இது மன்மோகன்களின் காலம்! – விகடன்.

29

மீண்டும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் ஆகிறார் பான் கி மூன். அமெரிக்காவின் முழு ஆதரவை அதிபர் ஒபாமா அறிவித்துவிட்டார். ரஷ்யாவும் அறிவிக்கத் தயாராகிவிட்டது. ஐ.நா. பாதுகாப்பு அவையின் ஏனைய நிரந்தர உறுப்பு நாடுகள் யாவும் ஆதரவு தெரிவித்துவிட்டன. பெரும்பான்மை ஆசிய நாடுகள் மூன் மீண்டும் பதவிக்கு வருவதற்கு வரவேற்பு கீதம் வாசித்துவிட்டன. சீனாவும் ஆதரிக்கிறது; இந்தியாவும் ஆதரிக்கிறது. வடகொரியாவும் ஆதரிக்கிறது; இலங்கையும் ஆதரிக்கிறது. ஒட்டுமொத்த உலகின் வெளியுறவுக் கொள்கையும் எப்படி ஒன்றானது?

ஒபாமா, உலகின் மிக மோசமான இனப் படுகொலைக் களமான சூடான், சுய நிர்ணயச் சூழலுக்கு வந்ததை மூனின் சாதனையாகச் சொல்கிறார். ஹைதி நிலநடுக்கப் பாதிப்பின்போது, ஐ.நா. சபை மேற்கொண்ட மறு சீரமைப்புப் பணிகளை முக்கியமானதாகச் சுட்டிக்காட்டுகிறார். உலகம் ஜனநாயகப் பாதையில் பயணிக்க மூனின் சேவை மகத்தானது என்கிறார். சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு அவர் எடுத்துக்கொண்ட அக்கறை அளப்பரியது என்கிறார்.

உலகின் குரூரமான இனப் படுகொலைகளில் ஒன்றான இலங்கை இறுதிப் போரில், மூனுக்குத் தெரிந்தே எல்லாமும் நடந்தன. இன்றைக்கு யுத்தக் குற்றங்கள் என்று வர்ணிக்கப்படும் சரணடைவுப் படுகொலைகளின் பின்னணியையும்கூட அறிந்தவர்தான் மூன். இன்றைக்கு யுத்தக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட நிலையிலும்கூட, ”யுத்தக் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு இலங்கை அரசின் உறுதியான செயல்பாடு ஒன்றையே சர்வதேச சமூகம் எதிர்பார்க்கிறது. ஐக்கிய நாடுகள் சபையைப் பொறுத்த அளவில், யுத்த காலச் செயல்பாடுகளை மீளாய்வு மட்டுமே என்னால் செய்ய முடியும்” என்றுதான் மூனால் சொல்ல முடிகிறது!

2008-ல் 37 நாடுகளில் உணவுக் கலவரம் வெடித்தபோது கையைப் பிசைந்துகொண்டு அறிக்கைகளை வெளியிட்டார் மூன். மத்தியக் கிழக்கு புரட்சியில் ஒவ்வொரு நாட்டிலும் பல நூறு உயிர்கள் பறிபோகும்போதும் கவலைகளை மட்டுமே மூனால் பகிர்ந்துகொள்ள முடிகிறது. குறைந்தபட்சம் வட கொரியா – தென் கொரியா விவகாரத் தில்கூட இடையில் இருந்த பதற்றம் அற்ற சூழலை மீண்டும் கொண்டுவர முடியவில்லை அவரால். புவி வெப்பமாதலை முன்னிறுத்தி, பெரும் கோஷத்துடன் கூடிய கோபன்ஹேகன் மாநாட்டின் படுதோல்வியும் மூனின் சாதனைப் பட்டியலிலேயே சேரும். அப்புறம் எப்படி செயலற்றவரை உலகம் ஒரே குரலில் வரவேற்கிறது? பான் கி மூன் ராஜதந்திரத் துறையில் முதன்முதலாகப் பணியாற்றிய வெளிநாடு இந்தியா. புரியவில்லையா? இது மன்மோகன்களின் காலம்!

நன்றி

விகடன்

முந்தைய செய்திதனி ஈழம் ஒன்றே இலங்கை பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு என 64 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்
அடுத்த செய்திஇலங்கை நிறுவனங்கள் சென்னை இல்ல உள்வடிவமைப்பு மற்றும் அலங்காரப் பொருட்கள் கண்காட்சியில் பங்கு பெற அனுமதிக்கக் கூடாது : சீமான்