ஒருபுறம் கூடங்குளம் பகுதி மக்கள் அணு உலைக்கு எதிராக தொடர்ந்து போராடிவரும் வேளையில் மறுபுறம் அணு உலை அதிகாரிகளோ எல்லோரிடத்திலும் பாதுகாப்பு சான்றிதழ்களைப் பெற்று வருகின்றனர். அதுமட்டுமின்றி கூடங்குளம் அணு உலையிலிருந்து கிடைக்கும் 50 விழுக்காடு மின்சாரத்தின் மூலமாக தமிழ்நாட்டின் மின்பற்றாக்குறை வெகுவாக குறைந்துவிடும் என்றும் அதிகாரிகள் கூறிவருகின்றனர். இந்த சூழ்நிலையில் அணு உலையை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்ற குழப்பமான மனோநிலையில் தமிழ்நாட்டு மக்கள் இருக்கின்றார்கள்.
கூடங்குளம் அணு உலையிலிருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் மின்சாரத்தின் பங்கை ஒரு அறிவார்ந்த ஆய்வுக்கு உட்படுத்தினால் நமது ஐயங்கள் எல்லாம் தெளிவுறும். இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் மின்சார துறை எதிர்கொண்டு வரும் தடைகளை கணக்கில் கொண்டு அணு உலையிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் மின்சாரம் பின்வரும் அட்டவணையில் தெளிவாக விளக்கப்படுகின்றது. தமிழகத்திற்கு வெறும் 405 மெகாவாட் மின்சாரம் தான் கூடங்குளத்திலிருந்து கிடைக்கும் என்பது இந்த அட்டவணையிலிருந்து கிடைத்த முடிவுகள் மூலம் நமக்கு தெரியவருகின்றது. இதில் இறுதியில் பயனாளருக்கு கிடைக்கும் மின்சாரத்தின் அளவு 305 மெகாவாட் ஆகும்
மொத்த அளவு(மெகா வாட்டில்) | குறிப்புகள் | |
கூடங்குளம் அணு உலையின் மொத்த மின்னுற்பத்தி = 2*1000 | 2000 | கூடங்குளத்தின் மொத்த உற்பத்தியான 2*1000 என்பது தற்போது இரசியாவில் நடைபெற்று வரும் ஒப்பந்தம் முடிவுக்கு வரும் பொழுது 4*1000 என மாறும் |
அணு உலைகளால் சராசரியாக 60% மின் உற்பத்தியே செய்ய முடியும் | 1200 | எந்த ஒரு மின்னுற்பத்தி நிலையமும் 100% மின் உற்பத்தியை கொடுக்க முடியாது. இங்கு ஆண்டு மின் உற்பத்தி 60% எனக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் கல்பாக்கம் அணு உலையே கடந்த 4 ஆண்டுகளாக தான் 40-50% மின்னுற்பத்தியை கொடுக்க தொடங்கியுள்ளது. |
ஆண்டு மொத்த மின்னுற்பத்தி – அணு உலையை இயக்குவதற்கான ஆண்டு மின்தேவை(அணு உலையில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தில் 10% மின்சாரம் அணு உலையை இயக்குவதற்கு தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது) | 1,080 | இந்திய அணு உலைகள் செயல்படுவதற்கு ஆண்டிற்கு 12.5% மின்சாரம் தேவைப்பட்டாலும், இங்கு 10% கணக்கில் எடுத்துகொள்ளப்பட்டுள்ளது. |
தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் பங்கு 50% (1080ல் 50%) | 540 | ஊடகங்களில் வந்துள்ள செய்திகளின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு 50% பங்கு மின்சாரம் கிடைக்குமென கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் கடைபிடிக்கப்பட்டு வரும் முறையில் அணு உலை வைத்திருக்கும் மாநிலங்களுக்கு 30% பங்கே கொடுக்கப்படும் |
மின்சாரத்தை கொண்டு செல்லுதல், வினியோகத்தலில்(T&D Loss) ஏற்படும் 25% இழப்பிற்கு பின் தமிழகத்திற்கு கிடைக்கும் மொத்த மின்சாரம் | 405 | மின்சாரத்தை கொண்டு செல்லுதல், வினியோகத்தலில் ஏற்படும் 25% என கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் தேசிய அளவு இழப்பு 27% ஆகும். |
இறுதி பயன்பாட்டின் போது ஏற்படும் 20% மின் இழப்பையும் கணக்கில் கொண்டால் பயனாளருக்கு கிடைக்கும் மொத்த மின்சாரத்தின் அளவு | 305 | பிரயாசு என்ற நிறுவனத்தின் ஆய்வின் படி வீட்டு உபயோகத்தின் போது 20% மின் இழப்பு ஏற்படுகின்றது. இதில் தொழிற்சாலைகளிலும், விவசாய பயன்பாட்டின் போதும் ஏற்படும் மின் இழப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை |
இதில் பேச்சுவார்த்தை நலம்பட முடிந்து மேலும் இரண்டு அணு உலைகளையும் சேர்த்தால் 4 அணு உலைகளாக கொண்டால் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் மொத்த மின்சாரம் | 610 |
கூடங்குளம் அணு உலையிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் வெறும் 305 மெகாவாட் மின்சாரத்திற்காக அணு உலையிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சுக்கு மக்கள் ஆளாக வேண்டுமா என்று தமிழ்நாட்டு மக்கள் கண்டிப்பாக யோசிக்க வேண்டும். ஏனென்றால் தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் ஏற்கனவே ஒரு அணு உலை செயல்பட்டுவருகின்றது. தமிழ்நாட்டின் மின் தேவையை ஈடுசெய்ய மக்களுக்கு எந்த ஒரு கேடும்விளைவிக்காத மாற்று மின் ஆதாரங்கள் இருக்கின்றதா என்பதே நம்முன் இப்பொழுது இருக்கும் கேள்வி
தமிழ்நாட்டில் இருக்கும் மின் ஆதாரங்களை அறிவார்ந்த ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம் நம்மிடம் பல மாற்று மின் ஆதாரங்கள் இருக்கின்றன என்பது தெரியவருகின்றது. இது போன்ற சரியான மாற்று முறைகளின் மூலம் நமக்கு பெரிய அளவில் மின்சாரம் கிடைக்கக்கூடும் என பின்வரும் அட்டவணையிலிருந்து தெரிகின்றது. மேலும் தற்பொழுதுள்ள மின்னுற்பத்தி ஆதாரங்களில் இருந்து நமக்கு பயன் கிடைப்பதற்காக, புதிய மின்னுற்பத்தி நிலையங்கள் அமைப்பதில் செலவழிக்கப்படும் தொகையில் 20 விழுக்காடு செலவழித்தாலே போதும், அதுமட்டுமின்றி தற்பொழுதுள்ள மரபுசாரி மின்னுற்பத்தி நிலையங்களினால் ஏற்படும் பாதிப்புகள் இதில் எதுவும் இல்லை. புதிய மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து மின்னுற்பத்தி தொடங்குவதற்கு நமக்கு நீண்ட காலம் பிடிக்கும் என்பதுபோலன்றி இங்கு நாம் பயன் பெறுவதற்கு மிகச்சிறிய காலமே போதுமானது, இதன் மூலம் சமூகத்திற்கு கிடைக்கும் பலன்கள் மிகப்பெரியதும், நிலையானதுமாகும்.
தற்பொழுதுள்ள மின்னுற்பத்தியை வைத்தே நாம் பின்வரும் சேமிப்புகளை மேற்கொள்ளலாம். | மெகாவாட் | குறிப்புகள் |
மாநிலத்திலுள்ள குண்டுபல்புகளை (Tungsten Blub 60watts) மாற்றுவதன் மூலமாக கிடைக்கும் சேமிப்பு | >>500 | இந்தியாவில் உள்ள குண்டுபல்புகளை (Tungsten Blub 60watts) மாற்றுவதன் மூலம் 10,000 மெகாவாட்டிற்கும் அதிகமான மின்சேமிப்பு கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது |
மின்சாரத்தை கொண்டு செல்லுதல், வினியோகத்தலில்(T&D Loss) ஏற்படும் 25% இழப்பை 10% ஆக குறைப்பதன் மூலம் கிடைக்கும் சேமிப்பு | 1,575 | தமிழ்நாட்டின் மொத்த மின்னுற்பத்தியான 10,500 மெகாவாட்டில் 15% சேமிப்பதன் மூலம் கோடைகாலத்தின் அதியுயர் மின் தேவையை நிறைவ்ய் செய்ய முடியுமென மைய மின்சார வாரிய அறிக்கை கூறுகின்றது |
தமிழ்நாட்டின் பல்வேறு பிரிவுகளில் பயன்பாட்டில் ஏற்படும் இழப்பை குறைப்பதன் மூலம் கிடைக்கும் சேமிப்பு | 2,625 | இதன் மூலம் தமிழ்நாட்டின் மொத்த மின் தேவையில் 25% நிறைவாகின்றது. அதுமட்டுமின்றி சரியாக மதிப்பிட்டால் இதன் மூலம் நமக்கு கிடைக்கும் சேமிப்பு மிகவும் அதிகமாகும். |
புதுப்பிக்கப்பட்ட மின் மூலங்கள் மூலம் கிடைக்கும் பயன்கள்
காற்றாலை | 700 மெகாவாட் | தமிழ்நாட்டின் மொத்த 5,500 மெகாவாட் காற்றாலை மின் திறனில் இதுவரை 4,790 மெகாவாட் அளவிற்கு மின்னுற்பத்தி செய்யப்படுகின்றது.(பார்க்க- தமிழ்நாடு மின்சார வாரிய அறிக்கை) |
உயிர்ம எரிபொருள் | 900 மெகாவாட் | உயிர்ம எரிபொருளில் இருந்தும், சக்கரை ஆலை கழிவுகளிலிருந்தும் 900 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். .(பார்க்க- தமிழ்நாடு மின்சார வாரிய அறிக்கை) |
வீடுகளின் கூறைகளில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுக்கும் தகடுகளை பதித்தல்(2கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் தகடுகளை 25 இலட்சம் வீடுகளில் பதியுதல் | >> 5,000 மெகாவாட் | தமிழ்நாட்டில் உறுதியாகவும், பொருளாதார வகையில் நல்ல நிலையில் உள்ள வீடுகளில் 25% கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வீடுகளில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுக்கும் தகட்டை பதியலாம். |
வீடுகளின் கூறைகளில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுக்கும் தகடுகளை பதித்தல், சூரிய ஒளியின் மூலம் நீரை சூடேற்றும் கருவிகளை மற்ற கட்டிடங்களில் வைத்தல் | மிக அதிக அளவு சேமிப்பு | பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், அரசு கட்டிடங்கள், வணிக வளாகங்கள்…….. |
மரபு சார் மின்னுற்பத்தி நிறுவனங்களைப் போலல்லாமல் புதுப்பிக்கதக்க மின்மூலங்கள் அதிக செலவு கொண்டதும், நம்பக்கூடியதுமல்ல என்ற வாதங்களும் உள்ளன. நீண்ட கால பயன்பாட்டில் புதுப்பிக்கதக்க மின் மூலங்களுக்காக அரசு செலவிடும் தொகை என்பது மிகவும் குறைவே. நம்மிடம் உள்ள மாற்று வழிகளை எல்லாம் சரியாக ஒருங்கிணைப்பதன் மூலம் கூடங்குளம் அணு உலையின் தேவையே இல்லாமல் செய்வது மட்டுமல்லாமல், கல்பாக்கம் அணு உலையையும் வருங்காலத்தில் மூடிவிடலாம். சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் எடுப்பதற்காக ஆகும் செலவான கடந்த சில ஆண்டுகளாக வெகுவாக குறைந்து வருகின்றது. இது ”தேசிய சூரிய ஒளி மின்சார ஆணையத்தின்” இரண்டாவது ஒப்பந்தப்புள்ளி கோரலிலும் எதிரொலித்துள்ளது என்பது இங்கே நினைவு கூறத்தக்கது. இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குள் சூரிய ஒளி மூலம் மின்சாரம் எடுப்பதற்காக ஆகும் செலவும் நிலக்கரி மூலம் மின்சாரம் எடுப்பதற்கு ஆகும் செலவும் ஒன்றாகிவிடும்.
அணு உலைக்காக செலவு செய்யப்படும் நேரடி, மறைமுக செலவுகளையும், மாற்று வழிகளின் மூலமாகவும், புதுப்பிக்கதக்க மின் மூலங்களுக்காகவும் செலவு செய்யப்படும் தொகையையும் இவ்விரண்டின் மூலம் மக்களுக்கு கிடைக்கும் பயன்களையும் ஆய்வு செய்தால் நாம் அணு உலைக்கு ஆகும் அதிக செலவையும், அதன் மூலம் சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்பையும் தெளிவாக காணலாம். இந்த நாட்டிலேயே ஒரு முன்மாதிரியான மின் கொள்கையை தமிழ்நாடு வருவாக்குவதற்கான வாய்ப்புகள் நன்றாக உள்ளன.
தற்பொழுது செயல்பட்டு வரும் மின்னுற்பத்தி நிலையங்களினால் ஏற்படும் நீண்டகால பாதிப்புகளை குறைப்பதற்கும் , அணு உலை பேரழிவுகளை முற்றிலுமாக தவிர்ப்பதற்கும் வேறு வழியில்லாததால் நாட்டின் மின் தேவை, மின்னுற்பத்தியை சீராக ஆராய வேண்டிய கட்டாயத்தில் இந்த நாடு உள்ளது.
……………………………………………………….
வீட்டில் கிடக்கும் ஒரு பழைய நாற்காலியை பழங்கால பொக்கிசம் என்று ஏமாற்றி விற்பதற்காக சில மன நோயாளிகளை பணக்காரர்கள் போல தயார் செய்து அவர்கள் அனைவரும் அந்த நாற்காலியை ஏலம் எடுப்பதற்காக வந்திருப்பதாகவும், அந்த நாற்காலி பல ஆயிரம் ரூபாய்களுக்கு விற்பனையாகும் என்று ஏலக் கடைக்காரரின் தலையில் கட்டிவிடுவார் நடிகர்.பாண்டியராஜன். அது போலவே மிக அதிக செலவும், அதிக அளவு பிரச்சனையும், மிகக்குறைந்த மின்னுற்பத்தியும் கொண்ட இந்த அணு உலை என்ற பழங்கால நாற்காலியை மக்களின் தலையில் கட்டுவதற்காக இந்த அணு உலைகள் வந்தால் தமிழ்நாடு பெரு வளர்ச்சி அடையும், இருபத்தி நான்கு மணி நேரமும் மின்சாரம் கிடைக்கும், இனி மின் தடையே இல்லை என்பது போன்ற பசப்பு வாதங்களை மத்திய அரசு நம்முன் வைத்து அணு உலை ஒரு பொக்கிசம் என ஏமாற்றிவருகின்றது. நாம் ஏமாறப்போகின்றோமா ????
நன்றி – சங்கர் சர்மா – மின் கொள்கை ஆய்வாளர்
நன்றி – Dia Nuke Org.
மூலப்பதிவு – http://www.dianuke.org/power-
மொழியாக்கம் – நற்றமிழன்.ப