கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்திற்கு நாம் தமிழர் அமெரிக்கா ஆதரவு

28

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோருவதற்கான போராட்டத்தை நாம் தமிழர் இயக்கம்-அமெரிக்கா ஆதரிக்கிறது. உள்ளூர் மக்களை கலந்தாலோசிக்காது, ஜனநாயக, மனித உரிமை மரபுகளை மீறி இத்திட்டம் நிறைவேற்றப்பட்டதை, நாம் தமிழர் அமெரிக்கா வன்மையாக கண்டிக்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து 30 கி.மீ சுற்றளவுக்குள் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் நிலையில், இத்திட்டத்தால் அவர்களின் வாழ்வுரிமையும், வாழ்வாதார உரிமைகளும் முற்றிலுமாக கேள்விக்குறியாக்கப் பட்டிருக்கிறது.

உலகில் இது வரையில் 3 பெரிய அணு உலை நேர்ச்சிகள் நடந்துள்ளன. அதன் காரணமாக பல வளர்ச்சி அடைந்த நாடுகளும் தங்கள் நாட்டு மக்களின் பாதுகாப்பு கருதி தங்களின் அணு உலைகளை மூட ஆயத்தமாகி வருகின்றன. ஆனாலும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை திருப்தி படுத்த, மக்கள் விரோத போக்கில் இந்திய அரசு முனைப்புடன் செயல் பட்டு வருவது கண்டிக்கத்தக்கது.

கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக அப்பகுதியில் வாழும் மக்களின் அச்சம் தீர்க்கப்படும் வரை அணு மின் நிலையப் பணிகளை நிறுத்தி வைக்குமாறு மாண்புமிகு முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை நாம் தமிழர் இயக்கம்-அமெரிக்கா வரவேற்கிறது. இதே வேளை, அணு ஆலை விபத்து-இழப்பீட்டுக்கு உச்ச வரம்பு கொடுக்கிற சட்ட முன்வடிவு (Nuclear Liabilities Bill) நாடாளமன்றதின் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், அணு ஆலைகளில் முதலீடு செய்பவர்கள், அதன் பாதுகாப்பிற்கும், அணு சக்தி உருவாக்கத்தில் வெளிவரும் கழிவுகளைப் பாதுகாப்பதற்கும் முன்னுரிமை அளிப்பார்களா, என்பது ஐயமே!! இந்தியா தனது வல்லரசுக் கனவை நிறைவேற்றுவதற்காக எந்த அளவுக்கும் மனித நேயமற்ற முறையில் நடந்து கொள்ளும் என்பதற்கு இந்த ஒப்பந்தம் ஒரு எடுத்துக்காட்டு.

தமிழகத்தில் மின் பற்றாக்குறை நிலவுவதும், தொடர்ந்து மின் தேவை அதிகரித்து வருவதும் எல்லோருக்கும் கவலை அளிக்கக்கூடிய ஒரு நிலையே. இச்சிக்கலை தவிர்க்க மின் நிலையங்களின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளைக் களைந்து, பராமரிப்புப் பணிகளை ஒழுங்காகச் செய்தல், மின் சிக்கனம், விநியோகம் முதலியவற்றின் திறன் சார்ந்த முறைகளைக் கையாளுதல், மற்றும் மரபு சாரா எரிசக்திகள் மூலம் மின்சாரம் தயாரித்தல் ஆகியவற்றின் மூலம் உடனடி மின் பற்றாக்குறையைக் களைய முடியும். அணுசக்திதான் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. தமிழகத்துக்கு உள்ள மின் சாரப் பற்றாக்குறை ஒரு நாளைக்கு 22 கோடி யூனிட் தான். நெய்வேலி மின்சாரம் முழுவதும் தமிழகத்துக்கே திருப்பிவிடப்பட்டால் தமிழ கத்தில் மின் பற்றாக்குறையே இருக்காது. மின்சார உபரி மாநில மாகத் தமிழ்நாடு திகழும். இதைச் செய்வதற்கு இந்திய அரசு என்றைக்கும் முன்வருவதில்லை. மாறாக, கூடங்குளம் அணு உலையை தமிழர்கள் மீது திணிப்பதற்காக இங்குள்ள மின்வெட்டைக் காரணமாகக் காட்டிப் பசப்புகிறது.

ஜப்பானில் புகோஷிமா அணு உலையில் பாதுகாப்பு ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டிருந்தும் இயற்கையின் சீற்றத்தை எதிர் கொள்ளாமல் கடந்த மார்ச் 11 ஆம் தேதி அணு உலையில் விபத்து நேர்ந்து கதிர் வீச்சு எற்ப்பட்டதை யாரும் மறுக்க முடியாது. 6.3 ரிக்டர் அளவு நில நடுக்கம் வரை தாங்கும் சக்தி கொண்டது கூடங்குளம் அணு உலை என்று அணு சக்தி துறை பிரசாரம் செய்து வருவதை ஏற்க முடியாது. 6.3 ரிக்டர் அளவைக் கடந்த நில நடுக்கம் ஏற்ப்பட்டால் என்ன ஆகும் என்பதற்கு சரியான பதில் இல்லை. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியாவில் நில நடுக்கம் ஏற்ப்பட்டது இல்லை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தென்னிந்தியாவில் தொடர்ந்து நில நடுக்கங்கள் ஏற்ப்பட்டு வருவதை கணக்கில் கொள்ள வேண்டும். 2004 ஆம் ஆண்டு தென் கிழக்கு ஆசியாவைத் தாக்கிய ஆழிப் பேரலைக்குப் பின் தமிழகத்தின் பல கடலோர மாவட்டங்களில் கடல் நீர் உள்வாங்கியதையும் கருத்தில் கொள்ள வேண்டும். கடலின் ஆழம் குறைவாக இருப்பின் ஆழிப் பேரலையின் வேகம்மும் தாக்கமும் கூடுதலாக இருக்கும் என்று புவியியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். ஜப்பான் தீவு உள்ள பசிபிக் பெருங்கடலின் ஆழம் 5 கிலோமீட்டர்கள். ஆனால் இந்தியப் பெருங்கடலின் ஆழம் 3 கிலோமீட்டர்கள் மட்டுமே. எனவே ஜப்பானில் ஏற்ப்பட்ட தாக்கத்தை விட தென்னிந்தியா கடலோரத்தில் ஆழிப் பேரலையின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும்.

நமது நாட்டை விட எத்தனையோ மடங்கு வளர்ச்சி அடைந்த தொழில் வளம் மிக்க ஜெர்மனி 2022க்குள் அனைத்து அணு உலைகளையும் மூடவிருக்கிறது. இத்தாலியில் அண்மையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 95 சத மக்கள் அணு உலைகள் வேண்டவே வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள். சுவிஸ்ர்லாந்து, மெக்சிக்கோ போன்ற நாடுகள் அணு உலைகளை மூடிவிட முடிவெடுத்திருக்கிறார்கள். புகுஷிமா விபத்து நடந்த ஜப்பான் நாட்டில் கட்டப்பட்டு கொண்டிருக்கும் பத்து அணு உலைகளை நிறுத்திவிட்டனர். 28 பழைய உலைகளை மூடி விட்டனர். மூன்று மைல் தீவு அணு உலை விபத்துக்குப் பிறகு அமெரிக்காவிலும், செர்னோபில் அணு உலை விபத்துக்குப் பிறகு ரஷ்யாவிலும் புதிய அணு உலைகள் தொடங்கப்படவே இல்லை.

மேலும் விபரங்களுக்கு கீழே அழுத்தவும்:

http://library.thinkquest.org/17658/nuc/nuchistoryht.html

http://en.wikipedia.org/wiki/Chernobyl_disaster

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா அரசு அரிபுரியில் ரஷ்யா நாட்டு உதவியுடன் தொடங்கப்பட இருந்த அணு உலை திட்டத்தை நிராகரித்து விட்டது. மாநிலத்தில் எந்தப் பகுதியிலும் அணு உலைகளை அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளது. கேரளாவில் அணு உலைகள் வேண்டவே வேண்டாம் என்று அனைத்து கட்சிகளும் ஒருங்கே நின்று எதிர்க்கின்றன‌. மகாராஸ்ட்ரத்தில் அனைத்து கட்சிகளும் அணு உலைக்கு எதிராக போராடி வருகின்றன‌. இந்நிலையில் தமிழ் நாட்டில் அணு உலையை நிறுவியே தீரவேண்டும் என்ற முனைப்புடன் மத்திய காங்கிரஸ் அரசு செயல் பட்டு வருவது தமிழக மக்களை அவர்கள் கிள்ளுக் கீரையாக நினைப்பதையே காட்டுகிறது.

எனவே மக்களின் வாழ்வாதரங்களை பாதிக்கும் அணு சக்தி நிலையங்களையும் மூடவும், மாற்று யுத்திகளை கையாண்டு மின் உற்பத்தியை பெருக்கி மக்களுக்கு தேவையான மின்சாரத்தை வழங்குமாறும் மத்திய அரசை வலியுறுத்துமாறும், வாக்களித்த மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களின் போராட்டத்திற்கு துணை நிற்குமாறும் மாநில அரசை நாம் தமிழர் இயக்கம்-அமெரிக்கா பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறது.

முந்தைய செய்திகுமரியை மீட்டு தந்த மார்ஷல் நேசமணி வீரவணக்க நிகழ்ச்சியில் சீமான் பேச்சு
அடுத்த செய்திதமிழினப்படுகொலைக்கு இந்தியா தான் பின் நின்றது உறுதியாகிவிட்டது -சீமான் GTV பேட்டி