யாழ்ப்பாணத்தில் மர்ம மனிதர்களின் தாக்குதல்: நாடாளுமன்ற விவாதத்தில் தமிழக எம்.பி.க்கள் எழுப்ப வேண்டும்- சீமான்

15

ஈழத்தில் தமிழ்ப் பெண்களை குறிவைத்து நடத்தப்படும் பாலியல் வன்முறை, மட்டக்களப்பு மாவட்டத்தி்ல் இருந்து யாழ்ப்பாணத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது குறித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை:

யாழ்ப்பாணத்தில் மர்ம மனிதர்களின் தாக்குதல்: நாடாளுமன்ற  விவாதத்தில் தமிழக எம்.பி.க்கள் எழுப்ப வேண்டும்- சீமான்

இலங்கையின் கிழக்கு மாவட்டமான மட்டக்களப்பில் உடல் முழுவதும் கிரீஸைத் தடவிக் கொண்டு, தமிழ்ப் பெண்களின் மார்பகங்களை அறுத்து பாலியல் வன்முறையில் ஈடுபட்ட மர்ம மனிதர்களின் நடமாட்டம் இப்பொழுது தொடர்ந்து தமிழர் வாழும் பகுதிகளில் பரவி வருகிறது. வடக்கு மாவட்டமான யாழ்ப்பாணத்தில் கடந்த திங்கட்கிழமை காணப்பட்டதை அடுத்த அப்பகுதி மக்கள் வெகுண்டெழுந்துள்ளனர்.யாழ்ப்பாணம் நகரில் இருந்து 2 கி.மீ. தூரத்திலுள்ள நாவாந்துறை எனும் மீனவ கிராமத்தில் திங்கட் கிழமை இரவு இப்படிப்பட்ட மர்ம மனிதர்கள் 3 பேர் நுழைந்துள்ளனர். அவர்களை கண்ட அங்கிருந்த மக்கள் துரத்திப் பிடிக்க முயன்றுள்ளனர். அந்த மூன்று பேரும் அங்கிருந்த இராணுவ முகாம்களுக்குள் நுழைந்து தப்பித்துள்ளனர்.இதைக்கண்ட மக்கள் இராணுவ முகாமை முற்றுகையிட்டுள்ளனர். மர்ம மனிதர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். அதற்கு சிங்கள இராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் கோவமுற்ற மக்கள் அங்கிருந்த இராணுவ வாகனங்கள் சிலவற்றை அடித்து நொறுக்கியுள்ளனர். மக்களைக் கலைக்க இராணுவமும், காவல் துறையினரும் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். மக்கள் அனைவரும் கலைந்து சென்ற பின்னர், நள்ளிரவில் அவர்களின் வீடுகளுக்குள் புகுந்து ஆண்களை வெளியே இழுத்து வந்து அடித்து உதைத்து துன்புறுத்தியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் நிலையங்களுக்கு இழுத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் தடுத்து வைத்து துன்புறுத்தி வருகின்றனர். இந்த விவரங்கள் அனைத்தும் அங்கு பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து எமக்குத் தெரிவிக்கப்பட்ட செய்தியாகும். இதனை சில‌ இலங்கை ஊடகங்களும் செய்திகளாக வெளியிட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் மார்பகங்கள் அறுக்கப்படுவது, பெண்களின் இரத்தத்தை எடுத்துச் சென்று யாகக் குண்டத்தில் ஊற்றுவதாக கூறப்படும் குற்றச்சாற்றுகளை மறுப்பதாகவும் இப்படிப்பட்ட குற்றச்செயல்களுக்கு எதிராக மக்கள் போராடினால் அவர்களை பயங்கரவாதிகள் என்று முடிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்நாட்டு இராணுவச் செயலர் கோத்தபய ராஜபக்ச மிரட்டியுள்ளார்.ஆனால், ஒரு மாத காலத்திற்கும் மேலாக இப்படி கிரீஸைத் தடவிக்கொண்டு, தமிழ்ப் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களைச் செய்பவர்கள் யார் என்பதை தெளிவுபடுத்தவில்லை. இதிலிருந்து இந்தக் குற்றப்பின்னணியில் சிங்கள இராணுவமே ஈடுபட்டு வருகிறது என்பது தெரிகிறது.இலங்கையில் போர் முடிந்து அங்கு அமைதி நிலவுவதாக இலங்கை அரசு கூறுகிறது. ஆனால், அங்கு தமிழ்ப் பெண்களைக் குறிவைத்து தொடர்ந்து பாலியல் வன்முறை நடத்தப்படுகிறது.  இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் இந்திய மத்திய அரசு இதையெல்லாம் தெரிந்தும் கண்டுகொள்வதில்லை. இப்படிப்பட்ட நிகழ்வுகள் தொடருமானால், இங்குள்ள தமிழர்கள் மத்தியிலும் கொந்தளிப்பு ஏற்படும்.ஒவ்வொரு நாளும் ஈழத்தில் தமிழினம் செத்து செத்து பிழைத்துக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட கொடூரமான வன்முறைகளை ஐ.நா.அவையின் பார்வைக்கும், பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளிடமும் தமிழக முதல்வர் அவர்கள் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். நாடாளுமன்ற மாநிலங்களவையில் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து இன்று நடைபெறவுள்ள விவாதத்தில் கலந்துகொள்ளும் தமிழ்நாட்டு உறுப்பினர்கள், தமிழ்ப் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை எடுத்துக் கூறிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.