“போபால் தீர்ப்பு மறுபரிசீலனை இல்லை”
ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கக் காரணமாக இருந்த போபால் விஷவாயுக் கசிவு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றத்தின் அளவைத் தளர்த்தி, உச்சநீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் நிராகரித்துவிட்டது.
உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பு 14 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட நிலையில், இவ்வளவு காலதாமதமாக மறுஆய்வு மனு தாக்கல் செய்வதற்கான காரணம் என்ன என்பதை சிபிஐ எனப்படும் மத்தியப் புலனாய்வுத்துறையும், மத்தியப் பிரதேச அரசும் தெளிவுபடுத்தத் தவறிவிட்டதாகக் கூறி, தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா தலைமையிலான அரசியல்சாசன நீதிபதிகள் அமர்வு இன்று தீ்ர்ப்பளித்துள்ளது.
கடந்த 1996-ம் ஆண்டு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எச். அகமதி தலைமையிலான இரு நீதிபதிகள் பெஞ்ச், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு 10 ஆண்டு தண்டனை வழங்கும் இந்திய தண்டனைச் சட்டத்தில் இருந்து இரண்டு ஆண்டுகள் தண்டனை வழங்க வகை செய்யும் சட்டப்பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டது.
நீதி வழங்கப்படவில்லை என்று தொடர்ந்து போராடுகிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்அதன்படி, போபால் தலைமை ஜூடிஷியல் மாஜிஸ்திரேட், குற்றம் சாட்டப்பட்ட யூனியன் கார்பைடு இந்தியா நிறுவனத்தின் தலைவர் கேசுப் மஹிந்திரா மற்றும் 6 பேருக்கு இரண்டு ஆண்டு தண்டனை விதி்த்துத் தீர்ப்பளித்தார். அதை எதிர்த்து, சிபிஐ மற்றும் மத்தியப் பிரதேச அரசின் சார்பில் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதே நேரத்தில், ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியான விபத்துக்குக் காரணமானவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் மட்டும்தான் தண்டனை என்பது மிக மென்மையான தண்டனை என பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்புக்கள் சார்பில் கடும் எதிர்ப்புக் கிளம்பியதால், சிபிஐ மற்றும் மத்தியப் பிரதேச அரசு, உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தன.
அலட்சியப் போக்குக் காரணமாக மரணம் ஏற்படக் காரணமாக இருந்தார்கள் என்ற கடுமையான சட்டப்பிரிவை அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தும் வகையில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
யூனியன் கார்பைடு ஆலைசிபிஐ சார்பில் அரசின் தலைமை வழக்கறிஞர் வஹன்வதி, மனசாட்சியைத் தொடும் பல தகவல்களின் அடிப்படையில்தான் சிபிஐ மறுஆய்வு மனுத்தாக்கல் செய்ததாகவும், பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு நீதியை நிலைநாட்டுவது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
ஆனால், அந்தக் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
அதே நேரத்தில், இரண்டு ஆண்டு தண்டனை வழங்கி தலைமை ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருப்பது, தங்களது தீர்ப்பால் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நன்றி
பி பி சி