தினமணி தலையங்கம்: கட்டுப்படுமா விலைவாசி?

47

விலைவாசி உயரும்போதெல்லாம் நடுத்தர வர்க்கத்தைவிட, ஏழைகளைவிட அதிகம் கவலைப்படுவது நிதி அமைச்சக அதிகாரிகளும் இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகளும்தான். அவர்களுடைய வாழ்க்கைத் தரமும் அவ்வளவுதானா என்று வியப்படைய வேண்டாம், அவர்களுடைய கவலை எல்லாம் அரசின் நிதிப் பற்றாக்குறை, வருவாய்ப் பற்றாக்குறை, வங்கிகளின் லாப விகிதம், வசூலாக வேண்டிய கடன் நிலுவை ஆகியவையும் பாதிக்கப்படுமே அதற்கு என்ன செய்வது என்பதுதான்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அவர்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் அனைத்துமே பணப்புழக்கத்தை கட்டுப்படுத்துவதுதான் என்று சொல்லிவிடலாம். இப்படிப் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தியும் விலைவாசி குறையவில்லையே என்று நமக்குக் கேட்கத் தோன்றுகிறது. ஆனால் அவர்களோ விடாமல் விலைவாசியைக் கட்டுப்படுத்த இந்த ஒரே ஒரு வழிதான் இருப்பதுபோல, இதே நடவடிக்கையைத் தொடர்ந்து எடுத்து வருகிறார்கள். தப்பித்தவறி இந்த உத்தி பலித்துவிடாதா என்கிற எதிர்பார்ப்போ என்னவோ? அப்படி குறைந்துவிடும் என்று அவர்களே கூட நம்புவதாகவும் தெரியவில்லை. அவர்களுக்குத் தெரிந்த, அவர்களால் எடுக்க முடிந்த ஒரே நடவடிக்கை அதுதான் என்பதுதான் உண்மை. மாற்று வழிகளை யோசிக்க அவர்களுக்கு நேரம் இல்லை அல்லது மனம் இல்லை – அவ்வளவுதான்.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் கடன் மீதும், வங்கிகளிடம் ரிசர்வ் வங்கி பெறும் கடன் மீதும் தரப்படும் வட்டி வீதம் அரை சதவீதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் எந்தப் பொருளின் விலையும் குறையாது. ஆனால் வங்கிகள் வழங்கும் வீட்டுக்கடன், மோட்டார் வாகனக் கடன், கைச் செலவுகளுக்கான கடன், இதர வகைக் கடன் ஆகியவற்றின் மீதான வட்டி வீதம் இதே அளவுக்கு உயரும்.

நடப்பு நிதியாண்டில் மொத்தவிலை குறியீட்டெண் உயர்ந்த போதெல்லாம் வட்டிவீதமும் இப்படி 9 முறை உயர்த்தப்பட்டிருக்கிறது. இதை ரிசர்வ் வங்கியின் சாதனை என்றே கூறலாம்!

சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலியத்தின் விலை உயர்ந்தபோதெல்லாம் அரசுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடுமையான நஷ்டம் அடைந்து திவாலாகிவிடும் என்பதைப்போன்ற பிரமையை ஊட்டி விற்பனை விலையை இரவோடு இரவாக உயர்த்த உதவுகிறது அரசு. கடைசியாக லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தியது.

இதனால் பஸ், ரயில், போக்குவரத்துக் கட்டணங்கள் லாரி வாடகை, சரக்குப் போக்குவரத்துக் கட்டணங்கள் அதே வேகத்தில் உயரும் என்பது மத்திய அரசுக்குத் தெரியாததல்ல. இந்தச் சுமையை மக்கள் தாங்கித்தான் ஆக வேண்டும் என்ற முடிவுக்கு அது என்றைக்கோ வந்துவிட்டது.

கோதுமை, அரிசி, பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள், சிறு தானியம், சர்க்கரை, பழங்கள், காய்கறிகள் போன்றவற்றின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. தானியங்களைப் பொறுத்தவரையில் விளைச்சல் குறைவு ஒரு காரணம் என்றாலும் அரசு தன்னுடைய திறந்தவெளிக் கிடங்கிலும் மூடிய கிடங்குகளிலும் உள்ள கையிருப்பை உரிய நேரத்தில் பொது விநியோகத்துக்குத் திறந்துவிடாததும் விலைவாசி உயர முக்கியக் காரணம்.

கடந்த சில ஆண்டுகளாகவே அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பண்டங்களை முன்பேர வர்த்தகம் மூலம் விற்பதால் அவற்றின் விலையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. உள்நாட்டில் அரிசி, கோதுமை எவ்வளவு தேவைப்படுகிறது, எவ்வளவு விளைந்திருக்கிறது, எவ்வளவு கையிருப்பில் இருக்கிறது, பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறதா என்றெல்லாம் கணக்குப் பார்க்க முடியாதபடி இந்த முன்பேர வர்த்தகம் தடுத்துவிடுகிறது. எனவே செயற்கையாகவே விலை ஏற்றப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலையைப் பொறுத்தவரையில் மத்திய அரசு விதிக்கும் உற்பத்தி (கலால்) வரி, மாநிலங்கள் விதிக்கும் விற்பனை வரி, செஸ், சாலை மேம்பாட்டு வரி போன்றவற்றை விலக்கினால் இப்போதுள்ள நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.33 முதல் ரூ.34 வரையில்தான் ஆகும் என்று பொருளாதார நிபுணர் கே.கே. ஜெயின் சுட்டிக்காட்டுகிறார். ஆனால் மக்கள் இதைப்போல இரு மடங்கு விலையைத் தந்து வாங்குகின்றனர்.

மாநில அரசுகள் தங்களுடைய வருவாயைப் பெருக்கித்தரும் காமதேனுவாக பெட்ரோல், டீசலைக் கருதுவதால் அவற்றின் விலை உயரும்போது ஒப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. இவ்விரு பண்டங்கள் மீதான வரித் தொகை அவர்களுக்கு வசூலிக்கும் செலவுகூட இல்லாமல் “மடியில் விழுந்த மாங்கனி’யாக எளிதாகக் கிடைத்துவிடுகிறது.

இரு ஆண்டுகளுக்கு முன்னால் உலக அளவில் வங்கிகளில் டெபாசிட்டுகளுக்குக் கிடைக்கும் வட்டி இந்தியாவில் அதிகம் என்பதால் வளர்ந்த நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் குறுகிய காலத்துக்குத் தங்களுடைய நிறுவனங்கள் மூலம் இந்திய வங்கிகளில் முதலீடு செய்யத் தொடங்கினர்.

வங்கிகள் கடன்களுக்கான வட்டி வீதத்தை அதிகரித்தால் பணவீக்க விகிதம் மேலும் அதிகரிக்கும் என்பதே உண்மை. 1990-களில் நம் நாட்டிலேயே வங்கிகள் வசூலித்த வட்டி வீதம் 18% முதல் 20% வரையில்கூட இருந்தன. வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக் காலத்தில்தான் வீட்டுக்கடன் வட்டி கூட கணிசமாகக் குறைக்கப்பட்டது. வாடிக்கையாளர்களுக்கு தவணைகளைக் குறைக்கவா, வட்டியைக் குறைக்கவா என்று எல்.ஐ.சி. போன்ற அரசுத்துறை நிறுவனங்கள் கடிதம் எழுதி களிப்பில் ஆழ்த்தின. அப்போதுதான் ரியல் எஸ்டேட் துறையும் வளர்ச்சி பெற்றது. வட்டிவீதம் 6% முதல் 7% வரை குறைக்கப்பட்டபோது பணவீக்க விகிதமும் அதே அளவுக்குக் குறைந்தது. அந்தப் பாடங்களை மறந்துவிட்டு வட்டி வீதத்தை மட்டும் அதிகப்படுத்துவதால் பயன் இல்லை என்பதை ரிசர்வ் வங்கி ஆழ்ந்து பரிசீலித்தால் நல்லது.

விலைவாசியைக் கட்டுப்படுத்த தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய புத்திசாலித்தனமான நடவடிக்கைகள்தான் தேவையே தவிர, சுலப வழிகள் எந்தப் பயனும் அளித்துவிடாது. இது நிதியமைச்சகத்துக்கும் ரிசர்வ் வங்கிக்கும் தெரியாதா என்ன?

நன்றி

தினமணி