இலங்கை நிறுவனங்கள் சென்னை இல்ல உள்வடிவமைப்பு மற்றும் அலங்காரப் பொருட்கள் கண்காட்சியில் பங்கு பெற அனுமதிக்கக் கூடாது : சீமான்

16
சென்னை வர்த்தக மையத்தில் வரும் 23 முதல் 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இல்ல உள்வடிவமைப்பு மற்றும் அலங்காரப் பொருட்கள் கண்காட்சியில் இலங்கையைச் சேர்ந்த நிறுவனங்கள் எதையும் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என்று கோரி நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை:


இலங்கை நிறுவனங்கள் சென்னை கண்காட்சியில் பங்கு பெற அனுமதிக்கக் கூடாது: சீமான்


சென்னை நந்தம்பாக்கத்தில் தொழில், வணிக கண்காட்சிகள் நடத்தப்படும் சென்னை வர்த்தக மையத்தில் வரும் 23ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை இல்ல உள்வடிவமைப்பு மற்றும் அலங்காரப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்கும் கண்காட்சி (21st Edition of India’s Premier Exhibition on Interior Design, Furniture, Furnishing and Décor Accessories) நடைபெறவுள்ளது. ஜாக் கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் எனும் நிறுவனம் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்கிறது.



21வது ஆண்டாக நடைபெறும் இந்த பன்னாட்டு கண்காட்சியில்  கிழக்காசிய நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன என்று கண்காட்சியின் ஏற்பாட்டாளர்கள் விநியோகித்த துண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைப் போரில் ஒன்றரை இலட்சம் மக்களைக் கொன்று குவித்த அந்நாட்டு அரசுத் தலைவர்களை போர்க் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்றும், ஈழத் தமிழர்களுக்கு சம உரிமை அளிக்க மறுத்து வரும் அந்நாட்டிற்கு எதிராக பொருளாதார தடையை கடைபிடிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், தமிழ் மண்ணில் நடைபெறும் கண்காட்சியில் இலங்கை நிறுவனங்களின் பங்கேற்பை அனுமதிப்பது என்பது தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தையும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் அவமதிப்பதாகும்.



எனவே, சென்னை கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் இலங்கையில் இருந்து வரும் எந்த நிறுவனத்தையும் சென்னைக் கண்காட்சியில் பங்கு பெற அனுமதிக்கக் கூடாது. இலங்கையில் தயாரிக்கப்பட்ட எந்த பொருட்களும் இந்தக் கண்காட்சியில் இடம்பெறச்செய்யவும் அனுமதிக்கக் கூடாது என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.


எங்களின் வேண்டுகோளையும் மீறி, இக்கண்காட்சியில் இலங்கை நிறுவனங்களோ அல்லது பொருட்களோ பங்கு பெற அனுமதிக்கப்பட்டால் அதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி போராடும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
முந்தைய செய்திஇது மன்மோகன்களின் காலம்! – விகடன்.
அடுத்த செய்திஉலக தமிழர் சார்பாக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து உசிலை நாம் தமிழர் கட்சியினர் ஒட்டியுள்ள சுவரொட்டி.