நாளை வாக்கு எண்ணிக்கை – தேர்தல் கமிஷன் ஏற்பாடுகள் தீவிரம்.

47

தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 234 தொகுதிகளின் ஓட்டுகளும் 91 மையங்களில் எண்ணப்படுகின்றன. 16 ஆயிரத்து 966 அரசு ஊழியர்கள் ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஓட்டு எண்ணும் மையங்களுக்கு செல்லும் வேட்பாளர்கள், அவர்களது ஏஜெண்டுகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

ஓட்டு எண்ணும் மையத்தில் பேனா, தீப்பெட்டி, சிகரெட் லைட்டர் செல்போன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள், ஏஜெண்டுகள் பேப்பர், சிறிய பென்சில் ஆகியவற்றை மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்படும். ஒவ்வொரு சுற்று வாரியாக ஓட்டுகள் எண்ணப்படும். ஒரு சுற்று ஓட்டு எண்ணி முடிவு அறிவிக்கப்பட்ட பின்புதான் அடுத்த சுற்று ஓட்டு எண்ணிக்கை தொடங்கும்.

காலை 9 மணிக்கு முதல் சுற்று முடிவு தெரியவரும். அதிக சுற்றுகள் உள்ள பெரிய தொகுதிகளின் முழு முடிவுகள் மாலை 4 மணிக்கு மேல் தெரியவரும். குறைந்த சுற்றுகள் உள்ள சிறிய தொகுதிகளின் முடிவுகள் பிற்பகல் 1 மணிக்கே தெரிந்து விடும். ஓட்டு எண்ணும் மையங்களில் அசம்பாவிதங்களை தடுக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழக போலீசாருடன் 45 கம்பெனி (ஒரு கம்பெனிக்கு 100 பேர்) துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவர்களில் 27 கம்பெனி வீரர்கள் ஏற்கனவே தமிழகம் வந்து அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களுக்கு சென்று பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுக்கொண்டார்கள். மீதம் உள்ள 18 கம்பெனி ராணுவ வீரர்களும் நேற்று இரவு மேற்கு வங்காளத்தில் இருந்து தமிழகத்துக்கு விமானத்தில் வந்தனர். இவர்களில் 9 கம்பெனி வீரர்கள் நள்ளிரவு 11.15 மணிக்கு சென்னை வந்தனர். அவர்கள் சென்னை மற்றும் புறநகர், காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டத்துக்கு பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். 5 கம்பெனி வீரர்கள் 3 விமானங்களில் திருச்சி வந்தனர். அவர்கள் திருச்சி மண்டலத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 4 கம்பெனி வீரர்கள் மதுரை வந்தனர். அவர்கள் தென்மாவட்டங்களுக்கு சென்று பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். இவர்கள் ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். ஓட்டு எண்ணும் மையங்களில் உள்ளேயும் வெளியும் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

சென்னையில் உள்ள 16 தொகுதி ஓட்டுக்களும் கிண்டி அண்ணா பல்கலைக்கழகம், குயின்மேரிஸ் கல்லூரி, நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி ஆகிய இடங்களில் எண்ணப்படுகின்றன. இங்கு சென்னை போலீசாருடன் துணை ராணுவ படையினரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவைக்கு 5 கம்பெனி துணை ராணுவ படையினர் கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் வந்துள்ளனர். மேலும் 2 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் சென்னையில் இருந்து கோவை மற்றும் திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதேபோல் தமிழ்நாடு முழுவதும் அனைத்து தொகுதிகளுக்கும் ஓட்டு எண்ணிக்கையை கண்காணிக்க மத்திய தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று சென்னை வந்தனர். பின்னர் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கு புறப்பட்டுச் சென்றனர். நாளை அவர்கள் ஓட்டு எண்ணிக்கையை கண்காணிப்பார்கள்.

முந்தைய செய்திவடசென்னை மாவட்டம் திருவொற்றியூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்டுள்ள சுவர் விளம்பரம்.
அடுத்த செய்தி[படங்கள் இணைப்பு] நெய்வேலி நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்டுள்ள சுவர் விளம்பரங்கள்.