எரிபொருள் விலையேற்றம் ஏன் என்று விளக்கி மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: சீமான்

47

டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளை உயர்த்தியது தொடர்பாக மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கோரி நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

எரிபொருள் விலையேற்றம் ஏன் என்று விளக்கி மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்:


சீமான் மத்திய அரசு டீசல்,சமையல் எரிவாய்,மண்ணேணெய் போன்றவற்றின் விலையைல் உர்த்தியமைக்கு நாம் தமிழர் கட்சி தன் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது. இந்த விலையேற்றத்தை திரும்பப் பெற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது.

பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றத்தையும், அதனால் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பையும் சுட்டிக்காட்டி மீண்டும் ஒரு முறை டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளை மத்திய அரசு கடுமையாக உயர்த்தியுள்ளது.

கடந்த ஆண்டு முதல் பெட்ரோல் விலை நிர்ணயக் கட்டுப்பாட்டை அரசு விலக்கிக்கொண்டதால், இடைப்பட்ட ஒராண்டுக் காலத்தில் 10 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு அதன் விலை லிட்டருக்கு ரூ.70 ஆக உயர்ந்துள்ளது.

இந்த விலையேற்றத்தால் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.21,000 கோடி வருவாய் கிட்டும். அது மட்டுமின்றி, எண்ணெய் நிறுவனங்களின் ‘இழப்பை’ ஈடுகட்ட, கச்சா மீதான 5% சுங்கத் தீர்வையை மத்திய அரசு இரத்து செய்துள்ளது. டீசல் மீதான சுங்கத் தீர்வையை 7.5% இருந்து 2.5% ஆக குறைத்துள்ளது. டீசல் மீதான உற்பத்தித் தீர்வையை லிட்டருக்கு ரூ.4.60 ஆக இருந்ததை ரூ.2.00 ஆக குறைத்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.49,000 கோடி இழப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த வரி விலக்கின் பயனை நுகர்வோருக்கு அளிக்காததால், எண்ணெய் நிறுவனங்களின் இலாபம் ஒட்டுமொத்தமாக (ரூ.21,000 + ரூ.49,000) ரூ.70,000 கோடியாக அதிகரிக்கிறது. இதற்குப் பிறகும் இந்த நிதியாண்டில் அவைகளின் இழப்பு ரூ.1,01,000 கோடியாக இருக்கும் என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி கூறியுள்ளார்.

மத்திய அரசு கூறும் கச்சா விலையேற்றம், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஆகிய இரண்டு காரணங்களுமே ஆழ்ந்து நோக்கினால் எவ்வளவு பெரிய மோசடி என்பது விளங்கும்..

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் நடைபெற்ற நிலையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலைகளை உயர்த்தினால் மக்களின் கோபத்துக்கு ஆளாக வேண்டியது வரும் என்பதால் தேர்தல் முடிந்த பின் விலையேற்றம் செய்தது மத்திய அரசு. பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த  அனுமதி தந்தது.

இந்த விலையேற்றத்தைச் செய்தபோது பன்னாட்டு்ச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீ்ப்பாய்க்கு 110 டாலராக இருந்தது. அதை வைத்துக் கணக்கிட்டே எண்ணெய் நிறுவனங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.458 கோடி இழப்பு ஏற்படுகிறது என்றும், அது இந்த நிதியாண்டு முழுவதும் கணக்கிட்டால் ஒட்டுமொத்த இழப்பு ரூ.1,67,000 கோடியாக ஆகும் என்றும் கூறி செய்திகளைப் பரப்பியது. ஆனால் இன்றைக்கு டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளை மத்திய அரசு உயர்த்திபோது, பன்னாட்டுச் சந்தையில் கச்சாவின் விலை 91.23 டாலராக குறைந்துள்ளது. ஆயினும் அதே இழப்புக் கணக்கை – ரூ.1,71,000 கோடியை பெட்ரோலியத் துறை அமைச்சர் கூறுகிறார்! இது மக்களை ஏமாற்றுவதாக ஆகாதா?

பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிக அதிக அளவிற்கு உயர்ந்தது 2008ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில்தான். ஒரு பீப்பாய் கச்சா விலை 145 டாலராக உயர்ந்தது. அப்போது பெட்ரோல் விலை அதிகபட்சமாக ரூ.50.60 (டெல்லி விலை) ஆக இருந்தது. டீசல் விலை ரூ.35.86 ஆக உயர்த்தப்பட்டது. அதன் பிறகு கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கி 100 டாலருக்கும் கீழ் வந்துவுடன் அதே ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதியன்று பெட்ரோல் விலை ரூ.5ம், டீசல் விலை ரூ.2ம் குறைத்தது மத்திய அரசு.

ஆனால், இப்போது கச்சா எண்ணெய் விலை 91 டாலர்கள் என்று நிலவும் போது விலையை ரூ.43.80 ஆக உயர்த்தியது ஏன்? பெட்ரோல் விலை ரூ.70க்கு உயர்ந்து பின்னரும் இன்னமும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு இழப்புதான் ஏற்படுகிறது என்றால் எப்படி? இந்த வினாக்களுக்கு மத்திய அரசு பதில் கூற வேண்டும்.

எனவே, பொது மக்களுக்கு எழும் கீழ்க்கண்ட வினாக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் புரியும்படியான ஒரு வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்:

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 91 டாலர் என்ற நிலையில், இறக்குமதி விலை, சுத்திகரிப்பு செலவு, உற்பத்தித் தீர்வை ஆகியவற்றையும் சேர்த்து பொது விநியோகத்திற்கு அளிக்கப்படும் நிலையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் அடக்க விலை எவ்வளவு?

பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுவதாக அமைச்சர் ஜெய்பால் ரெட்டி கூறியுள்ளாரே, அது உற்பத்தி விலையே கிடைக்காமல் ஆகும் இழப்பா? அல்லது மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் விற்பனை உள்ளிட்ட வரிகளையும் சேர்த்து விற்பதால் ஏற்படும் இழப்பா?

கச்சா எண்ணெய் இறக்குமதி மீது விதிக்கப்படும் சுங்கத் தீர்வை மூலமும், அவைகளை சுத்திகரிப்பு செய்தபிறகு விதிக்கப்படும் உற்பத்தித் தீர்வையின் (எக்சைஸ்) மூலமும் கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசுக்கு கிடைத்த வருவாய் எவ்வளவு?

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் மீது விற்பனை வரி விதித்து கடந்த 5 ஆண்டுகளில் மத்திய, மாநில அரசுகள் கரந்த வருவாய் எவ்வளவு?

இதற்கான பதிலை மத்திய அரசு தனது வெள்ளை அறிக்கையில் வெளியிட வேண்டும். அப்போதுதான் இந்த விலையேற்றம் யாவும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டதா? அல்லது தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு இலாபம் கிட்ட வேண்டும் என்பதற்காக விலைகள் உயர்த்தப்படுகிறதா என்பதை மக்களால் தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.

முந்தைய செய்தி[அறிவிப்பு ] தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பு பொதுக்கூட்டத்தின் காணொளி இன்று (26) காலை 9.00 மணிக்கு தமிழன் தொலைகாட்சியில் ஒளிபரப்படுகிறது
அடுத்த செய்திஇன்று மாலை மெரினாவில் நடைபெறும் தமிழினப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு நாம் தமிழர் இணையத்தில் நேரலை செய்யப்படும்