கன்னியாகுமரி மீனவர்களை தமிழக முதல்வர் விடுவிக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சி கோரிக்கை

28

அரபிக் கடலில் மீன் பிடிக்கச் சென்ற ஒரு கேரள மீனவர் உள்ளிட்ட கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்களை ஐயத்தின் அடிப்படையில் கைது செய்து கடந்த 9 நாட்களாக மராட்டிய மாநில காவல் துறையினர் சிறை வைத்துள்ளனர் என்கிற செய்தி வருத்தத்தையும் கவலையையும் அளிக்கிறது.

அரபிக் கடலில் தாங்கள் பிடித்த மீன்களை மும்பை சந்தையில் விற்றுவிட்டு மீண்டும் மீன் பிடிக்கச் சென்றபோது, இந்திய கடலோர காவற்படை, அவர்களை புலிகளாக இருப்பார்களோ என்ற ஐயத்தின் பேரில் மும்பை துறைமுகப் பகுதிக்குக் கொண்டு வந்து, விசாரணைக்காக மும்பை மாநகர காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளது. அவர்களின் அடையாளத்தை உறுதி செய்யாமல் விடுவிக்க மாட்டோம் என்று கூறி, இன்று வரை 9 நாட்களாக அவர்களின் படகுகளிலேயே சிறை வைத்து விசாரித்து வருகின்றனர் மும்பை யெல்லோ கேட் காவல் அதிகாரிகள். மும்பை மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழர் கேப்டன் தமிழ்ச் செல்வனும், நாம் தமிழர் கட்சியினரும், அவர்கள் யாவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள்தான் என்று உறுதியளித்த பின்னரும் காவல் துறை விடுவிக்க மறுத்து வரு்கிறது.

 அவர்கள் மீன் பிடிக்கச் சென்ற படகு எம்பெடாஎன்றழைக்கப்படும் மத்திய அரசின் மீன் வள மேம்பாட்டுத் துறையின் நிதியுதவியுடன் வாங்கப்பட்ட MPEDA TN/FV/ 01267/11 என்று எண்ணும், அது தமிழ்நாட்டுப் படகுதான் என்பதை உறுதி செய்யும் TN/16/MSD/709 என்ற எண்ணும் பொறிக்கப்பட்டுள்ளதை மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும் அவர்கள் தங்களிடமிருந்த அடையாளங்களையும் காட்டியுள்ளனர். அவைகள் போதாது என்று கூறி, தாங்கள் ஒரு காவல் குழுவை கன்னியாகுமரிக்கு அனுப்பி அவர்களின் அடையாளங்களை உறுதி செய்த பின்னர்தான் விடுவிக்க முடியும் என்று கூறி வருகின்றனர்.

இந்த மீனவர்களில் டைட்டஸ் (வயது 37), கார்லோஸ் (62), கிறிஸ்டோஃப் (60), விஜின் (20), சூசை அருள் (20), மனோஜ் (17), ரத்தீஸ் (17) ஆகியோர் குமரி மாவட்டம் விரவிபுட்டன் துறையைச் சேர்ந்தவர்கள், பீட்டர் (42) குமரி மாவட்டம் சின்னத் துறையைச் சேர்ந்தவர், நசார்ஸ் (45) கேரள மாநிலம் புதியத் துறையைச் சேர்ந்தவர் ஆவார். இவர்களைக் காணாமல் இவர்களின் குடும்பத்தார் வேதனையில் உள்ளனர்.

எனவே, இப்பிரச்சனையில் தமிழக முதலமைச்சர் அவர்கள் உடனடியாகத் தலையிட்டு, அந்த மீனவர்கள் அனைவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை உறுதி செய்து, உடனடியாக விடுவிக்குமாறு மராட்டிய மாநில அரசுக்கு எடுத்துக் கூறி விடுதலை செய்ய உதவ வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

முந்தைய செய்திமரணதண்டனைக்கு எதிராக வந்திருக்கும் அரவான் திரைப்படத்திற்கு சீமான் பாராட்டு
அடுத்த செய்திபோர்க்குற்ற விசாரணையில் இருந்து திசை திருப்புகிறார் பிரதமர் – சீமான் அறிக்கை