மீன்கள் மீது காட்டும் அக்கறையை தமிழர்கள் மீதும் காட்ட வேண்டும் – சீமான்

12

செங்கல்பட்டு முகாமில் 23 தமிழர்களும் பூந்தமல்லியில் 4 தமிழர்களும் தமிழக அரசால் அடைத்து வைக்கப் பட்டுள்ளனர்.மேற்கண்ட முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பவர்கள் குற்ற வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டும், உரிய முறையில் பிணை பெற்றும் இருக்கின்றனர். ஆனால் தமிழக அரசு அவர்களை சட்டத்திற்குப் புறம்பாக சிறப்பு முகாம் என்ற பெயரில் அங்கு அடைத்து வைத்துள்ளது.

இந்நிலையில் கங்காதரன், சந்திரகுமார், அமலன், ஜெயமோகன் ஆகிய 4 பேரும் தங்களை விடுவிக்கக் கோரி பூந்தமல்லி முகாமில் கடந்த 12 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.ஆனால் இவர்களின் கூக்குரல் இதுவரை தமிழக  அரசுக்கு எட்டவில்லை.அல்லது எட்டினாலும் ஒன்றுமே நடக்காதது போல கள்ள மவுனம் காத்து வருகிறது. நாட்டில் நடப்பது தொடர் அரசு தான்; காபந்து அரசு அல்ல.இது உலகுக்குத் தெரியும் என பத்திரிக்கைகளில் பக்கம் பக்கமாக அறிக்கை எழுதி நான் தான் இப்பொழுதும் முதல்வர் என தினமும் மக்களுக்கு  நினைவூட்டும் முதல்வர்,மக்களின் மீதான உண்மையான அக்கறையுடன் அதனைச் செயல்பாட்டில் காட்ட வேண்டும். அதனை விடுத்து நாட்டில் மின்வெட்டு,விலைவாசி உயர்வு,என ஆயிரக்கணக்கான மக்கள் பிரச்சனைகள் இருந்தாலும் அதில் கவனம் செலுத்தாமல் விரயமாக ஆயிரம் கோடி மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டுள்ள தலைமைச் செயலகத்தில் அமர்ந்து மீன்களுக்கு பொறி போட்டுக் கொண்டிருக்கிறார்.மீன்களின் உயிரின் மீது காட்டும் அக்கறையில் சிறிதளவாவது நம் அனைவரின் கண் முன்னும் சாகக் கிடக்கும் எம் சொந்தங்களின் மீது காட்ட வேண்டும்.ஆகவே உடனே தமிழக அரசு உண்ணாவிரதம் இருக்கும் பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டு அகதிகளை விடுதலை செய்ய வேண்டும்.

முந்தைய செய்திதமிழர்களுக்கு எதிராக ரஸ்யா வீட்டோவை பயன்படுத்த தயார். என்ன செய்யப்போகிறது ஐ.நா?
அடுத்த செய்தி4-5-2011 அன்று ராஜபக்சேவை போர்குற்ற விசாரணைக்கு உட்படுத்தக்கோரி பரமத்தி வேலூரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.