சிங்கள இனவெறி அரசின் தமிழின அழிப்பினால் வடக்கில் காணாமல்போன மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள்

19

சிறீலங்கா அரசு அண்மையில் வடக்கில் மேற்கொண்ட வாக்காளர் பதிவுகளில் நீக்கப்பட்ட 331,214 தமிழர்களில் பெருமளவானோர் வன்னிப் போரில் கொல்லப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

2009 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 816,005 ஆகும். ஆனால் இந்த வருடம் சிறீலங்கா அரசு மேற்கொண்ட வாக்காளர் பதிவுகளில் 481,791 பேரின் விபரங்களே உள்ளதுடன், 331,214 பேர் வாக்காளர் பதிவுகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை யாழ் மாவட்டத்தின் சிறிலங்கா தேர்தல் திணைக்கள உதவி ஆணையாளர் எஸ் கருணாநிதி உறுதிப்படுத்தியுள்ளார்.

வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளாதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளபோதும், அவர்களில் பெரும்பாலோனோர் சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் இனஅழிப்பில் கொல்லப்பட்டவர்கள் என யாழ் தகவல்கள் தெரிவித்துள்ளன.

75,000 இற்கு மேற்பட்ட மக்கள் வன்னியில் கொல்லப்பட்டதுடன், வடக்கில் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதியிலும் பல ஆயிரம் மக்களை சிறீலங்கா படையினர் பலவந்தமாக கடத்திச் சென்று படுகொலை செய்துள்ளனர்.

எனவே சிறீலங்கா அரசு அண்மையில் மேற்கொண்ட புதிய வாக்காளர் பதிவுகளில் இருந்து நீக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் நாலாவது ஈழப்போரில் கொல்லப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, எதிர்வரும் ஜுலை 23 ஆம் நாள் சிறீலங்கா அரசு வடக்கில் உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

ஆனால் 1983 ஆம் ஆண்டு ஈழத்தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசும், சிங்கள காடையர்களும் இணைந்து மேற்கொண்ட தாக்குதல்களில் பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டும், பல இலட்சம் மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தும், பல கோடி ரூபாய்கள் பெறுமதியான தமிழ் மக்களின் சொத்துக்கள் சிங்களவர்களால் சூறையாடப்பட்ட நாளும் ஜுலை 23 ஆகும்.

இந்த நாளை தமிழ் மக்கள் கறுப்பு ஜுலை என நினைவுகூர்ந்து வருகையில் சிறீலங்கா அரசு திட்டமிட்ட வகையில் இந்த நாளில் தேர்தலை நடத்தத்திட்டமிட்டுள்ளது.

நன்றி:  ஈழம் ஈ நியூஸ்.

முந்தைய செய்தி330,000 voters ‘missing’ in Jaffna, Ki’linochchi electoral list after 2009 war of genocide
அடுத்த செய்திகோத்தபாய ராஜபக்சேவிற்கு ஜேர்மன் தூதுவர் எச்சரிக்கை