காணொளியை உறுதிப்படுத்தியது ஐ.நா – அடுத்த கட்ட விசாரணைக்கு அழைப்பு

28

சிறீலங்கா படையினர் மேற்கொண்ட நீதிக்குப்புறம்பான படுகொலைகள் அடங்கிய காணொளி உண்மையானது என நான்கு நிபுணர்களின் உதவியுடன் உறுதிப்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகள் சபை அனைத்துலக விசாரணைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஜெனீவாவில் நேற்று (30) ஆரம்பமாகிய ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட நீதிக்குப்புறம்பான படுகொலைகள் அடங்கிய காணொளி உண்மையானது என்ற தனது வாதத்தை முன்வைத்து ஐ.நாவின் நீதிக்குப்புறம்பான படுகொலைகள் விவகார அதிகாரி கிறிஸ்ரோப் கெயின்ஸ் உரையாற்றியிருந்தார்.

ஐந்து நிமிடங்கள் கொண்ட இந்த காணொளியில், சிறீலங்கா இராணுவத்திடம் சரணடைந்த தமிழ் இளைஞர்கள் நிர்வாணமாக இழுத்து வரப்பட்டு தலையில் சுட்டு படுகொலை செய்யும் காட்சிகள் அடங்கியிருந்தன.

ஐ.நாவின் நீதிக்குப்புறம்பான படுகொலைகள் விவகார முன்னாள் அதிகாரி பிலிப் அல்ஸ்ரன் என்பவரும் இந்த காணொளி உண்மையானது என்று முன்னர் தெரிவித்தபோதும், அதனை சிறீலங்கா அரசு நிராகரித்திருந்தது.
இந்த காணொளியை ஒரு உடல்கூற்று நிபுணர், இரண்டு காணொளி நிபுணர்கள், ஒரு துப்பாக்கி ஆயுத நிபுணர் ஆகியோர் ஆய்வு செய்து உறுதிப்படுத்தியுள்ளதாகவும், அவர்கள் சுயாதீன ஆய்வாளர்கள் எனவும் கெயின்ஸ் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட காணொளியை பிரித்தானியாவின் சனல் போர் நிறுவனம் ஒளிபரப்பியிருந்தது. இது ஒரு அப்பட்டமான போர்க்குற்றம் எனவும், வன்னியில் எவ்வளவு வன்முறைகள் இடம்பெற்றிருக்கும் என்பதை இதன் மூலம் கணிப்பிடலாம் எனவும் தெரிவித்துள்ள கெயின்ஸ், இது ஒரு முக்கியமான அனைத்துலக குற்றம், எனவே இது தொடர்பான மேலதிக விசாரணைகள் அனைத்துலக மட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற தனது பரிந்துரையையும் முன்வைத்துள்ளார்.

கெயின்ஸ் இன் இந்த நடவடிக்கை மூலம் காணொளியின் உண்மைத்தன்;மை தொடர்பில் சிறீலங்காவின் பொய்ப்பிரச்சாரம் முறியடிக்கப்பட்டுள்ளதுடன், காணொளியின் உண்மைத்தன்மை ஐ.நாவால் உறுதிப்படுத்தப்பட்டும் உள்ளது. எனவே இது தொடர்பான அனைத்துலக விசாரணைக்கு அழைப்பு விடுப்பது இலுகுவானதாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.

நன்றி : ஈழம் ஈ நியூஸ்.

முந்தைய செய்தி[படங்கள் இணைப்பு] சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம்.
அடுத்த செய்திசில்லறை வணிகர்களின் சோற்றில் மண் அள்ளிப் போடும் கொடுமையை இந்திய அரசு செய்யக் கூடாது -சீமான்