பிரித்தானியாவில் கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் 19வது ஆண்டு எழுச்சி வணக்க நிகழ்வு

59
1993ஆம் ஆண்டு வங்கக் கடலில் காவியமான கேணல் கிட்டு, மற்றும் ஒன்பது வீரவேங்கைகளுடன், ஜனவரி மாதத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களுக்கான எழுச்சி வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
தென்மேற்கு லண்டனில் அமைந்துள்ள மேர்ட்டன் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கேணல் கிட்டு, லெப்டினன் கேணல் குட்டிசிறி, மேஜர் வேலன், கப்டன் குணசீலன், கப்டன் றொசான், கப்டன் ஜீவா, கப்டன் நாயகன், லெப்டினன்ட் அமுதன், லெப்டினன்ட் தூயவன், லெப்டினன்ட் நல்லவன் ஆகியோர், மற்றும் இந்த மாதத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீர மறவர்கள் மக்களால் நினைவேந்தப்பட்டனர்.
இந்நிகழ்வில் பொதுச்சுடரினை திரு.கனகரத்தினம் ஐயா ஏற்றி வைக்க, தமிழீழ தேசியக் கொடியை லண்டன் தென்மேற்கு பிராந்திய தேசிய செயற்பாட்டு ஒருங்கிணைப்பாளர் திரு.நவம் ஏற்றினார்.
அக வணக்கம் இடம்பெற்றதைத் தொடர்ந்து ஈகச்சுடரை, 1991ஆம் ஆண்டு பண்டத்தரிப்பில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டபோது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை சேகர் என அழைக்கப்படும் தங்கராசா சிறீஸ்கந்தராசா அவர்களின் சகோதரி வசுந்திராதேவி குலசிங்கம் ஏற்றி வைத்தார்.
பொன் சத்தியசீலன் ஐயா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி, பாவலர் கந்தையா ராஜமனோகரன், ஊடகவியலாளர் பரா பிரபா ஆகியோர் சிறப்புரை ஆற்றியிருந்தனர்.
மண்டபம் நிறைந்த மக்கள் மக்கள் முன்னிலையில் உரையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி, யாழ்ப்பாணத்தில் சிறீலங்கா படைகளை முகாம்களுக்குள் முடக்கியது உட்பட கேணல் கிட்டு அவர்களின் ஆளுமைகள் பற்றி தனது உரையில் கூறியதுடன், எந்த இலட்சியத்திற்காக மாவீரர்கள் தமது  இன்னுயிர்களை ஈகம் செய்தார்களோ, அந்த இலட்சியமான தமிழீழத்தை அடையும்வரை புலம்பெயர்ந்த மக்கள் ஓயாது பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், வங்கக்கடலில் இடம்பெற்ற இந்திய – சிறீலங்கா அரசுகளின் கூட்டுச்சதி முள்ளிவாய்க்கால்வரை தொடர்ந்தது மட்டுமன்றி, இப்பொழுதும் நீடித்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழின அழிப்பிற்குத் துணைபோன இந்தியா பாதிக்கப்பட்ட மக்களிற்கு ஒரு சில வீடுகளைக் கட்டிக்கொடுத்து, வீதி அமைத்துக்கொண்டு அந்த மக்களின் மனங்களை வெல்ல முடியாது எனவும் தெரிவித்தார்.
தயாசீலன், பாவலர் வல்வைத்தேவன், திருமதி குமுதினி, பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்த கௌசி ஆனந்தசிகாமணி, மதுரமீன போன்றவர்களின் கவிதையுடன், திருமதி ராகினி ராஜகோபால், திருமதி சர்மினி கண்ணன் ஆகியோரது மாணவிகளின் எழுச்சி நடனங்களும் இடம்பெற்றன.
முல்லை அமுதனின் தொகுப்பில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரித்தானிய கலைபண்பாட்டுக் குழுவினரது இசையில் எழுச்சிப் பாடல்களும் இடம்பெற்றிருந்தன.
1993ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் நாள் வெளிநாட்டில் இருந்து தமிழீழம் திரும்பிக்கொண்டிருந்த கேணல் கிட்டு மற்றும் ஒன்பது வேங்கைகள் இந்திய – சிறீலங்கா கூட்டு சதியால் வங்கக்கடலில் காவியமாகி இருந்தனர்.
கேணல் கிட்டு விடுதலைப் போராட்டத்தில் தனிமனித சரித்திரம் எனவும், தனது தோழனாக விழங்கியவர் என்றும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் புகழாரம் சூட்டும் அளவிற்கு தமிழீழ தேசத்திற்காக தன்னை அர்ப்பணித்த முதுபெரும் தளபதி என்பது குறிப்பிட்டத்தக்கது
முந்தைய செய்திவீரமிகு வரலாற்றின் பாதையில்….
அடுத்த செய்திநாம் தமிழர் மாணவர் பாசறை துவக்க விழா மற்றும் மொழிப்போர் ஈகிகள் நாள் பொதுக்கூட்டம் – அழைப்பிதழ் இணைப்பு!!