பிலிப்பைன்ஸ் நாட்டின் கிளர்ச்சியாளர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு!..[காணொளி இணைக்கபட்டுள்ளது]

28

பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனநாயகத்துக்காக நீண்ட நாட்களாகப் போராடிவரும் இடதுசாரியான பேராசிரியர் ஜோசே மரியா சிசன் அவர்கள் ஈழத் தமிழர்கள் தொடர்பாக வரலாறு முக்கியத்துவம்வாய்ந்த தமது கருத்துக்களை பதிவுசெய்துள்ளனர். பிலிப்பைன்ஸ் கம்மியூனிஸ்ட் கட்சியின் முக்கியஸ்தரும், அந் நாட்டின் புதிய மக்கள் இராணுவத்தை உருவாக்கியவர்களில் ஒருவருமான பேராசிரியர் சிசன் அவர்கள் தமிழ் நெட் இணையத்துக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்.

அதில் அவர் ஈழத் தமிழர்களின் இறையாண்மை தொடர்பாகவும் மற்றும் இலங்கை அரசின் காட்டுமிராண்டித் தனத்தையும் பற்றி தனது கருத்துக்களை தெள்ளத்தெளிவாகக் கூறியுள்ளார். இவர் வெளியிடும் கருத்துக்கள் பல உலக நாடுகளால் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் இவர் ஈழத் தமிழர்கள் தொடர்பாக தற்போது வெளியிட்டுள்ள கருத்துக்கள் உலகில் உள்ள பல்லின மக்கள் மற்றும் ராஜதந்திரிகளால் உன்னிப்பாக அவதானிக்கப்படும் என்பதிலும் ஐயமில்லை.
ஈழத் தமிழர்கள் ஒரு தேசிய இனம் இவர்களுக்கு என்று ஒரு இறைமை இருக்கிறது, அதனை தமிழர்கள் கையில் எடுத்தால்தான் அவர்கள் இன அழிப்பில் இருந்து காக்கப்படுவார்கள் என்ற ஆணித்தரமான கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். ஒரு நாட்டிற்கு இருக்கும் இறைமை போல ஈழத் தமிழ் மக்களுக்கும் ஒரு இறைமை இருக்கிறது என இவர் குறிப்பிட்டுள்ளார். ஈழப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் ஈரோஸ் அமைப்பானது இவருடன் தொடர்புகளைப் பேணி வந்தமையும் குறிப்பிடத்தக்க விடையமாகும். விடுதலைப் புலிகள் பல்வேறுபட்ட அழுத்தங்களுக்கு மத்தியில் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர் எனவும் ஆனால் இலங்கை அரசு அவர்கள் முன்வைத்த கோரிக்கையை முறையாக ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் பேராசிரியர் சிசன் மேலும் தெரிவித்தார்.

பிலிப்பைன்ஸ் கம்மியூனிஸ்ட் கட்சிக்கு ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிப் படை ஒன்றும் உள்ளது. அதனை புதிய மக்கள் இராணுவம் என்று அழைப்பார்கள். இவ்வமைப்பை அமெரிக்கா 2002ம் ஆண்டு தீவிரவாதிகளின் பட்டியலில் இட்டது. இதனை அடுத்து ஐரோப்பிய யூனியனும் இவர்களை தீவிரவாதிகளின் பட்டியலில் இட்டனர். விடுதலைப் புலிகளை தடைசெய்தது போன்றே இவ்வமைப்பையும் பல உலக நாடுகள் தடைசெய்தது குறிப்பிடத்தக்கது. 2011ம் ஆண்டு நோர்வேயின் அனுசரணையுடன் இவர்கள் தற்போது பிலிப்பைன்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். பேராசிரியர் சிசன் அவர்கள் நெதர்லாந்து அரசால் 2007ம் ஆண்டு கைதுசெய்யப்பட்டார். இவை அனைத்தும் அமெரிக்க-பிலிப்பைன் அரசின் கூட்டுச் சதியாக அமைந்திருந்தது. ஆனால் அவர் மீது தொடரப்பட்ட வழக்கு பின்னர் நெதர்லாந்து சர்வதேச நீதிமன்றால் தள்ளுபடிசெய்யப்பட்டது. பேராசிரியர் சிசன் அவர்கள் குற்றமற்றவர் என நிரூபணமானது அமெரிக்காவை மேலும் ஆத்திரமடையவைக்கும் செயலாக அமைந்திருந்தது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஈழப் போராட்டத்தை ஒத்த ஒரு சூழல் இருக்கும் போது, இக் கட்சி மற்றும் இதன் இராணுவப் பிரிவு என்பன தற்போது வெளியிட்டுள்ள கருத்துக்கள் ஈழத் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்துள்ளது. ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தின் ஆதரவு மற்றும் ஒரு ஒடுக்கப்பட்ட இனத்துக்கு எப்போதும் உண்டு என்பதனை இவர் கருத்துகள் பிரதிபலிக்கின்றன. அத்துடன் இடதுசாரியான பேராசிரியர் சிசன் அவர்கள் துல்லியமாக தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக இலங்கை அரசு நிச்சயம் தனது அதிருப்தியை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிர்வின் அரசியல் மற்றும் சர்வதேச அரசியல் நிருபர் தெரிவித்தார்..

முந்தைய செய்திகிருஷ்ணாவின் தீர்வு பேச்சு தமிழர்களை ஏமாற்றும் திட்டமிட்ட நாடகம்: நாம் தமிழர் கட்சி
அடுத்த செய்திவீரமிகு வரலாற்றின் பாதையில்….