சிறீலங்கா கிரிக்கெட் புறக்கணிப்புப் போராட்டத்தில் பங்குபெறுவோம் – பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு.

30

சிறீலங்காவிற்கும் இங்கிலாந்திற்குமிடையில் எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு பிரிஸ்டல் கவுன்றி (Gloucestershire County Cricket Club, Nevil Rd, Bristol, BS7 9EJ) மைதானத்தில் நடைபெறவிருக்கும் 20–20 கிரிக்கெட் விளையாட்டின்போது, பிரித்தானிய தமிழர் இளையோர் அமைப்பினால் மேற்கோள்ளப்படவிருக்கும் ‘சிறீலங்கா கிரிக்கெட் புறக்கணிப்பு’ போராட்டத்தில் பங்குபற்றி போராட்டம் முழு வெற்றி பெறுவதற்கு ஆதரவளிக்குமாறு, பிரித்தானிய தமிழர் பேரவை தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடந்த மே மாதம் இங்கிலாந்தின் பல்வேறு மைதானங்களிலும் சிறிலங்காவிற்கும் இங்கிலாந்திற்குமிடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளின்போது தமிழ் இளையோர் அமைப்பு தொடர்ச்சியாக சிறீலங்கா கிரிக்கெட் புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தியிருந்தது.

இந்தப் போராட்டங்களில் கலந்து கொண்ட தமிழ் மக்கள், சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழ் மக்களுக்கெதிரான இன அழிப்பு பற்றிய தகவல்களை பார்வையாளர்களுக்கு எடுத்துக்கூறியும், துண்டுப் பிரசுரங்களை வழங்கியும் சிறிலங்காவின் கிரிக்கெட்டை புறக்கணிக்குமாறு கோரி வருகின்றமை பல்வேறு மட்டங்களிலும் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.

இந்த நிலையில், எதிர்வரும் 25ஆம் திகதி பிரிஸ்டலில் (Bristol) நடைபெறவிருக்கும் முதலாவது 20-20 போட்டியின்போது ஏராளமான பார்வையாளர்கள் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுவதால், அன்றைய தினம் நடைபெறவிருக்கும் ‘சிறீலங்கா கிரிகெட் புறக்கணிப்பு’ போராட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் தமிழ் மக்கள் பங்குபற்ற வேண்டும் என்று பிரித்தானிய தமிழர் பேரவை கேட்டுக்கொள்கின்றது.

சனல் 4 தொலைக்காட்சியில் ‘சிறீலங்காவின் கொலைக்களங்கள்’ எனும் மிகக் கொடூரமான ஆவணப்படம் வெளியாகி அனைத்து இன மக்களும் சிறிலங்கா அரசின் இன அழிப்பினை அறிந்திருக்கும் இந்த வேளையில், இந்தப் போட்டியில், போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள அரசாங்கமான மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சனத் ஜெயசூரியாவும் விளையாட இருப்பதால், அன்றைய போராட்டம் முக்கியம் பெறுகின்றது.

தென்னாபிரிக்காவின் முன்னைய நிறவெறி அரசாங்கத்திற்கெதிரான  ஒரு நடவடிக்கையாக, அந்நாட்டின் கிரிக்கெட் மற்றும் ரக்பி அணிகளுக்கு சர்வதேச ரீதியில் 1970  மற்றும் 1980 களில் தடை விதிக்கப்பட்டதுடன், அந்நாடு ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதற்கும் தடை விதிக்கப்பட்டது.

அதேபோல், சிம்பாவே அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கெதிரான ஒரு நடவடிக்கையாக, அந்நாட்டின் கிரிக்கெட் அணி இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் செய்வற்கெதிரான ஒரு தடையை 2008 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசாங்கம் விதித்திருந்தது.

சிறீலங்கா அரசாங்கம் அதன் மீதான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச ரீதியிலான சுயாதீனமான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்படும்வரை சர்வதேச ரீதியிலான சகல விளையாட்டுப் போட்டிகளிலும் சிறீலங்கா பங்குபற்றுவதை தடை விதிப்பதற்கு, அழுத்தம் கொடுக்கும் போராட்டங்களை தமிழ் மக்கள் சர்வதேச அளவில் இனிவரும் காலங்களில் தீவிரப்படுத்த வேண்டும்.

இதன் ஒரு பகுதியாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை (ECB), சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC), சர்வதேச விளையாட்டு வீரர்கள், உள்ளுர்  விளையாட்டுக் கழகங்கள், ஊடகங்கள், கிரிக்கெட் கவுன்டிஸ் (Cricket county), உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள்  ஆகியோரிற்கு இலங்கையின் இன அழிப்பு தொடர்பாகவும், தாய்நாட்டில் தமிழர்களின் இன்றைய அவல நிலை தொடர்பாகவும் கடிதங்கள் எழுதி, ஆவணங்களை அனுப்பி அவர்கள் மூலமாக சர்வதேச விளையாட்டு அரங்குகளில் இருந்து சிறிலங்காவை தடைசெய்ய உதவுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள் விடுக்கின்றது.

இப்புறக்கணிப்புப் போராட்டத்தில் பங்குபற்றுவதற்காக பிரித்தானியாவின் சகல பகுதிகளில் இருந்தும் போக்குவரத்து ஒழுங்குகளை தமிழ் இளையோர் அமைப்பு செய்துள்ளதையும், பிரித்தானிய தமிழர் பேரவை இங்கு சுட்டிக்காட்டுகின்றது.

தொடர்புகளுக்கு :- பிரித்தானிய தமிழர் பேரவை
தொலைபேசி:     020 8808 0465      078 1448 4938

முந்தைய செய்தி23 மீனவர்களை விடுதலை செய்யாவிடில் மீனவர்களுடன் இணைந்து போராட்டம் – சீமான்.
அடுத்த செய்தி[காணொளி, படங்கள் இணைப்பு] திருவள்ளூர் மணவாளநகர் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக சேனல் 4 போர்குற்ற ஆவணம் பொதுமக்கள் முன்னிலையில் திரை இடப்பட்டது.