தமிழகத்தின் மண்டபம் மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களை 23 பேரை, கச்சதீவு அருகே மீன்பிடிதுகொண்டிருக்கும் போது இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மீன்வளத்துறை உதவி இயக்குநர் மார்க்கண்டேயன் கூறுகையில், “மீனவர்கள் கைது செய்ததற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களை இரவு 11 மணியளவில் கைது செய்துள்ளனர். மீனவர்களிடம் இருந்து 5 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்,” என்றார்.
இலங்கை கடற்படையினரின் பிடியில் இருந்து ஒரு படகில் தப்பி கரைக்கு வந்த மீனவர் ஒருவர் மூலம் இச்சம்பவம் குறித்த தகவல் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக இலங்கையின் மன்னார் மாவட்ட ஆட்சியர் நந்தினி தினானி கூறுகையில், தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 5 படகுகள் மன்னார் கடற்படை முகாமில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இலங்கை கடற்பகுதியில் மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் அவர்கள் கடந்த 16-ம் தேதி விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.