பரமக்குடியில் தியாகி இமானுவல் சேகரன் நினைவு தினத்தன்று ஏற்பட்ட கலவரமும், கலவரத்தை அடக்க காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடும் முறையற்றது, தேவையறற்து என்று கூறி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை:
பரமக்குடி துப்பாக்கிச் சூடு முறையற்றது, தேவையற்றது: சீமான்
தியாகி இமானுவல் சேகரன் நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் தேதியன்று, இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்தவர்களில் ஒரு பிரிவினர் கலவரத்தில் ஈடுபட்டதும், கலவரத்தை ஒடுக்க காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளதும் அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது.
தியாகி இமானுவல் சேகரன் அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக மதுரை சென்றிருந்த நான், அங்கு தடையுத்தரவு பிறக்கப்பட்டுள்ளது, எனவே தலைவர்கள் யாரும் செல்வதற்கு அனுமதியில்லை என்று காவல் துறையினர் சொன்னதை ஏற்றுக்கொண்டு, சென்னை திரும்பினேன். ஆனால், அன்று பரமக்குடியில் நடந்துள்ள சம்பவங்கள் அனைத்தையும் நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்களும், பொதுமக்களும் விவரித்ததில் இருந்து தெரிந்துகொண்ட விடயங்கள், அங்கு நடந்த கலவரத்தை துப்பாக்கிச் சூடு நடத்தாமலேயே காவல் துறையினர் கட்டுப்படுத்தியிருக்கலாம் என்பதை உணர்த்துகிறது.
அன்று காலை பத்தரை மணியளவில் சாலை மறியல் நடந்தபோது அதில் 200க்கும் குறைவானவர்களே ஈடுபட்டுள்ளனர். அவர்களை கலைத்தோ அல்லது கைது செய்தோ நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கலாம் என்பதே பலருடைய கருத்தாகவுள்ளது. ஏனெனில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான காவல் படையினர் அங்கு முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்களைக் கொண்டு நிலைமை கையை விட்டுப் போகாமல் தடுத்திருக்கலாம். அதன் பிறகு கல்வீச்சு நடந்து, பிறகு அங்கிருந்த கடைகள் தாக்கப்பட்டு, வாகனங்கள் சில தீ வைத்துக் கொளுத்தப்பட்டு கலவரம் பெரிதாகியுள்ளது. இந்த அளவிற்கு கலவரம் பெரிதாக காவல் துறையினர் எவ்வாறு அனுமதித்தனர் என்கிற வினா எழுகிறது. கலவரம் முற்றிய நிலையில் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. அதன் பிறகு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் பெரும்பாலோர் அப்பாவிகளே என்று கூறுகின்றனர். இது உண்மையாய் இருப்பின் அது மிகுந்த துயரத்திற்குரியதாகும்.
அதுமட்டுமின்றி, கலவரதைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்தும் காவல் துறையினர், கலவரக்காரர்களின் முட்டிக்குக் கீழ் தான் சுட வேண்டும் என்று அவர்களுக்கான செயல்முறைக் கையேடு (Drill Manual) கூறுகிறது. ஆனால், குண்டடிப்பட்டுச் செத்தவர்கள் அனைவருக்கும் நெஞ்சிலும், தலையிலும்தான் குண்டு பாய்ந்துள்ளது. இது மிகவும் கண்டனத்திற்குரிய செயலாகும். கலவரத்தில் ஈடுபடுபவர்களும் இந்த நாட்டு மக்கள்தானே? அந்தப் பார்வையும், அணுகுமுறையும் இல்லையென்றால், காவல் துறை தங்களுடைய பாதுகாப்பிற்காகத்தான் என்று மக்கள் எப்படி நம்புவார்கள்?
மதுரை சிந்தாமணி சாவடியில் நடந்த துப்பாக்கிச் சூடும் அவசர கதியில் நடத்தப்பட்டுள்ளதை உணர முடிகிறது. அங்கு கலவரமா நடந்தது? பிறகு எதற்கு அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது? எந்த அடிப்படையில் துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிடப்பட்டது? இவை யாவும் மிகுந்த மனத் துயரத்தை ஏற்படுத்துகிறது. செப்டம்பர் 11ஆம் தேதி தியாகி இமானுவல் சேகரன் நினைவு நாளாக மட்டுமே இருந்தது. இப்போது அது இந்தச் சம்பவத்தின் நிழலுடன் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் நிலை ஏற்பட்டுவிட்டது. சூழ்நிலையை சரியாகக் கையாளாமல் விட்ட காரணத்தினால் அரசுக்கு அவப் பெயர் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனை நிச்சயமாகத் தவிர்த்திருக்கலாம்.
தூக்குக் கயிற்றை எதிர்நோக்கியிருக்கும் மூன்று தம்பிகளின் உயிரைக் காக்க, தமிழினமே ஒன்றுபட்டுப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், இப்படி திடுமென 7 உயிர்கள் பறிக்கப்பட்டிருப்பது விசனத்திற்குரியது. உயிரிழந்த குடும்பத்தினர் அனைவருக்கும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க வேண்டுமானால், சம்பவத்தின் உண்மைகளை வெளிக்கொணர வேண்டும். நியாயமான விசாரணையின் மூலம் மட்டுமே அது சாத்தியம். அந்த வகையில், மாண்புமிகு தமிழக முதல்வர் இச்சம்பவம் குறித்து சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை ஆணையம் அமைத்துள்ளது பாராட்டிற்குரியது.
அதே நேரத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயரிழந்த குடும்பத்தினருக்கு நிவாரணமாக ரூ.1 இலட்சம் தமிழக அரசு அளிக்கும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். அதனை வரவேற்கிறோம். மனிதாபிமானம் கொண்ட தமிழக முதல்வர் அவர்கள் இந்த நிவாரணத் தொகையை நன்கு உயர்த்தி, உயிரிழந்தோர் குடும்பத்தினரின் நலிவை நீக்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாம் தமிழர் கட்சியின் சார்பாக,
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்