இலங்கை அரசுக்கு நிதியுதவிகள் ரத்து: அமெரிக்க நாடாளுமன்றக் குழு ஒப்புதல்

20

இலங்கை அரசுக்கு நிதியுதவிகள் ரத்து: அமெரிக்க நாடாளுமன்றக் குழு ஒப்புதல்

தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களில் ஈடுபட்ட இலங்கை அரசுக்கு, அமெரிக்காவின் அனைத்து நிதி உதவிகளையும் தடை செய்வதற்கு, அந்நாட்டின் நாடாளுமன்றக் குழு ஒப்புதல் அளித்தது.

கடந்த 2009-ல் நிகழ்ந்த இறுதிக்கட்ட போரின் போது இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களுக்கு இலங்கை அரசு பொறுப்பேற்று, விளக்கம் அளிக்கத் தவறினால், அந்நாட்டுக்கு வழங்கப்படும் அனைத்து நிதி உதவிகளையும் அமெரிக்க அரசு நிறுத்த வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளி விவகாரக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவரும், செல்வாக்கு மிகுந்தவருமான ஹாவர்ட் பெர்மென் கொண்டு வந்த இந்தத் தீர்மானம், குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த 2009-ம் ஆண்டு இலங்கையில் நடந்த இறுதிகட்டப் போரில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை அந்நாட்டு ராணுவம் கொன்று குவித்தது.

இந்த போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென்று ஐ.நா. பொதுச் செயலர் நியமித்திருந்த விசாரணைக் குழு வலியுறுத்தியது. ஆனால், இதனை இலங்கை அரசு ஏற்கவில்லை. இதனால் சர்வதேச அளவில் இலங்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில், போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தாத இலங்கை அரசுக்கு நிதியுதவிகளையும் தடை செய்ய அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளியுறவு விவகாரங்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

அதேநேரத்தில், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் ஜனநாயக கட்சியின் மூத்த உறுப்பினர் ஹாவர்ட் பெர்மென் தலைமையிலான இக்குழு மனிதநேய உதவிகளுக்கு மட்டும் நிதியுதவி அளிப்பது என தீர்மானித்துள்ளது.

போர்க் குற்றங்கள் குறித்து உரிய விசாரணை நடத்தினால், அமெரிக்கா தனது நிதியுதவியை தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையில் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றும், போரின் போது காணாமல் போனவர்கள் குறித்து தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்றும் அமெரிக்க நாடாளுமன்றக் குழு தனது தீர்மானத்தில் வலியுறுத்தியுள்ளது.

மேலும், இலங்கையில் பத்திரிகை சுதந்திர நிலையை மேம்படுத்துவது, அவசர நிலைப் போக்கினை முடிவுக்குக் கொண்டு வருவது உள்ளிட்ட நடவடிக்கைகளை ராஜபக்ஷே அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

2010-ம் நிதியாண்டில் இலங்கை அரசுக்கு 13 மில்லியன் டாலர்கள் அளவில் உதவித் தொகை அளிப்பதற்கு, அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு முகமை பரிந்துரை செய்திருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த தீர்மானத்தை சட்ட மசோதாவாக்கி நடைமுறைப்படுத்துவதற்கு சில காலம் எடுத்துக் கொண்டாலும் கூட, சர்வதேச அளவில் இலங்கைக்கு மேலும் நெருக்குதல் வலுவாவதற்கு இதுவே வழிவகுக்கும் என்பது தெளிவு.

அண்மையில் சேனல் 4 வெளியிடப்பட்ட ‘இலங்கைக் கொலைக்களங்கள்’ என்ற ஆவணப் படம், ராஜபக்ஷே அரசின் போர்க் குற்றங்களை அம்பலப்படுத்தும் முக்கிய ஆதரமானது.

இதன் தொடர்ச்சியாக, போர்க் குற்ற விசாரணை தேவை என இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இலங்கையை வலியுறுத்தி நெருக்குதல் தந்து வந்தன.

நன்றி

விகடன்

இந்தச் சூழலில், இலங்கை அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், அமெரிக்க நாடாளுமன்றக் குழு தீர்மானம் நிறைவேற்றியிருப்பது கவனத்துக்குரியது.

முந்தைய செய்திஊட்டியில் சிறிலங்க படையினருக்குப் பயிற்சி – நாம் தமிழர் எதிர்ப்பு, மறியல் போராட்டம்
அடுத்த செய்திசிங்கள இனவெறி இராணுவத்தைச் சேர்ந்த 25 படையினருக்கு குன்னூரில் பயிற்சி அளிக்கப்படுவதை கண்டித்து 350 கட்சியினர் கைது