தமிழர்களுக்கு எதிராக ரஸ்யா வீட்டோவை பயன்படுத்த தயார். என்ன செய்யப்போகிறது ஐ.நா?

25

சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா நிபுணர் குழு முன்வைத்துள்ள அறிக்கை பாதுகாப்புச்சபையில் முன்வைக்கப்பட்டால் இலங்கைக்கு ஆதரவாக ரஸ்யா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தும் என கொழும்புக்கான ரஸ்யத் தூதுவர் விலாமிடீர் பி மிக்கலோவ் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஐ.நா சில விடயங்களை பலவந்தமாக திணிக்க முற்பட்டால் அதனை ரஸ்யா எதிர்க்கும். கடந்த மாதம் 18 ஆம் நாள் இடம்பெற்ற பாதுகாப்புச்சபை கூட்டத்தில் அறிக்கையை ஐ.நா உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கவில்லை. அவ்வாறு சமர்ப்பித்திருந்தால் நாம் அதனை எதிர்த்திருந்போம்.

அது ஐ.நாவின் உத்தியோகபூர்வ அறிக்கை அல்ல என்ற சரத்தின் அடிப்படையில் அதனை நாம் நிராகரிக்க முடியும். அதனை வெளியிடவேண்டாம் எனவும் நாம் கேட்டிருந்தோம்.

அறிக்கையாக அல்லாது, தீர்மானமாக பாதுகாப்புச்சபையில் முன்வைக்கப்பட்டால் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவது தொடர்பில் நாம் சிந்திப்போம். ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டாலும் அதனை நாம் எதிர்ப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வீட்டோ அதிகாரம் உள்ள சீனாவும் ரஸ்யாவும் இலங்கைக்கு ஆதரவாக செயல்பட தயார் என்று அறிவித்துள்ள நிலையில் தமிழர்களுக்கு நீதி வழங்க ஐ.நா சபை ஏதும் நடவடிக்கை எடுக்குமா என்பது விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கபடுகிறது.

முந்தைய செய்திதொடர்ந்து இனவெறி இலங்கை அரசுக்கு உதவும் இந்திய அரசை கண்டித்து புதுவை நாம் தமிழர் உண்ணாநிலை போராட்டம்
அடுத்த செய்திமீன்கள் மீது காட்டும் அக்கறையை தமிழர்கள் மீதும் காட்ட வேண்டும் – சீமான்