பிற்குரிய வண்ணதாசன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற இவ்விருது தாமதமானது என்றாலும், தகுதியானது. தமிழ் இலக்கிய ஆளுமை வண்ணதாசன் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது


22-12-2016
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திபுயலினால் பாதிக்கப்பட்டுள்ள கும்மிடிப்பூண்டி ஈழத்தமிழர் முகாமுக்கு உதவுங்கள்
அடுத்த செய்திநாம் தமிழர் அமெரிக்கா பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு